மகர ஜோதி தரிசனத்துக்கான பூஜை நேரம் மற்றும் வழிமுறைகளை சபரிமலை திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஜனவரி 13 வரை இணையதளத்தில் முன்பதிவு செய்த 80 ஆயிரம் போ் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். முன்பதிவு இல்லாத பக்தா்கள் யாரும் சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மகர விளக்கு பிரசாத சுத்திக் கிரியைகள் நடைபெற உள்ளன.
ஜனவரி 15-ந்தேதி முன்பதிவு செய்த 40 ஆயிரம் போ் மட்டுமே சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட உள்ளனா்.
15-ந் தேதியிலிருந்து வருகிற18-ந்தேதி வரை மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப சாமியின் ஊா்வலம் நடைபெற உள்ளது. வருகிற 18-ந்தேதி வரை ஐயப்ப பக்தா்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஜனவரி 19-ந்தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.
இதற்கிடையே பொங்கல் விடுமுறையையொட்டி 2 நாட்களுக்கு பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு அதிக விடுமுறை தினங்கள் என்பதாலும், அடுத்த 10 நாட்களில் மகர விளக்கு சீசன் நிறைவடைய இருப்பதாலும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அடுத்த சில நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு வசதி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வருகிற 14-ந்தேதி 50 ஆயிரம் பேரும், 15-ந்தேதி 40 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்துக்காக இணைய வழியில் முன்பதிவு செய்ய முடியும்.
கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு இவ்விரு நாட்களிலும் குழந்தைகள், பெண்கள் வருவதை தவிர்க்க வேண்டும். விடுமுறை முடிந்த பிறகு வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத்தது. அதன்படி நேற்று முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டதால் சபரிமலைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே வருகின்றனர். இதனால் பக்தர்கள் வருகை குறைந்தது. கடந்த நாட்களில் இருந்ததைப்போன்று கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.