இயக்கத்தின் துணை முதன்மைத் தலைவர் கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை
ஒரு நாட்டின் கலாசார பண்பாடு என்பது இனம், மதம், மொழி என்ற ரீதியில் சமூகத்துக்கு சமூகம் வேறுபட்டு காணப்படுகின்றது. எனினும் அதனை அந்த சமூகம் சார்ந்தோர் நாடு கடந்தாலும் விட்டுவிடுவதில்லை. அந்தவகையில் புலம்பெயர்ந்து சென்றும் தம் கலாசார பண்பாட்டினை கட்டிக்காக்கும் விதமாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இவ்வருடம் பொன்விழா காணும் உலகத் தமிழப் பண்பாட்டு இயக்கத்தின் துணை முதன்மைத் தலைவரும் தற்போது இலங்கையில் தங்கியிருந்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்திவருகின்றவருமான கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்கள் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பகிர்ந்து கொண்ட விடயங்கள் தொகுப்பாக பின்வருமாறு,
தமிழர்கள் தங்கள் பண்பாட்டை மறவாமல் அதனை தங்களின் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம். இது 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் அகிலத் தலைவர் வீரப்பன்.
1994ஆம் ஆண்டு நான் கனடா சென்றபோது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடா கிளைக்கு மறைந்த அமரர் செம்மல் செல்லையா தலைவராக இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2006ஆம் ஆண்டு ஜுலை 7ஆம் திகதி கனடா சட்டத்திற்கு இணங்க அங்கு பதிவு செய்யப்பட்டது. இப்பதிவானது சட்டபூர்வமாக ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த இயக்கமானது கனடா, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, தென் ஆபிரிக்கா, லண்டன் இவ்வாறு பல நாடுகளிலும் உள்ள இனம், மொழி, மதம், அரசியல் என்பனவற்றை கடந்து தமிழர்களின் பண்பாடுகளை விரும்பக்கூடிய பல்லாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களுடன் 50ஆவது ஆண்டினை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
அத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அனைத்துலக மாநாட்டினை நடத்துவதுடன் அதற்கு முன்னதாக பேரவை கூட்டத்தினையும் நடத்தி வருகின்றது.
இம்மாநாட்டில் நம் பண்பாட்டினை புதியவர்களிடம் எவ்வாறு எடுத்துச் செல்வது. நம் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் இதனை பின்பற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதோடு இளம் சந்ததியினர் அதனை முன்னெடுத்துச் செல்வதற்காக திருக்குறள் போட்டிகள், பண்பாடு தொடர்பான போட்டிகள் என பல போட்டிகளை நடத்தி அவர்களை வழிநடத்துகின்றோம். அத்துடன் அவ்வப்போது பண்பாடு தொடர்பான கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றோம். குறிப்பாக வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் பண்பாட்டினை மறந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றோம்.
அந்தவகையில் கடந்த 2017ஆம் ஆண்டு எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13ஆவது அனைத்துலக மாநாடும் பேரவை கூட்டமும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கைலாசபதி அரங்கில் அகிலத் தலைவர் கனடா வாழ் வினாசித்தம்பி துரைராஜா, செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
சினிமாத்துறையை சார்ந்தவர்களை அழைத்து வந்தால்தான் மக்கள் வருவார்கள் என்ற எண்ணக்கருவை மாற்றி எங்கள் இயக்கத்தின் மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்துடன் தமிழ் அறிஞர்களையும் இலக்கியவாதிகளையும் முன்னிறுத்தி நடைபெறுகின்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது.
2017ஆம் ஆண்டுக்கு பின்னர் 2019ஆம் ஆண்டில் சர்வதேச ரீதியாக ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாகவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் கடந்த ஆண்டுகளில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகில உலக மாநாட்டினை நடத்த முடியாமல் போனது. எனினும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மற்றும் செப்டெம்பர் முதலாம் திகதிகளில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 50ஆவது பொன்விழா மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக பேரவைக்கூட்டமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டிற்கு அமெரிக்க கிளை தலைவர் சட்டத்தரணி மார்கண்டு விக்னேஸ்வரன திட்ட அமைப்பாளராக செயற்பட்டு வருவதுடன் இவருடன் செயற்குழு செயலாளர் நடா ராஜ்குமார், ஊடகத்துறைப் பொறுப்பானர் லோகேந்திரலிங்கம் ஆகியோரும் இணைந்து செயற்படுகின்றனர்.
கொரோனா காரணமாக நாங்கள் இயங்காது இருந்த காலப்பகுதியில் எம் இயக்கத்துடன் தொடர்பற்ற சிலர் எம் இயக்கத்தின் பெயரை முன்னிலைப்படுத்தி செயற்பட்டனர். எனினும் மக்கள் அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை ஆராய்ந்து அறிந்து விழிப்புடன் செயற்படுவது நன்று. எமக்கு சர்வதேச ரீதியாக பல நாடுகளிலும் கிளைகள் உள்ளன. அவை அனைத்துமே சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டவை. எனவே மக்கள் வீணான வதந்திகளை நம்ப வேண்டாம்.
கலாசாரம் மற்றும் பண்பாடு
எம் மக்களின் கலாசார பண்பாடுகள் குறித்து கவலையடையத் தேவையில்லை. முன்னரை விட தமிழர்களின் பண்பாட்டு கலைகளை பிள்ளைகள் விரும்பி பின்பற்றுகின்றனர். போட்டிகளில் பங்குபற்றி தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வெற்றிகளை பெறுகின்றனர். இந்த நிலை தொடர வேண்டும். அதற்கானதொரு முயற்சியே எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் உருவாக்கம்.
நாம் நமது பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதுடன் அதனை மற்றவர்களிடம் எடுத்துச் சென்று அதனை கௌரவப்படுத்த வேண்டும்.
ஆக இவ்வருடம் பொன் விழா காணும் எமது இயக்கத்தின் மாநாட்டினை அறிவிப்பதோடு எம்மக்களுக்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் 2024ஆம் ஆண்டு புதுவருட வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி: இலங்கை ‘வீரகேசரி’ பிரதம ஆசிரியர் கஜன் அவர்கட்கு