கதிரோட்டம்: 08-12-2023
“தமிழர்கள் பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. சிங்கள மக்களின் உண்மையான நண்பர்களாகவே வாழ விரும்புகின்றார்கள் அத்துடன் தமிழ் மக்கள் பௌத்தத்திற்கு எதிரானவர்களும் அல்லர்.’ இவ்வாறு நமது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இலங்கைப் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தெரிவித்த கருத்துக்கள் எத்தன சிங்கள பௌத்த வெறியர்களுக்கு மனங்களில் தெளிவை ஏற்படுத்தியிருக்கும் என்பதைபற்றி எண்ணிக் கொண்டிருக்கும் போது அவர் விடுதலைப் புலிகள் ‘ஆட்சிக் காலத்தில’ அவர்கள் எவ்வளவு தெளிவான இரக்க சிந்தனையோடும் அரசியல் நேர்மையையும் கடைப்பிடித்தார்கள் என்பதைக் காட்டும் சில காட்சிகள் எமது மனத் திரையில் ஓடின.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தனது உரையின் கருப்பொருளானது. இனவாதப் போக்குள்ள சிங்கள பௌத்த அங்கத்தவர்களுக்கு மாத்திரமல்ல தீவிர மதவாதப் போக்கு கொண்ட ரவுப் ஹக்கீம் போன்ற இஸ்லாமிய கடும் போக்கு கொண்ட அரசியல்வாதிகளையும் சிந்திக்வைத்திருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது.
செல்வராசா கஜேந்திரன் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றார்’ விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட வடக்கு கிழக்கில் புராதன பௌத்த நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. எந்த சந்தர்ப்பத்திலும் பௌத்த விகாரைகள் சேதமாக்கப்படவில்லை. என்று அந்த ‘வெறியர்களுக்கு’ விளக்கமளித்தார்.
அதனிலும் மேலான பல மனித நேய விடயங்களில் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களும் தளபதிகளும் கண்ணியமாக நடந்து கொண்டார்கள் என்பதை நன்கு அறிந்திருந்த இஸ்லாமி மற்றும் சிங்கள பௌத்த அரசியல்வாதிகள் அவற்றைப் பாராடட வில்லை என்பதே அன்றைய நிஜமாகத் தெரிந்தது. தங்கள் இயக்கத்தின் போராளிகளையும் பொதுமக்களையும் நோக்கி கொடிய ஆயுதங்கள் கைகளில் வைத்துக்கொண்டு குறி பார்த்துக் கொண்டு தமிழர் பிரதேசத்திற்குள் புகுந்து கொண்ட சிங்களச் சிப்பாய்களை விடுதலைப் புலிகள் போராளிகள் கைது செய்து தங்கள் முகாம்களுக்கு கொண்டு சென்று சிறையில் வைததிருந்தபோது கூட அவர்களைச் சித்திரவதை செய்யவில்லை. இது தலைவர் பிரபாகரன் அவர்களின் ‘கட்டளையாகவும்’ இ.ருந்தது எனலாம்.
மேலும் தங்களால் கைது செய்யப்பட்டிருந்த சிங்களச் சிப்பாய்கள் சிலரின் பிறந்தநாட்கள் அவர்கள் கைது செய்யப்பட்டு வன்னி மண்ணில் சிறை வைக்கப்பட்டிருந்த பொழுதும் கூட அவர்களுக்கு தங்கச் சங்கிலிகளை தலைவர் பிரபாகரன் அவர்கள் பரிசாக அளித்தார் என்பதை அன்றை செய்திகள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. எனினும் விடுதலைப் புலிகளின் தலைமையின் அவ்வாறான மனித நேயப் பண்புகளைக் கூட சாதாரண சிங்கள மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதிலேயே சிங்கள பௌதத அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அன்று கவனத்துடன் செயற்பட்டார்கள் என்பதும் உண்மை.
நமது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களின் ஆதங்கள் நன்கு புலப்படுத்துகின்றது. அவர் தமிழ் மக்கள் மீது இனவாத சிங்க பௌத்த அரசு மேற்கொள்ளும் இனவாத நடவடிக்கைகளை எப்போதும் பாராளுமன்றத்தில் கண்டித்து வருபவர். அதற்காக சிங்கள வெறியர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிட்டும் அவர் தனது நேர்மையான அரசியலை கைவிடவிலலை.
யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் தொல்பொருள் இடங்களை திரிபுபடுத்தி பௌத்த அடையாளங்களாக சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை பௌத்த அடையாளங்களாக இருந்திருந்தால் அது பௌத்த இடங்களாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர, அவற்றை திரிபு படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வகையில் குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும். தையிட்டியில் தனியார் காணி அபகரிக்கப்பட்டு, கட்டப்பட்டுள்ள விகாரை அகற்றப்பட வேண்டும். மாங்குளத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை அகற்றப்பட வேண்டும். குருந்தூர் மலையில் ஆதி சிவனார் ஆலயத்தில் தமிழ் மக்கள் ஒரு பொங்கல் வைக்கக் கூட முடியாமல் உள்ளது. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அங்கு தகரம் ஒன்றை வைத்துதான் பொங்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள். அப்படியானால் தமிழர்களுக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா? என்று நியாயமான கேள்விகளையும் பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் எழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தனது கட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் அவரது கருத்துக்களை பாராளுமன்றத்தில் தமிழ் மொழியில் பேசி ‘தவறாக செயற்படும் சிங்கள பௌத்த அரசியல் வாதிகளுக்கு பாடம் புகட்டக் கிளம்பியுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நிறையவே உண்டு!