நடராசா லோகதயாளன்
அரசாங்கக் கூட்டம் ஒன்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கலந்து கொண்ட தனக்கு, அந்தக் கூட்டத்திலேயே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்டச் செயலகத்தில் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான ஆளுநர. பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை (28) அன்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி வி கே சிவஞானம், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பொலிஸ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்குபெற்றனர்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியால் ஏற்படும் பிரச்சனைகள், அதைத் தடுக்க முடியாமல் இலங்கை அரசு திணறுவது, வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவது ஆகியவை இந்தக் கூட்டத்தில் முக்கியமான விவாதிக்கப்பட்டன.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இருதரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதன்போது யாழ்ப்பாணம் மீனவ சம்மேளண உப தலைவர் பிரான்சிஸ் இரட்ணகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை நோக்கி ஒருமையிலும் வன்சொற்களைப் பயன்படுத்தியவாறும் நெருங்கிய சமயமே நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு அந்தக் கூட்டத்திலேயே “கொலை மிரட்டல்” விடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
”கட்சிக்காரரை கொண்டு வந்து ஒருங்கிணைப்புக் கூட்டத்தை கட்சிக் கூட்டமாக மாற்ற வேண்டாம். அத்தோடு எமக்கு இது கொலை அச்சுறுத்தல்” எனத் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அந்துமீறல் காரணமாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின்போது செயலகத்தில் ஓர் கலவர நிலை ஏற்பட்டது.
இதன்போது யாழில் தொடரும் இந்திய மானவர்களின் எல்லை தாண்டல் காரணமாக உள்ளூர் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சணைகளைச் சுட்டிக்காட்டிய சமயம் இதனைத் தடுக்க ”இரு வழிவகைகளை தான் ஆலோசணையாக முன் வைப்பதாகவும் அதில் ஒன்று வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9 பேரும் கூட்டாக இந்தியா சென்று பேச முன்வருமாறு அழைத்தபோதும் ஐவர் மட்டுமே அதற்கான ஒப்புதலை தெரிவித்துள்ளனர் எஞ்சிய நால்வரும் இதுவரை பதிலளிக்கவில்லை” என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கருத்துரைக்கையில், ”சாதாரண டெங்கு நுளம்பு விடயத்திற்கு சட்ட நடவடிக்கை, ஆனால் இந்திய மீனவர் விடயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களா சென்று பேச வேண்டும். அவ்வாறானால் கடற்படையினர் எதற்கு அவர்கள் மக்களின் நிலத்தை பிடித்து குந்தியிருக்கின்றனர். கடற்படையினர் வெளியேறட்டும் நாம் சென்று பேசுகின்றோம் அல்லது அரசும் அரச அமைச்சரும்தான் அதற்கு தீர்வு காண வேண்டும்” என அவர் கூறிய சமயம் ”கடற்படையினர் நடவடிக்கை எடுக்கின்றனர் இருப்பினும் போதாது இதில் அரசும் அமைச்சரும் உரிய தீர்வை எட்ட வேண்டும். நாம் சென்று பேசுவதானால் பேசுகின்றோம் அமைச்சர் பதவியிலிருந்து விலகுங்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
இவ்வாறு இணைத் தலைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டபோது வடமராட்சியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மீனவ சம்மேளண உப தலைவர் பிரான்சிஸ் இரட்ணகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை ஒருமையில் விளித்ததோடு ”நீ, நான், வெளியே வா பார்ப்போம், நான் வடமராட்சியான் நீ வன்னியான்” எனப் பிரதேச வாதங்களையும் கிளறி கடும் சண்டித் தனத்தில் ஈடுபடுவதையும் அரங்கிலிருந்தவர்கள் கண்டனர்.
இவ்வாறு ஓர் அமைப்பின் பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினரை தகாத வார்த்தைப் பிரயோகங்களில் கூறியபோதும் இணைத் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் அதைக் கண்டிக்காமல், சண்டித்தனத்தில் ஈடுபட்டவருக்குச் சார்பாக கருத்து தெரிவித்துக்கொண்டிருந்த அதே நேரம் இரண்டாவது இணைத் தலைவரான ஆளுநர் வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.