கதிரோட்டம்- 05-01-2024
உலகத் தமிழர் பேரவையும் சிறந்த இலங்கைக்கான பௌத்த சங்கமும் ஒன்றாக வெளியிட்ட இமாலயப் பிரகடனமானது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு சில விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களை ஏமாற்றிய வண்ணம் தங்கள் பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரித்து அதனால் இலாமடைந்த தென்னிலங்கை அரசியல்வாதிகளும் ‘தமிழர் தலைமைகள்’ என்று தங்களை அழைத்து கொண்டவர்களும் காலத்திற்கு காலம் தீர்வு காணும் விடயங்களில் தங்களுக்கு அக்கறையுள்ளது போல காட்டி. அதன் மூலம் காலத்தை நீட்டியும் வீணாக்கியும் தொடர்ந்த வண்ணம். அந்த காலப்பகுதியில் தங்கள் நலன்களைப் பேணும் முயற்சிகளில் கவனத்தை செலுத்தும் வகையில் காய்களை நகர்த்திக் கொண்டே இருப்பார்கள்.
இலங்கை அரசியலில் தமிழ்த் தேசிய அரசியலானது. கிழக்கிலும் வடக்கிலும் தளத்தைக் கொண்டதாக இயங்கிவந்தது. தூய தமிழ்த் தேசிய அரசியலும் அதனோடு தூர நின்று பயணித்த இடதுசாரி அரசியலும் வடக்கு கிழக்கு மக்களுக்கு பரிட்சியமானதாக நகர்ந்து கொண்டிருந்தது.
இதேவேளை. ‘கொழும்பு அரசியல்’ என்றவொரு ‘சக்தி’ தனது அரசியல் தளத்தை கொழும்புத் தலைநகரில் நிர்வகித்த வண்ணம் கிழக்கு மாகாணம் மற்றும் கண்டி போன்ற நகரங்கள் ஆகியவற்றில் வாழ்ந்து வந்த இஸ்லாமிய மக்களுக்கு தலைமை தாங்குகின்றவர்கள் போன்று அரசியல் அதிகாரத்தைத் தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொண்டு கொழும்பில் வாழ்ந்த வண்ணம் அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக அந்த ‘கொழும்புத் தலைமைகளுக்கு’ பாராளுமன்றக் கதிரைகளும் அமைச்சர் பதவிகளும் தாராளமாகக் கிட்டியவண்ணம் இருந்தன.
இலங்கையின் இஸ்லாமிய மக்களின் அரசியல் வரலாற்றில் இந்த ‘கொழும்புத் தலைமை’ கொழும்பு அரசியல் என்பதை முதலில் உடைக்கக் கிளம்பியவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சரும் கல்முனையை வசிப்பிடமாகக் கொண்டவருமான காலஞ் சென்ற எம்.எச்.எம். அஸ்ரப் ஆவார். தொடர்ந்து அவரோடு பல கிழக்கிலங்கை இஸ்லாமிய தலைவர்களும் புத்திஜீவிகளும் கைகோர்த்து நின்றதனால ‘கொழும்புத் தலைமைகளை’ உடைத்தெறிந்து தாங்கள் தனித்துவமான இஸ்லாமிய மக்களுக்கான அரசியலை தொடர்வதற்கு அவர்களுக்கு வழி சமைத்துக் கொடுத்தது.
இதன் காரணமாக கொழும்பை தங்கள் வாசல்தலமாகவும் அரசியல் தலைமையகமாகவும் கொண்டிருந்த எம்.எச். எம் மொகமட் போன்றவர்கள் தங்கள் குடும்பத்தினர்களை அரசியல் பதவிகளில் அமர்த்த முடியாமற் போய்விட்டது.
