அண்மையில் வடமராட்சி கட்டை வேலி பகுதியில் ஒரு மக்கள் சந்திப்பு இடம் பெற்றது. அங்குள்ள ஒரு புரடஸ்தாந்துத் திருச்சபையின் வளாகத்தில் ஒரு கிறிஸ்தவ அமைப்பினால் அச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. அந்த சந்திப்பில் பெருமளவுக்கு பெண்களை பங்குபற்றினார்கள். குறிப்பாக குடும்பப் பெண்கள் பல்வேறு வயதினரும் அங்கே காணப்பட்டார்கள். ஒரேயொரு ஆண் மட்டும்.எல்லாருமே கீழ் நடத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
சமகால நிலைமைகள், பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக விழிப்பூட்டும் அச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்த தகவல்களைத் திரட்டிப் பார்த்தால், பொருளாதார நெருக்கடிக்கு பின்னரான கடந்த சுமார் மூன்று ஆண்டுகளிலும் அவர்களுக்கு பெரிய அளவில் உதவிகள் எதையும் கிடைக்கவில்லை. அது பெருமளவுக்கு அன்றாடம் உழைப்பவர்களின் கிராமம். தமது ஆண்களுக்கு வேலைகள் கிடைப்பதில்லை என்று அவர்கள் சொன்னார்கள். பொருட்களின் விலை அதிகரித்து செல்கிறது, அதிகரித்த விலைகள் பெரும்பாலும் இறங்கவில்லை, இறங்கிய விலைகளும் கூட ஏழைகளால் நுகர முடியாத ஒரு மட்டத்திலேயே காணப்படுகின்றன, என்றும் அவர்கள் சொன்னார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகாலப் பகுதிக்குள் அவர்களுக்கு பெரிய அளவில் நிவாரணங்கள் கிடைக்கவில்லை. மெதடிஸ்ட் திருச்சபை 5000 ரூபாய் வழங்கியிருக்கிறது. 3ஆண்டுகளுக்குள் ஒரே ஒரு தடவை 5000 ரூபாய். புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது உறவினருக்கூடாக சிறிய உதவிகளை செய்திருக்கிறார்கள். தவிர சமுர்த்திக் கொடுப்பனவு. இவ்வளவுதான் அவர்களுக்கு கிடைத்த உதவிகள். எந்த அரசியல்வாதிகளுக்கு அவர்கள் வாக்களித்தார்களோ, அவர்களில் யாருமே அவர்களை வந்து சந்திக்கவில்லை. அரசியல்வாதிகள் தங்களைத் தேடி வந்து நிவாரணம் வழங்கவிட்டாலும், தங்களை சந்தித்து ஆறுதல்கூடக் கூறவில்லை என்றும் அவர்கள் குறைபாட்டார்கள்.
இதுதான் தாயகத்தில் உள்ள பெரும்பாலான நிதி ரீதியாக பின்தங்கிய கிராமங்களின் நிலை.ஒரு திருச்சபையின் சிறிய தொகை பணம். அரசாங்கத்தின் சமுர்த்திக் கொடுப்பனவு. என்பவற்றைத் தவிர சிறிய அளவில் புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவிகள் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றன.
இது போன்ற கிராமங்களுக்கு உதவி செய்வதற்கு உரிய கட்டமைப்புகள் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உண்டா? இதுபோன்ற கிராமங்கள் தொடர்பான புள்ளி விவரம் உண்டா?
இல்லை. யாரிடமும் ஒரு மையத்தில் திரட்டப்பட்ட புள்ளி விபரங்கள் இல்லை. ஏன் அதிகம் போவான்? நாட்டில் உள்ள கட்சிகளிடமே ஒரு மையத்தில் திரட்டப்பட்ட புள்ளி விபரங்கள் கிடையாது. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனித்தனியாக புள்ளி விபரங்களைத் திரட்டி வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் எப்படி அப்படி எதிர்பார்ப்பது?
இதுதான் பிரச்சினை. கடந்த மூன்று ஆண்டுகால பொருளாதார நெருக்கடிக்குள் அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பொருத்தமான உதவிகள் , பொருத்தமான நேரத்தில், பொருத்தமான விதங்களில் கிடைத்திருக்கவில்லை. ஒருபுறம் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் இசை நிகழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் கோடிக்கணக்கான பணத்தைச் செலவழிக்கின்றது. இன்னொருபுறம் தாயகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியின் கீழ் அவதிப்படும் மக்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தனிப்பட்ட முறையிலும் தன்னார்வ நிறுவனங்களை உருவாக்கியும் கட்சிகளுக்கு ஊடாகவும் உதவிகளை செய்கின்றார்கள். தாயகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் பல தென்னார்வ நிறுவனங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழர்களே உண்டு. ஆனால் அவை ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படாத உதவிகள். சில சமயம் ஒரு நிறுவனம் உதவி புரிந்த பயனாளிகளுக்கு இன்னொரு நிறுவனமும் உதவி புரியும். சில சமயம் ஒரு தொகுதி பயனாளிகளுக்கு யாருமே உதவி செய்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் ஒரு மையத்திலிருந்து உதவிகள் திட்டமிடப்படுவதில்லை.அதாவது தேசத்தை நிர்மாணிப்பது என்ற அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படாத உதவிகள்.
