அண்மையில் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலை யில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் மேற்படி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு, 2.5மில்லியன் ரூபா பெறுமதியிலான கண் பரிசோதனை இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளரால், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, கனடா மொன்றியால் நகரத்தில் நீண்டகாலமாக இயங்கும் புறுட்ஸ் கபி (Fruits Haby) தமிழர் நிறுவன உரிமையாளரான சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்களின் 2.5மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பில் கொள்வனவு செய்யப்பட்ட, ஜப்பான் தொழிநுட்பத்துடன் கூடிய இப்பரிசோதனை இயந்திரம் வைத்தியசாலை கண்சிகிச்சைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், வைத்தியசாலை நிருவாகத்தினரால் தெரிவுசெய்யப்பட்ட 100 பயனாளிகளுள் முதற்கட்டமாக 39 பேருக்கான இலவச மூக்குக் கண்ணாடிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சுகந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி.துஸ்யந்தன், கண் சிகிச்சை நிபுணர், வைத்தியகலாநிதி.ஞானரூபன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அருட்தந்தை யூட் அமலதாஸ் அடிகளார், புறுட்ஸ் கபி நிறுவன உரிமையாளர் சின்னத்துரை சண்முகலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், வடக்குமாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கிளிநொச்சி நகர வர்த்தகர் சங்கத்தினர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சிக் கிளையினர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்பரிசோனை இயந்திரம் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் ஆகியவை வழங்கப்பெற்றதன் பின்னர் வைத்தியசாலை நிர்வாகத்தால் கொடையாளர் புறுட்ஸ் கபி (Fruits Haby) தமிழர் நிறுவன உரிமையாளரான சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கப்பெற்றது.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.
செய்தி;- சத்தியன்