கதிரோட்டம் 15-12-2023
‘உலகத் தமிழர் பேரவை’ என்ற பெயரோடு இயங்கிவருகின்ற அமைப்பானது சில தனி நபர்களின் ‘கூடாரம்’ என்ற கணிப்போடுதான் இயங்கி வருகின்றது என்பது தமிழர் அரசியலில் அவதானமான பார்வை கொண்டவர்களால் நன்கு விளங்கிக்கொள்ளப்பெற்ற விடயமாகும்.
ஆனாலும் அந்த தனிநபர்களின் செயற்பாடுகள் கடந்த வாரம் தொடக்கம் உலகத் தமிழர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பிற்குள்ள தள்ளிய ‘இமயமலைப் பிரகடனம்’ என்ற ஒன்றோடு தான் ஆரம்பமாகியது என்று நாம் கருதி விடமுடியாது.
ஆக மூன்று தனிநபர்களினால் கையாளப்படுகின்ற ‘உலகத் தமிழர் பேரவை’யிலிருந்து பல விலகிக் கொண்டாலும் அந்த மூன்று தனிநபர்களின் செயற்பாடுகள் ‘எல்லை’ கடந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. பிரான்சிஸ் பாதிரியாரின் ‘ஈடுபாடு’ தற்போது சற்று மறைந்துள்ளதாக காட்டப்பட்டாலும் இங்கிலாந்து வாழ் சுரேன் என்பவரே தற்போது முன்வரிசைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு தற்போது காட்சிகளாக விளங்கும் அதிரடியான சந்திப்புக்கள். கையளிப்புக்கள் என இலங்கைத் தலைநகரில் நடந்தேறியுள்ளன.
இன்றிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னரேயே, தற்போதைய ஜனாதிபதி ரணில் அவர்கள் பிரதமராக பதவி வகித்த காலத்தில் பிரான்சிஸ் பாதிரியார் சுரேன் போன்றவர்கள் ரணில் அவர்களை புலம் பெயர் தமிழர்கள் சிலர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. குறிப்பான ஐரோப்பிய நாடுகளில் ரணில் விக்கிரமசிங்க பயணங்கள் மேற்கொண்ட போது இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றன என்பதை அன்றைய காலங்களில் அறியக்கூடியதாக இருந்தது.
இந்த மறைமுகமான வேலைத்திட்டங்களில் கனடாவில் இயங்கிவரும் ‘கனடிய தமிழர் பேரவை’ யினரும் பங்கெடுத்திருந்து தொடர்ந்து வந்த நாட்களில் இலங்கை அரசின் விருந்தினர்களாகக் கூட கொழும்பிற்கு அழைக்கப்பெற்று ‘அவர்களின்’ எண்ணப்படியும் விருப்பத்தின்படியும் சந்திப்புக்கள் இடம்பெற்றன.
இவையெல்லாம் 2009ம் ஆண்டிற்கு பின்னர்தான். இந்த புலம் பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் சந்திப்புக்களில் வெளிப்படை இருந்ததாக அன்று உணரப்படவில்லை. ஆனால் சந்திப்புக்கள் என்ற பெயரோடு சந்தோசமான நாட்களை அவர்கள் இலங்கைத் தலைநகரில் கழிப்பதற்கு வாய்ப்புக்கள் கிட்டியிருக்க வேண்டும்.
ஆனால் இவ்வாறான சந்திப்புக்கள் வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு அவர்கள் நாளாந்த வாழ்வில் எவ்வித மாற்றங்களையோ அன்றி முன்னேற்றங்களையோ ஏற்படுத்தவில்லை.
இவ்வாறான கொழும்பு சந்திப்புக்களிற்கான ஏற்பாடுகளை கவனிப்பதில் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கு வகித்திருந்த காரணத்தால் அவர்களில் சிலர் கனடாவில் இடம்பெற்ற சில விழாக்களில் ‘விருந்தினர்களாக’ வந்து போகின்ற நிகழ்ச்சி நிரல்கள் தொடர்ச்சியாக பேணப்பட்டு வந்தன. ஆனால் இவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் கிட்டியதாகத் தெரியவில்லை. இந்த உறுப்பினர்களை தமது வாக்குகளால் தேர்ந்தெடுத்த மக்கள் வாழ்க்கையின் அடி மட்டத்திற்கு சென்று கொண்டிருந்து அவர்களால் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வானத்தில் பறப்பதும் இறங்குவதுமாக தங்கள் பதவிக் காலத்தை களிப்போடு கழித்தார்கள். ஆனால் தற்போது அந்த பயணங்களுக்கு ‘ஓய்வு’ கொடுக்கப்பட்டுள்ளது போன்று காணப்படுகின்றது.
