இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன் ஒரு நபரை கடத்தி அவரை இரகசிய கடற்படை முகாம் ஒன்றில் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
13 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) அண்மையில் கைது செய்யப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேரலலகே சாந்த சமரவீர என்பவரை 2010 ஜூலை மாதம் பொலிஸ் பரிசோதகர் சமன் குமார திஸநாயக்க கடத்தி சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயல்திட்டம் (ஐ டி ஜே பி) காணாமல் போன சமரவீர கடைசியாக, திருகோணமலையில் அடந்த காடுகள் பரந்த மலைகளில் உள்ள கடற்படை புலனாய்வாளர்களால் நடத்தப்படும் ஒரு இரகசிய தடுப்பு முகாமில் மறைத்து வைக்கப்பட்டிருந்து காணப்பட்டதாக அறிக்கை ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
யுத்தத்தின் இறுதிகாலப் பகுதியில், கொழும்பு மற்றும் அதன் புறநகரிலிருந்து 11 ஆடவர்கள் கடத்தப்பட்ட வழக்குத் தொடர்பில் கவனம் செலுத்திய அந்த அறிக்கை, அவர்கள் காணாமல் போவதற்கு முன்னர்- கன்சைட் தடுப்பு முகாம்-அல்லது ‘கோட்டா முகாம்’ என்ற இடத்தில் எப்படி கடற்படையால் கைது செய்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு நம்பத்தகுந்த சான்றுகள் உள்ளன என்று விவரித்திருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை, பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்கள் மற்றும் உள்தகவல்கள், நீதிமன்ற ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கன்சைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர் குறித்த விவரங்கள் வெளியாயின. அதில் ஒருவர் கேகாலை எக்கிரியாகலவைச் சேர்ந்த சாந்த சமரவீர மற்றொருவர் குருநாகல இப்பகாமுவப் பகுதியச் சேர்ந்த நிசாலன்சல விதாரணராட்சி.
அதே கன்சைட் முகாமில் கடற்படை புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்படும் ஒரு நபரான பசநாயக்க முதலியான்செலகே விஜயகாந்த், அங்கு ஒரு வருடம் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, இந்த இருவரும் தன்னுடன் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர் என்று குற்றப்பிரிவு விசாரணைப் பிரிவினரிடம் நீண்ட காலத்திற்கு முன்னரே தெரிவித்துள்ளனர்.
எனினும், இலங்கை பொலிசார் எந்த சந்தேக நபரை இதுவரை கைது செய்யவில்லை.
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடரில் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கும் இடையே இருக்கும் அபாயகரமான தொடர்பை பொலிசாரே வெளிப்படுத்துவதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும்.
எனினும், இப்படியான தொடர்பு குறித்து அதிகாரிகள் வாய் திறக்கவில்லை.
ஐ டி ஜே பி இன் ‘இலங்கை கடற்படை: கூட்டாகக் கண் மூடி மௌனம்’ அறிக்கையில் , ஆட்களைக் கடத்தி கப்பம் பெறும் திட்டமிட்ட நடவடிக்கையில் பொலிஸும் கடற்படையின் கூட்டுச் சதி இருந்திருக்கக் கூடுய சாத்தியத்தையும் ஆராய்ந்தது.
2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாந்த சமரவீரவின் மூத்த சகோதரி லலிதா ஜயசிங்க தனது சகோதரர் காணாமல் சென்றது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு செய்திருந்தார். அவர் 22 ஜூலை 2010 அன்று அலாவ பொலிஸால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது குடும்பத்தார் 25ஆம் திகதி-ஞாயிற்றுக்கிழமை-சட்டத்தரணி சூல சஞ்சீவ அதிகாரியுடன் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்திருந்தனர். ஆரம்பத்தில் சாந்தவை தாங்கள் தடுத்து வைக்கவில்லை என்று மறுத்தனர், எனினும் சட்டத்தரணி தலையிட்டவுடன் அவரை முன்ன்நிறுத்தினர். பிறகு லலிதா ஜயசிங்கவிடம் அவரது சகோதரர் திங்கள்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிசார் கூறினர்.
ஆனால், துரதிஷ்ட வசமாக அது நடைபெறவில்லை.
’’பின்னர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமக்கு ஒரு செய்தி கிடைத்தது. பின்னர் நாங்கள் மருத்துவமனைகுச் சென்ற போது, எனது சகோதரர் கழிப்பறையில் இருந்த ஜன்னல் மூலம் தப்பித்தார் என்று அவர்கள் கூறினர். அவர் ஜூலை 28ஆம் திகதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவாரா என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். அவர் பொலிஸ் நிலையத்திலும் இல்லை அல்லது நீதிமன்றத்தில் நிறுத்தப்படவும் இல்லை.
அநாதரவான நிலையில் லலிதா ஜயசிங்க இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியை நாடினார்.
“விசாரிப்பதற்காக நாங்கள் பல முறை அந்த ஆணையத்திற்குச் சென்றோம். ஒவொரு முறையும் அவர்கள் பொலிசாருக்கு சார்பாகவே நடந்துகொண்டனர்.”
சாந்த சமரவீர காணாமல் போனது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை மேற்கொண்டதாக அறிக்கை எதையும் ஜெ டி ஸ் ஊடகம் அறிந்திருக்கவில்லை.
கடந்த 2008-09 ஆண்டுகளில் கடத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 11 ஆடவர்கள் கன்சைட்டில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பில், இலங்கையில் மிகவும் மதிப்பளிக்கப்பட்ட கடற்படைத் தளபதியான வசந்த ஜயதேவ கரணாகொட ஒரு முக்கிய சந்தேக நபராக உள்ளார்.
கடந்த 2021இல், இலங்கையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்கு இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
கன்சைட் முகாமில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டிலிருந்து தப்பித்து வெளியேறினார்.