வடக்கு , கிழக்கு மாகாணங்களை சிங்களவர்களிடம் இருந்து தமிழர்கள் பறிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இனவாத பித்தலாட்டத்தை ஊடகங்களில் கட்டவிழ்த்து விட்டுள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிங்கள மக்களை ஏமாற்றி தமிழர் மீது இனவாதத்தை வீசி தன்னுடைய அரசியல் பிழைப்பை நடத்தும் வீரசேகர இலங்கைத்தீவு ஈழம் என்ற பெயரில் தமிழர்களால் ஆளப்பட்டிருக்கும் போது கள்ளத் தோணியில் வந்து குடியேறிய விஜயனின் பரம்பரை என்பதை இடை இடையே மறந்து விடுகிறார். பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க சொன்னது போல சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதிக்க வேண்டும்.
பிரித்தானியரின் காலணித்துவ ஆட்சியில் நிர்வாக இலகுவாக்கலுக்காக தமிழர் தேசம் ஏனைய நிர்வாக அலகுகளுடன் இணைத்து ஒரே அலகாக கோல்புறுக் அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட்டமையே தமிழரின் சுயாட்சி நசுக்கப்பட காரணமானது. பின்னர் 1948 ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் பிரித்தானியரால் வழங்கப்பட்டது. ஆனால் தமிழர்களுக்கு அது சுதந்திரம் அல்ல மேலும் அடிமைப்படுத்தலாக சிங்கள ஆட்சியாளர்களால் வலுவடைந்தது அத்துடன் தமிழரின் சுயநிர்ணய உரிமைகள் கபளீகரம் செய்யப்பட்டன.
வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பில் 1950 ஆண்டு அம்பாறை மாவட்டம் கல்லோய திட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பித்து பின்னர் அல்லை ,கந்தளாய் , மணலாறு என வியாபித்துள்ளது தமிழரின் பூர்வீக நிலங்கள் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களினால் பறிக்கப்பட்டுள்ளன இப்படிப்பட்ட உண்மையை மறைத்து சிங்கள மக்கள் மத்தியில் மேலும் இனவாதத்தை தூண்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் சிங்கள மக்களிடம் இருந்து பறி போகிறது என பித்தலாட்டம் போடுகிறார் வீரசேகர என குறிப்பிடப்பட்டுள்ளது.