மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன்
(மன்னார் நிருபர்)
(16-12-2023)
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற மையினால் மாவட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்துள்ளார்.
-மேலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற மையினால் பாலியாறு மற்றும் பரங்கியாறு போன்ற ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு நீர் மட்டம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் மன்னார் -யாழ்ப்பாணம்(ஏ-32) பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
எனவே குறித்த வீதியூடாக பயணம் செய்யும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டப்படுகிறார்கள்.
பொலிஸார் மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த வீதியூடாக பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மன்னார் தீவு மற்றும் பெருநிலப்பரப்பு பகுதியில் உள்ள தாழ் நிலப்பரப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.குறித்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வெள்ள நீர் வடிந்தோட வடிகான்களை துப்பரவு செய் வெள்ள நீரை கடலுக்குள் செல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவன் பிட்டி,பகுதியில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 161 நபர்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான உணவு இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.
எனவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற மையினால் மக்களை பாதுகாப்புடன் செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.