இவ்வாறு, அவரவர் அவரவர் போக்கில் உதவிகளை செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு கோவிட்19 காலம் ஒரு சிறந்த உதாரணம். அக்காலகட்டத்தில் தாயகத்தை நோக்கி புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெருமளவு உதவிகளை வழங்கினார்கள். ஆனால் இந்த உதவிகள் ஒரு மையத்தில் இருந்து கொடுக்கப்படவில்லை. யாருக்கு உதவி தேவை என்பதும் ஒரு மையத்தில் இருந்து திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவில்லை. இதனால் பல குடும்பங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை உதவிகளைப் பெற்றன அது மட்டுமல்ல அவ்வாறு பெற்ற உதவிகளை முறையாக சேமிக்கத் தவறியதால் பல வீடுகளில் உலர் உணவுகள் பழுதடைந்தன.
ஒரு புறம் தேவைகளோடு காத்திருக்கும் தாயகம். இன்னொரு புறம் பொருத்தமான ஒருங்கிணைந்த நிகழ்ச்சி திட்டங்கள் இல்லாத புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகள். தாயகத்தில் உள்ள கட்சிகளைப் போலவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. இது ஒரு பொதுவான தமிழ் வருத்தம். இந்த வருத்தத்தின் ஆகப்பிந்திய நோய்க்கூறான ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் வெளிவந்த இமாலயப் பிரகடனம்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு பௌத்த பிக்குகள் சிலரோடு இணைந்து அந்த பிரகடனத்தை தயாரித்திருக்கிறது. அதுதொடர்பில் அவர்கள் ஏனைய புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளோடு உரையாடியிருக்கவில்லை என்று தெரிகிறது. ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களைப் பிரித்துக் கையாள்வார் என்ற ஒரு கருத்து உண்டு.இமாலய பிரகடனத்திலும் அதுதான் நடந்திருக்கிறதா?
உலகத் தமிழர் பேரவை என்பது ஒரு பெரிய பிரம்மாண்டமான அமைப்பு இல்லை என்றும், மிகச் சிலர்தான் அதில் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள வேறு சில புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் தமது அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள உலகத்தமிழர் பேரவையைச் சேர்ந்த ஒருவரை கடந்த வாரம் தமது அமைப்புகளில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். தங்களை கலந்தாலோசிக்காமல் அவர் செயல்பட்டதாக குற்றம் காட்டுகிறார்கள்.
இது தனிய உலகத் தமிழர் பேரவை சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல. எல்லா புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளோடும் சம்பந்தப்பட்ட ஒரு விடயம். தாயகத்தின் தலைவிதியோடு விளையாடும் ஒரு விடயம். ஒருபுறம் கனடாவில் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை கேட்டு கடுமையாக உழைத்து வருகின்றன. அந்த விடயத்தில் கனேடிய புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் கணிசமான அளவுக்கு முன்னேறியிருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வெற்றிகளை பெற்று இருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழ் சமூகங்கள் மத்தியில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் விடையத்தில் மிகத் துலக்கமான அடைவுகளை பெற்றிருப்பது கனேடியத் தமிழ்ச் சமூகம்தான். ஆனால் தமது நடவடிக்கைகளை உலகத் தமிழர் பேரவையின் மேற்படி இமாலய பிரகடனம் பின்னடைய வைத்துள்ளது என்று கனடாவில் உள்ள செயற்பாட்டாளர்கள் கவலைப்படுகிறார்கள். ஆத்திரப்படுகிறார்கள். அதே கருத்துத்தான் ஐரோப்பாவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் மத்தியிலும் காணப்படுகிறது.
2009 க்கு முன்பு புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் பெரும்பாலானவற்றை விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருங்கிணைத்து. போரும் போரின் அழிவுகளும் ஒருங்கிணைந்தன. ஆனால் 2009 க்கு பின் எல்லாமே சிதறிப் போய்விட்டன. தாயகத்தைப் போலவே புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் தனித்தனி ஓட்டங்கள். தாயகத்தைப் போலவே புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் ஐக்கியம் இல்லை.இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளைச் குற்றச்சாட்டுவதை விடவும் தாயகத்தில் உள்ள கட்சிகளையும் செயற்பாட்டாளர்களையும்தான் அதிகம் குற்றம் சாட்ட வேண்டும். அவர்கள் ஒரு திரட்சியாக இருந்தால் , புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் பின் வருவார்கள். ஆனால் தாயகத்தில் தமிழரசியல் பலதலைக் கொள்ளியாக இருக்கிறது. அது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு கெட்ட முன்னுதாரணமாக காணப்படுகிறது.
