ஒட்டாவா, டிச.12
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்லூரிகளில் பட்டம் படித்தவர்களுக்கு உலகின் பல முன்னணி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்ததனால் அதிக பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் கல்வி பயில பல இந்திய மாணவ மாணவியர் ஆண்டுதோறும் அங்கு செல்வது வழக்கம்.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் மாணவ மாணவியர் கனடாவில் படித்து பட்டம் பெற்று, அங்கேயே வேலை வாய்ப்புகளை பெற செல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் “ஸ்டெம்” எனப்படும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளிலும், வணிக நிர்வாக மேலாண்மை துறையிலும் பட்டம் பெற அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்பவர்கள்.
இந்நிலையில், கனடாவின் தேசிய புள்ளிவிவர மையம் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே கனடாவில் வேலை வாய்ப்பு 61.8 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிக அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இதன் காரணமாக அங்கு படிக்கச் சென்ற மாணவர்கள், “ஆட் ஜாப்ஸ்” எனப்படும் அதிக திறன் தேவைப்படாத, அதிக ஊதியம் வழங்காத சாதாரண வேலைகளை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது பட்டம் முடித்த பல இந்திய மாணவர்களுக்கு கனடாவில் உணவகங்கள், மின்னணு சாதன விற்பனை நிலையங்கள், மொபைல் விற்பனை கடைகள், அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்தாலும் வாடகை, உணவு மற்றும் இதர செலவுகளுக்கு போதுமான வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
கடும் குளிர் பிரதேச நாடான கனடாவில் வேலைவாய்ப்புகள் குறைவதாலும், பட்டம் பெற பெரும் பணம் செலவழித்து வந்து விட்டதாலும், நாடு முழுவதுமே வேலைவாய்ப்புகள் குறைவதாலும் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.