இவ்வாறான ஒரு ‘வலைப்பின்னலுக்குள்’ செயற்பட்டவர்களின் சற்று வேகம் கொண்டவர்களின் முடிவாகவே கடந்த வார ‘இமயமலைப் பிரகடனம்” அரங்கேறியுள்ளது
எந்தவித கலந்தாலோசனையும் இல்லாமல் ரகசியமாக வைக்கப்பட்ட ‘இமயமலைப் பிரகடனம்’ திடீரென தீப்பிளம்மாகத் தெரிந்த விடயமானது தமிழ் மக்களது எரியும் பிரச்சினைக்கு எண்ணை ஊற்றுவதாக உள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் செயற்பட்டு வரும் சில தமிழர் அமைப்புக்கள் அறிக்கைகள் மூலம் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். அத்துடன் ‘உலகத் தமிழர் பேரவையின்’ செயற்பாடுகளுக்கும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.‘இமயமலைப் பிரகடனம்’ பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து பொதுவெளிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இந்தச் சந்திப்புக்கு முன்னர் இந்த விடயம் தமிழர் தரப்பில் எவருடனும் ஆலோசிக்கப்படாமல் திரைமறைவில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போது ஜனாதிபதியாக விளங்கும் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு மக்கள் ஆதரவின்றி அந்த பதவியைத் தக்கவைத்துக் கொள்கின்றாரோ. அதைப்போன்றே ‘உலகத் தமிழர் பேரவை’ போன்ற அமைப்புக்கள் நடந்து கொண்டாலும் அவர்களின் செயற்பாடுகளை நிறுத்தும் அளவிற்கு அதன் மறுபக்கத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் இல்லை. ஆங்காங்கே அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. இவ்வாறு நாட்கள் நகர்ந்து செல்லும்போது. சுpல நாட்களில் .‘இமயமலைப் பிரகடனம்’ என்பதில் பார்க்க ஆபத்தான விடயங்களை அவர்கள் கொண்டு எமது மக்கள் மீது திணிப்பதற்கும் சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு கிட்டலாம். எது எப்படி நடந்தாலும்.
தற்போது இடம்பெறுகின்ற காட்சிகளைப் பார்க்கும் போது. எமது மக்களும் போராளிகளும் சிந்திய இரத்தம் அர்ப்பணித்த உயிர்கள். இழந்த சொத்துக்கள் உறவுகள் அனைத்தும் எம் கண்களுக்கு முன்னாலே தகர்க்கப்படுவதை நாம் உணர்ந்து கொள்கின்றோம் கடந்த காலத்தை ஆராய்ந்து நிகழ் காலத்தை தமக்குச் சாதகமாகக் கையாளுபவர்கள். தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும் முயலுவதையே ‘உலகத் தமிழர் பேரவையின்’ செயற்பாடுகளும் காணப்படுகின்றன. இவ்வாறாவற்றை நாம் பார்க்கும் போது இலங்கையில் சிங்கள மக்களின் செல்வாக்குகள் இல்லாத ஒரு ஜனாதிபதிக்கு புலம் பெயர் நாடுகளின் தமிழ் பேசும் ‘ஏஜன்ட்கள்’ உள்ளார்கள் என்பதை நினைக்கும் போது எவருக்கும் இதயங்கள் வெந்து போக வாய்ப்புக்கள் உண்டு.
கடந்த காலத்தை தனக்கு சாதகமாக கையாளும் ரணில் விக்கிரமசிங்கவின் சந்திப்பு, புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுடன் பேசுவதில் வெற்றி என்ற போர்வையில் தமிழர்களின் குரல்களை மூடி மறைத்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு உலகத் தமிழர் பேரவையின்; சந்திப்பு ரணிலுக்கு வாய்ப்பளித்துள்ளது என்று நேற்றைய அறிக்கை ஒன்றில் புலம் பெயர் அமைப்புக்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளிகள் இடப்படுமா என்பதே இன்றைய எமது கேள்வியாகும்.