நடராசா லோகதயாளன்
இலங்கையில் மிகவும் கொடூரமாக நடைபெற்று 2009 ஆம் அண்டு மே மாதம் ரத்தக்களறியுடன் முடிவடைந்த யுத்தம் இன்றளவும் பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது. அந்த யுத்தம் தொடர்பில் சில அடிப்படை கேள்விகள் முதல் மிகவும் சிக்கலான பல கேள்விகள் இதிலுள்ளன.
ஈவு இரக்கமின்றி மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டதற்கு அப்பாற்பட்டு அவர்களது உடமைகளும் பறி போயின. தமது வாழ்வாதரத்திற்காக மக்கள் வைத்து பராமரித்து வந்த கால்நடைகளும் தனிப்பட்ட தேவைகளுக்கான உபகரணங்கள், வாகனங்கள், தங்க நகைகள் என்று ஏராளமான பொருட்களை போர் வலயத்தில் விட்டுவிட்டு உயிரை மட்டுமே பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் மக்கள் சிதறி ஓடியது வரலாறு.
இதில் ஒரு கேள்விக்காவது இப்போது விடை கிடைக்கும் சாத்தியம் உள்ளதாகத் தெரிகிறது. அந்த விடை போர்ப் பகுதியிலிருந்து காணாமல் போன ஒரு மோட்டார் சைக்கிள் மூலம் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இறுதி போரின்போது முள்ளிவாய்க்காலில் மோட்டார் சைக்கிளை இழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு நேற்று காலி நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் வசிக்கும் ஒருவரால் இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்காலில் விடப்பட்ட மோட்டார் சைக்கிள் படையினரின் பிடியில் இருந்து மீண்டும் உரிமையாளரிடம் கையளிக்காது காணமல்போயிருந்த்து.
இவ்வாறு போர்க் காலத்தில் பறிபோன மோட்டார் சைக்கிளை உரிமையாளர் நீண்ட காலம் தேடியும்கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 14 ஆண்டுகளின் பின்பு கடத்தல் சம்பவம் ஒன்றுடன் இந்த மோட்டார் சைக்கிள் தொடர்புபட்டு மீட்கப்பட்டுள்ளதால் உரிமையாளரை வெள்ளிக்கிழமை-8 ஆம் திகதி நீநிமன்றில் ஆயராகுமாறு காலி நீதிமன்றம் மோட்டார் சைக்கில் உரிமையாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்களால் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட பல நூறு வாகனங்கள் படையினரின் துணையுடன் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டதான குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது அந்த வாகனம் எப்படி காலிக்கு வந்தது, தற்போது அதன் உரிமையாளர் யார், அது முறையாக பதிவு மாற்றம் செய்யப்பட்டதா போன்ற பல கேள்விகள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த வழக்கு முக்கியமான ஒன்றாக இருக்கக்கூடும் என்றும் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.