– யாழ்ப்பாண மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் க.சதீஸ் தெரிவிப்பு
பு.கஜிந்தன்
இன்றையதினமும் நாளையதினமும் சுகயீன விடுமுறை போராட்டத்தை நடாத்துமாறு எங்களுக்கு பொது சுகாதார சங்கத்தின் தலைமையினால் கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் இல்லாது விடுமுறையினை அறிவித்து இந்த போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றதாக யாழ்ப்பாண மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கணேஸ்வரன் சதீஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த போராட்டத்திற்கான காரணம், சுகாதார அமைச்சிற்கு, நீண்ட காலமாக எங்களுடைய கொடுப்பனவுகளை அதிகரித்து தருமாறு நாங்கள் கோரியிருந்தோம். ஆனால் சுகாதார அமைச்சு இன்றுவரை எந்தவிதமான பதில்களையும் தராமல் தற்பொழுது குறித்த உத்தியோகத்தர்கள் தொடர்பில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களது கொடுப்பனவுகளை அதிகரித்து வழங்கியுள்ளது. ஆனால் எங்களுடைய துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் நிறைவுகாண் மருத்துவ சேவையை சேர்ந்த உத்தியோகத்தர்களது கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான எந்தவித முன்னேற்றங்களும் காணப்படவில்லை.
எனவே ஒரு நியாயமற்ற முறையில் சுகாதார அமைச்சு ஈடுபடுவதை கண்டித்து இன்றையதினம் நாங்கள் இந்த சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதனடிப்படையில் தாதியர்கள், நிறைவுகாண் மருத்துவ சேவையை சேர்ந்த உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களாகிய பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், மருந்தாளர்கள், ஆய்வுகூட உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்றையதினம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த இரண்டு நாட்களின் பின்னர் சுகாதார அமைச்சு எமது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கா விட்டால் மீண்டும் இதனை விஸ்தரித்து நீண்ட நாட்களுக்கு கொண்டு செலாவதற்காகவும் எங்களுடைய பொது சுகாதார சங்கத்தின் தலைமை தீர்மானித்துள்ளது.
எங்களுடைய கோரிக்கைகளாக, முக்கியமாக எங்களுக்கான பிரயாணப்படி மிகவும் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஒவ்வொரு மாகாணங்கள் ஒவ்வொரு விதமான கொடுப்பனவுகளை வழங்கி வருகிறது. தற்காலத்தில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்ற விதத்தில் அந்த கொடுப்பனவு தீர்மானிக்கப்படவில்லை. ஆகையால் பிரயாண படி கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் இதர கொடுப்பனவுகளையும் அதிகரித்து தருமாறு கோரியுள்ளோம்.
நீண்ட காலமாக நாங்கள் இது குறித்து அறிவுறுத்திய நிலையிலும் அது சம்பந்தமான எந்தவொரு நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு இன்றுவரை எடுக்கவில்லை என்பதால் தான் இன்றைய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்றார்.