பவானி சச்சிதானந்தன் -கொழும்பு.
“இது என்னோடது ஒனக்கு தரமாட்டேன்…. ஒனக்கு வேற ஒன்னு….. அப்பாகிட்ட சொல்லி வாங்கிடு. “என முகுந்தன் தன் அண்ணா மருதனிடம் பென்சில் ஒன்றுக்காக சண்டை பிடித்தான்.
“அப்பா ….அப்பா….அண்ணன் என்னோட பென்சில எடுக்குறான்…… “என முகுந்தன் அப்பா குமாரை அழைத்தான்.
“என்ன சண்டை போடுறீங்களா ….?”என்ற வாறு தனது இரு குழந்தைகளையும் கட்டி அணைத்து இதற்காக யாரும் சண்டைப் போடுவாங்களா..?இந்த வீட்டுல இருக்கிற எல்லாருமே எல்லா பொருள்களையும் எடுக்கனும். வேலை முடிந்ததும் அந்த அந்த இடத்துல வைத்திடனும். நான் மட்டுமே பாவிக்கனும்ணு சண்டை போடக் கூடாது. என்று இன்னும் பல வாறான அறிவுரைகளை குமார் தன் பிள்ளைகளுக்காக கூறினான். பிள்ளைகளும் எப்போதுமே உலகத்தில் சிறந்த அப்பாவாக மதிக்கும் குமாரின் கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள்.
“இங்க பாருங்க மாமியை ஒருக்கா போய் பார்த்துட்டு வாங்க. நீங்க வருசத்துல ஒருமுறைகூட பார்க்க போகாட்டி மகனாக பொறந்ததில அர்த்தம் இல்லாது போயிடும். ஒங்களுக்கு என்ன தான் கவலை.போக்கு வரத்து செலவு மட்டுமே செய்திட்டு போங்க. நீங்க போய் பார்க்கப் போவது ஒங்கட அம்மாவ. என்ன தான் ஆயிரம் ஒறவுகள் பார்த்துக் கேட்டாலும் மகனாக ஒங்க கடமையிலும் நீங்க சரியாக இருக்க வேண்டியது கட்டாயம் தானே! “நான் குமார் மகன்ட…. அம்மா” என்று மாமிபோன இடம், வந்த இடம்ன்னு எல்லா இடத்துலயும் பெருமையாக சொல்லுவாங்க. ஆனால் மகனுக்கு தான் தன்னோட அம்மா உயிரோடு இருக்காங்கன்னு நெனைக்வே நேரம்இல்ல. “….என மனைவி பத்மா தன் கணவனுக்கு எப்போதும் போல் அன்றும் கூறிட அதை அவன் காதில் வாங்காதவனாக வேறு பக்கமாக சிந்தனையை திசைதிருப்பிக் கொண்டவன் ஏதோ அனைத்திலும் நானே சரி என நினைத்துக் கொண்டு தன் வீட்டுக்கான பொருள்களை வாங்கிட கடைக்குச் சென்றான். தன் கணவன் குமாரை நினைக்க பத்மாவிற்கு கோபமும் ஆத்திரமுமாக எதை எப்படி எடுத்திடுவது என தெரியாது தவித்தாள். பெற்ற தாயைப் போய் பார் என்று வேறு யாரோ கூறிடும் அளவிற்கு மகன்கள் நடந்திடுவது பிழையான விடையமே அதை ஏன் குமார் விளங்கிட மறுக்குறார் என்று புரியாது கவலைப் பட்டாள்.
குமார் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் அவன் சம்பாதிக்க ஆரம்பித்து, திருமணம் முடித்ததும் அவன் சுய நலக்காரனாக மாறி விட்டான். அவனால் ஐந்து சதத்துக்கு யாருக்கும் உதவி இல்லாதாகி விட்டது. தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தான். பிள்ளைகளுக்காக ரொம்ப அறிவுரைகள் கூறிட முயல்வான்.
தனது தாய் அவனை பார்க்க ஏங்குவது அறிந்தும் உள்நாட்டிலேயே மூன்று மணிநேர பயண தூரத்திலுள்ளவளை பார்த்திட பணம் செலவாகிடும் என்பதற்காக மறுக்கின்றான். பெற்ற தாயை மறந்திட கூடாது. அவளுக்கான கடமைகள் செய்யாதிருத்தல் பெரும் பாவம் என உணராமல் அவன் தன் போக்கில் இருந்தான்.
“அப்பா எனக்கு தூக்கம் வருதுல்ல… கதை சொல்லி தூங்க வைங்க “என்ற
முகுந்தன் அப்பாவின் தோளில் கைகளை மாட்டி இறுக்கமாக கட்டிக் கொண்டான்.
குமாரின் கருமித்தனம் உணர்ந்திடாத பலர் அவன் மெத்த சரியானவன் என்றே நினைத்திருந்தார்கள்.
பத்மா மீண்டும் அவனை நச்சரிக்க ஆரம்பித்தாள். நான் ஒங்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் சொல்லுறன் நாளைக்கு செய்யலாம்னு எதையும் தள்ளி வைக்க கூடாது .அதிலும் நோயாளிகளை எப்போதெல்லாம் நினைக்கின்றோமோ அந்த நேரத்துலயே போய் பார்த்திடனும். நல்லது போல் கெட்டது ஏதும் நடந்திட்டால், அடடா நானும் பார்க்க வரத்தான் இருந்தேன். அதற்குள்ளாக இப்படியாகிட்டுதே என பொய்யான காரணங்கள் சொல்லி சமாளிக்க வேண்டாம். வயது போன காலத்துல
“வீடு போ ….போ..என்றிட காடு வா…வா….”