இதே போன்ற ஓரு சந்தர்ப்பவாத அரசியல் இலங்கை தமிழர் அரசியல்ல் தற்போது காலூன்றத் தொடங்கியுள்ளதை நாம் அவதானிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை உறுதியாக இருந்த வரைக்கும் ‘வால்களைச் சுரட்டிக் கொண்டும் வாய்களை மூடிக் கொண்டும் இருந்தவர்கள் தற்போது ‘கொழும்புத் தமிழ் அரசியல் என்னும் அத்தியாயத்தை எழுதுவதற்கு தங்கள் கைகளில் பேனாக்களைத் தூக்கிய வண்ணம் நம் தாயக மண்ணுக்கு வந்து போகின்ற காட்சிகளை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறாக கடந்த 2009ம் ஆண்டிற்கு பின்னர் விடுதலைப் புலிகளின் முப்படைகள் கொண்ட சிறு அரசு செயலிழந்து போகவே தங்கள் கால்களை முன்வைக்கத் தொடங்கினார்கள் புலம் பெயர்ந்தவர்கள் சிலர்.அவர்களுக்கு தாங்களும் ‘கொழும்புத் தலைமைகளாக இருந்து வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றவர்களாக திகழ வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி கபடத் தனமான படிக்கட்டுக்களில் நகர்ந்து இறுதியில் ‘இமாலயப் பிரகடனம்’ என்னும் தங்கள் நலன் சார்ந்த ஆயுதத்தை கைகளில் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
இவ்வாறானவர்களோடு ஏற்கெனவே கொழும்புத் தலைமைகளாக தங்களை அடையாளமிட்டு கொண்ட ஓரிரு தமிழ் அரசியல் கரங்கள் அந்த புலம் பெயர் கரங்களோடு இணைந்து கொண்டதனால் எழுந்தது தான் இந்த ‘இமாலயப் பிரகடனம்’ என்றே நாம் கருதுகின்றோம்.
எமது தாயகத்தின் தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைத்துவத்தை தாங்கள் தமது கைகளுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இந்த ‘புதிய’ முயற்சியில் கபடத் தனமான எண்ணங்களுடன் ‘களம்’ இறங்கியுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் ஆயிரக்கணக்கான மாவீரர்களின் குடும்பத்தினரோ அன்றி வேறு துறைகளில் அடையாளம் காணப்படுபவர்களோடு ‘இமாலயப் பிரகடனத்தின் ஊடாக எமது தலைமையை தங்கள் கைகளுக்குள் எடுத்துக் கொண்டவர்களே அடுத்த கட்டமாக வடக்கு கிழக்கு தலைமையையும் கொழும்பு அரசியலையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதற்கான ஒரு முன்னேற்பாடு என்றே நாம் கருதுகின்றோம்.
இவ்வாறான ஒரு தந்திரம் நிறைந்த பிரகடனத்தை தமிழர்களின் நலன் கருதி நம் கைகளில் ஏந்தி வைத்துள்ளோம் என்று கூறுகின்றவர்களும் எமது முன்னைய தலைவர்களைப் போன்றோ கால் நூற்றாண்டு அரை நூற்றாண்டு என்று ‘காலத்தை’ கடந்துகின்றவர்களாகவே இருபார்கள் என்றும் நாம் கருத வேண்டியும் உள்ளது
எனவே எம்ககுமு; வடக்கு கிழக்கு தமிழ்த் தேசிய இருப்பிற்குமு; இந்த ‘இமாலயப் பிரகடனம்’பக்கபலமாக இருக்காது என்பதையும் இதனால் முன்னரைப் போன்றே கொழும்புத் தலைமைகளே வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களையும் இஸ்லாமிய மக்களையும் தென்னிலங்கை வாழ் கபடத்தனமான அரசியல் தலைவர்களுக்கு ; அடைவு’ வைத்துவிடுவார்கள் என்பதையே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அத்தோடு. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாராவது ‘இமாலயப் பிரகடனத்தை பற்றி உயர்த்தி பேசினால் அவர்கள் கூட ஏதோ வகையில் ‘வாங்கப் பட்டுள்ளார்கள்’ என்பதே எமது முடிவாக இருக்க முடியும்.