பு.கஜிந்தன்
மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ரணில் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கமானது புதிய ஆண்டிலிருந்து நினைத்துப் பார்க்க முடியாத வரிச் சுமைகளை மக்கள் மீது திணித்துள்ளார்கள். இதை மக்கள் மீதான வரி அடக்குமுறை என்றே எமது அமைப்பு கருதுகின்றது.
மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்ததைப் போல் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டு மக்களை வரிச் சுமைகளால் மிதித்து வருகின்றது.
இந்த அரசாங்கம் மக்களிடம் வரியை பெற்றுக் கொண்டு மக்களுக்கு பல்வேறான நிவாரணங்களை வழங்குகின்றோம் என்று கூறிக் கொண்டாலும் உண்மையிலேயே சாதாரண மக்களுக்கு எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என்பதை உண்மை.
மாறாக இந்த நாட்டில் உயர் தொழில் புரிகின்ற குறிப்பாக வைத்தியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் போன்ற துறை சார்ந்த தரப்பினர்களுக்கு மட்டுமே அரசாங்கம் நிவாரணங்களையும், சலுகைகளையும் வழங்கியுள்ளது. ஆனால் அடிமட்டத்தில் இருக்கின்ற சாதாரண மக்கள் மென்மேலும் சுமைகளுக்கும் நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கி மீண்டெழ முடியாதவாறு தவிக்கின்றார்கள்.
இதனை இந்த அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஜனாதிபதி ரணில் தேர்தலில் வெல்வதை நோக்கமாகக் கொண்டே நாட்டில் உயர் தொழில் புரிகின்ற வர்க்கத்தினருக்கு சலுகைகளை வழங்கியுள்ளார். ஆனால் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு இன்றும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படாமல் வெறும் கனவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளமையால் மலையக மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளார்கள்.
இதனை மலையக அரசியல் தலைமைகளும் உணர்ந்து கொண்டு தங்களுடைய மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதையும் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு கேட்டுக் கொள்கின்றது. மக்களிடமே வரியைப் பெற்று மக்களுக்கு நிவாரணம் நிவாரணம் வழங்குவதாக கூறிக்கொண்டு மக்களின் தலையில் மிளகாய் அரைக்கின்ற செயற்பாட்டை ரணில் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா காட்டமாக தெரிவித்துள்ளார்.