என அழைக்கும் தருவாயில் நலத்திற்காக தடுமாறும் வயோதிபர்களை உடனே போய் சுகம் விசாரித்து தேவையான கடமைகளை செய்து ஆசைகளை நிறைவேற்றி ஆசீர் வாதம் பெற்றிட வேண்டும். பேர பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போய் காட்ட வேண்டும். ஏன் இது எதையுமே நீங்க செய்ய மாட்டேங்கிறீங்க.நானும் ஆயத்த மாகிறேன் வாங்க வாங்க போவோம் என கட்டாயப்படுத்தினாள். அவன் பணம் செலவாகிடும் என்ற எண்ணத்தில் அவள் கூறியதை அவன் ஏற்க மறுத்தான்.
ஏதோ செய்யுங்க என அவளும் விட்டு விட்டாள்.
“அப்பா…..இன்றைக்கு எங்கட வகுப்பு டீச்சர் அம்மா….. அப்பாவை பற்றிய கதை சொன்னார்.
நாங்களும் விருப்பமாக கேட்டோம்….. பிறகு வகுப்புல எல்லார் கிட்டேயும் கேள்வி கேட்டார்.
அப்படியா… ?என்ன கேட்டாங்க? என்றான் குமார்.
“அப்பா அம்மா சொல்லுறத யார் எல்லாம் சரியாக கேட்பீங்க….? அப்பா அம்மா எந்த மாதிரியான நல்ல விடையங்களை செய்றத நீங்க பார்த்து, நீங்க என்ன தெரிந்து கொண்டீங்க…?இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்டாங்க “என்றான். அதற்கு குமாரும் மகிழ்வாக எல்லாவற்றுக்கும் பதில் சொன்னீங்களா…?என்றிட ஆமாம் நான் எல்லாவற்றுக்கும் பதில் சொன்னேன். ஆனால் ஒரு கேள்விக்கு பதில் சொன்னதும் எல்லோரும் சிரித்திட டீச்சரும் அப்படிப்பட்ட சுய நலக்காரனாக இருக்க கூடாது என்று கூறினாங்க என்றிட குமாரும் மகனிடம் அப்படி என்ன கேட்டாங்க என்றான்.
யார் பெரியவனானதும் அப்பா அம்மாவை பார்த்துக் கொள்வீர்கள் என கேட்டாங்க.
நான் பார்த்துக் கொள்ள மாட்டேன் என்றேன். அதற்கு ஆசிரியர் ஏன் என்று கேட்டாங்க. அதற்கு நான் என் அப்பாவும் எங்கட அப்பம்மாவை பார்த்துக் கொள்ள மாட்டார். அப்ப நானும் அம்மா அப்பாவ பார்க்க தேவையில்ல தானே !என்று டீச்சர்கிட்ட சொன்னேன். அது சரிதானே அப்பா. ஆனால் டீச்சர் அப்படி செய்றது பிழை ….ன்னு சொல்றாங்க. அது எப்படி…. அப்பா…? என மழலை குரலில் மகன் கேட்டிட குமார் விழி பிதுங்கிட முழித்தான்.
இதைக் கேட்ட பத்மா குமாரை கோபமாக பார்த்தாள்.
“காலையில் செய்தால், மாலையில் பலன் ”
என்பார்களே அதுதான் இப்போ நடந்த கதை. நீங்க சொல்லுறத எல்லாரும் கேட்கனும். எல்லாரும் சொல்லுறத நீங்க கேட்க மாட்டீங்க அப்படிதானே.
போதும் ஒங்கட உப்பு புளியில்லாத அறிவுரைகள். பேசாம ஆயத்தமாகுங்க மாமிய போய் பார்த்துட்டு வந்திட. என்று குமாரை கடிந்துக் கொண்டவள் பிள்ளைகளையும் ஆயத்தமாக்கிட தயாரானாள்.
அதற்குள் குமாருக்கு தொலைப்பேசி மணியடித்திட காதில் வைத்தவன் ஆ….என்ன சொல்லுறீங்க….நாங்க அங்க அம்மாவை பார்க்க வரத்தானே ஆயத்தமாகிறோம். ஐயோ…! கடவுளே!!…. நான் புத்தி கெட்டு முட்டாள்தனமாய் நடந்திட்டேனே. பத்மா…. நீ சொன்னதையும் நான் ….கேக்கல. நானும்….. சுயமா செய்யனுமேன்னு நெனைக்கல்ல. அம்மா எங்களை விட்டுட்டு…. போய்ட்டாங்களாம்…… என தனது வயோதிப வயதில் சுகவீனம் அடைந்த தாயின் மரணச் செய்தி கேட்டு அழுதுத் துடித்தான் குமார்.
பத்மாவிற்கு கவலை நெஞ்சை அடைத்தது.
குறிப்பிட்ட ஒரு வயதாகும் போது அம்மாக்கள் தனது அன்பிற்கினிய மகன்களின் பெயருக்கு மதிப்பு கொடுத்து
” நான் இந்த மகனின் அம்மா”
என்று கூறிடுவதில் பெருமை கொள்கின்றார்கள். ஆனால் பிள்ளைகள் அந்த அம்மாவையே நினைக்க மறந்து விடுகின்றார்கள்.என நினைக்க பத்மாவிற்கு வேதனையாக இருந்து .
கோபத்தில் ஏதேதோ பேசினாள்.
எந்த ஒரு நல்ல விடயத்தையும் வயோதிபர்களுக்கு செய்ய நினைத்தால் அப்போதே அந்த நிமிடத்திலேயே செய்திட வேண்டும் என்பதை உங்களைப்போன்ற மகன்கள் மட்டுமல்ல மகள்களும் உணர்ந்திட வேண்டும் என பத்மா ரொம்பவே மனவேதனையுடன் குமாரை பார்த்து கூறினாள்.
முற்றும்.