உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் அங்கத்தவர்களையும் அமைச்சர்களையும் பிரதமரையும் கொண்டு இயங்கிவரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2023 ஆண்டிற்குரிய வருடாந்த மாநாடும் விருது வழங்கலும் கனடா ஸ்காபுறோ நகரில் ‘ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் ‘ மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
திரு ராகவன் பரஞ்சோதி தொகுத்து வழங்கிய இந்த விழாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் உறுப்பினரும் நீண்ட கால அரசியல் செயற்பாட்டாருமான திரு நிமால் விநாயகமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். அன்றைய தினம் கனடாவின் பல பாகங்களிலுமிருந்து மத்திய அரசாங்கம். மாநில அரசாங்கம் மற்றும் மாநகர அரசாங்கங்கள் . கல்விச் சபைகள் என அனைத்து அரசியல் தளங்களிலுமிருந்து பிரதிநிதிகள் கலந்து சிறப்பு சிறப்புரைகளை ஆற்றிச் சென்றார்கள் அவர்களில் இரண்டு முக்கிய அமைச்சர்கள் மற்றும் பெரிய நகரங்களின் நகர பிதாக்களாக தேர்ந்தெடுக்கப்பெற்ற இருவர் உட்பட முக்கிய தலைவர்கள் அடங்கியிருந்தார்கள்.
அனைவரும் எமது தாயகத்தில் தமிழ் உறவுகளுக்கு இழைக்கப்பட்ட ‘இனப்படுகொலை’ தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்து, இலங்கை அரசிற்கு தகுந்த தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும் அமெரிக்கா வாழ் வழக்கறிஞருமான உருத்திரகுமாரன் விஸ்வநாதன் அவர்கள் இணைய வழி ஊடாகவும் சபாநாயகரும் இங்கிலாந்து வாழ் உறுப்பினருமான திருமதி பாலாம்பிகை முருகதாஸ் நேரடியாகவும் கலந்து கொண்டு பயனுள்ள உரைகளை ஆற்றினார்கள்.
இவ்வருட விழாவில் ‘பறை’ என்னும் விழா மலர் அதிக பக்கங்களுடன் பிரசுரிக்கப்பெற்று சபையோர்கள் மத்தியில் வழங்கப்பெற்றது.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருடாந்த விருதுகள் வழங்கும் வைபவம் இடம்பெற்றது மூன்று சமூகப் பணியாளர்களுக்கும் ஒரு சர்வதேச அமைப்புக்கும் விருதுகள் வழங்கப்பெற்றன. திருவாளர்கள் ராஜ் குணநாதன். பேராசிரியர் முருகேசு சிவபாலன், பேராசிரியர் இஸல்டீன் அபுலாஷ் ஆகியோருக்கும் சர்வதேச ‘பேர்ள்’ அமைப்பிற்கும் வழங்கப்பெற்றன. இவற்றுல் கனடா வாழ் திரு ராஜ் குணநாதனுக்கு ‘தந்தை செல்வா ஞாபகார்த்த கௌரவ விருது’ வழங்கப்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கனடா வாழ் உ றுப்பினர் மரியாம்பிள்ளை மரியராசா நன்றியுரையாற்றினார். அப்போது ஊடகங்களின் ஆதரவிற்கும் சிறப்பான நன்றிகளைத் தெரிவித்தார்.
இங்கே காணப்படும் படங்கள் விழாவில் எடுக்கப்பெற்றவையாகும்.