நடராசா லோகதயாளன்
’இது எப்படி இருக்கு’ கதை தான் இதுவும்.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள வீடுகளின் மேல் பொருத்தும் சூரிய மின்கலம் வீட்டு உரிமையாளர்களிற்கு சொந்தம் இல்லை என்ற செய்தி இப்போது வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள 50 லட்சம் ரூபா பெறுமதியான 25 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டாலும் அதன் உரிமை ஒர் தனி நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும் ஆபத்துள்ளதாக தெரிவித்து அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
அதாவது வீட்டில் இருக்கலாம், ஆனால் வீடு சொந்தமில்லை என்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமை (28) அன்று யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த விடயம் வெடித்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான ஆளுநர. பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஓர் நிறுவனம் ஊடாக 25 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அதில் 3 மில்லியன் ரூபா பெறுமதியில் வீடும் 2 மில்லியன் ரூபாவில் சூரிய மின்கலமும் என்ற வகையிலேயே 5 மில்லியன் ரூபாவாகும் என ஆளுநர் தெரிவித்தார்.
”சூரியகல வீட்டுத் திட்டப் பயணாளிகள் தெரிவில் ஏற்பட்ட தாமதம் பட்டியலை தயாரிக்கவும் தாமதம் ஏற்பட்டது. இதேநேரம் தற்போது யாழிற்கு 16 ஆயிரத்து 500 வீடுகள் வேண்டும். இந்த வீட்டு வசதிக்காக தேசிய வீடமைப்பு வீடு 830 உம் காணி இருந்தும் வீடு அற்றவர்களின் பட்டியலும் இணைத்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தன் தெரிவித்தார்.
இதன்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ”அமைக்கப்படவுள்ள வீடுகளின்மேல் சூரிய மின்கலமும் பொருத்தப்படவுள்ளது. அவ்வாறு பூட்டிய சோலாரின் மின்சாரம் நிறுவனத்திற்கே சொந்தம் இந்தப் பிரச்சணை தொடர்பில் ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசவில்லை” என கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கதைக்கவில்லை என்பது எனக்குத் தெரியாது எனக் கை விரித்தார் ஆளுநர்.
”என்ன தெரியாது என்கின்றீர்கள் இது தொடர்பாக நானே நேரடியாக உங்களிற்கு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு பதில்போட்ட நீங்கள் எவ்வாறு தெரியாது எனப் பதிலளிக்கின்றீர்கள்?” என மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கோரிய போது சமயம் இவற்றின் காரணமாகவே வீட்டுத் திட்டப் பட்டியலை தயாரிக்க முடியவில்லை என்று பதில் வந்தது.
இதை அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வலியுறுத்தினார்.
இதனால் வீட்டுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி மீண்டும் கலந்துரையாடி தீர்மானிப்போம் என ஆளுநர் தெரித்தார்.