இந்நிலையில் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைவார்கள் என்று தமிழ் மக்கள் காத்துக் கொண்டிருப்பார்களாக இருந்தால் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல தாயகத்தில் தேவைகளோடு மல்லுக்கட்டும் மக்களுக்கு உதவ யாராலும் முடியாது போய்விடும். எனவே அரசியல்வாதிகளையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் பார்த்துக் கொண்டிருப்பதை விடவும் தன்னார்வமாக தனி நபர்கள், சமூக உருவாக்கிகள், சமூகச் சிற்பிகள், நிறுவன உருவாக்கிகள், அமைப்பு உருவாக்கிகள் மேலெழ வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அவ்வாறு நிறுவன உருவாக்கிகள் தன்னார்வமாக தோன்றியிருக்கிறார்கள். ஆறுமுக நாவலர், கன்டி பேரின்பநாயகம், இந்து போர்ட் ராஜரத்தினம், தங்கம்மா அப்பாக் குட்டி ஆறு திருமுருகன் போன்றவர்களை உதாரணமாகக் காட்டலாம்.தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கு கலக்கம், காந்தீயம் போன்றவற்றை உதாரணங்களாகக் காட்டலாம். காலத்துக்குகாலம் தமிழ்மக்கள் மத்தியில் நிறுவண உருவாக்கிகளும் அமைப்பு உருவாக்கிகளும் தோன்றுகிறார்கள். அவர்கள் கட்டியெழுப்பியதுதான் இப்போதிருக்கும் நவீன தமிழ்ச் சமூகம்.
ஆயுத மோதல்களுக்கு பின்னரான சமூகத்தில் அதுபோல பல உதாரணங்களை காட்டலாம்
விழிப்புலன் செவிப்புலன் அற்றவர்களுக்கான ஒரு கட்டமைப்பு கருவி என்ற பெயரில் இயங்குகின்றது. அக்கட்டமைப்பானது உள்ளூரில் சேகரிக்கப்பட்ட பணம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளோடு நீர்வேலியில் தனக்கென்று ஒரு மையக் கட்டடத்தை கட்டி எழுப்பி வருகிறது.
மற்றொரு கட்டமைப்பு கத்தோலிக்க திருச்சபையால் உருவாக்கப்பட்டது. போதைப் பொருள் பாவனையாளர்களுக்கான புனர் வாழ்வு மையம். குறைவான வசதிகளோடு செயற்பட்டு வரும் மேற்படி அமைப்புக்கு அரசாங்கம் வடமராட்சி கிழக்கில் 10 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் அதைச் சுற்றி மதில் கட்டுவதற்கு உதவி புரிந்திருக்கிறார்கள்.
அப்படித்தான் அண்மையில் கிளிநொச்சியில் அம்மாவட்டத்திற்குரிய மனநல வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அம்மாவட்ட ஆஸ்பத்திரியில் நடந்த ஒரு கூட்டத்தில் அந்த வலையமைப்பு தொடக்கி வைக்கப்பட்டது. அதில் அரசியல்வாதிகள் சம்பந்தப்படவில்லை. தனிப்பட்ட தன்னார்வலர்கள் அதை உருவாக்கியிருக்கிறார்கள். துறை சார் மருத்துவர்கள் உதவி புரிகிறார்கள்.
மேற்சொன்ன உதாரணங்களைப் பின்பற்றி தாயகத்திலும் டயஸ்பொறாவிலும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நிறுவன உருவாக்கிகளும் அமைப்புருவாக்கிகளும் தன்னார்வமாக கட்டமைப்ப்புக்களை உருவாக்கலாம். ஒருபுறம் நிதிப்பலம் மிக்க புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் இன்னொரு புறம் தேவைகளோடு காத்திருக்கும் தாயக மக்கள். இவை இரண்டையும் இணைப்பதற்கு அரசியல்வாதிகளை பார்த்துக் கொண்டிருக்க தேவையில்லை. தன்னார்வலர்கள் மேலெழ வேண்டும். தாயகத்தில் பொருத்தமான கட்டமைப்புகள் இல்லாத வெற்றிடத்தில்தான், வெளியிலிருந்து பிரகடனங்களை உருவாக்கிவிட்டுத் தாயகத்தின்மீது திணிக்கிறார்களா?ஒரு தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று இருந்திருந்தால், உலகத் தமிழர் பேரவை இமாலயப் பிரகடனத்தைச் செய்திருக்குமா?