நேற்றையதினம் வியாழக்கிழமை குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்தவாரம் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கு மாகாணத்திற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அதன் ஒருகட்டமாக, 05.01.2023 அன்று வவுனியாவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.
அதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து, “ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் செய்யப்பட்ட தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நடந்தது?” என்பதற்கான பதிலை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுப்பதற்காக அங்கு சென்றிருந்தனர்.
எனினும், அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள், காவல் துறையினரால் வழிமறிக்கப்பட்டார்கள். அதன்போது, ஜனநாயக நாட்டில் தமக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமையை ஆட்சேபித்து, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அவ்விடத்தில் நின்றவாறு அகிம்சை வழியில் தமது எதிர்ப்பை பதிவுசெய்ய முட்பட்டிருந்தனர்.
அச்சந்தர்ப்பத்தில், கவனயீர்ப்பில் ஈடுபட்ட தாய்மாரை சினங்கொள்ளச்செய்து, அங்கு வலிந்ததொரு அமைதியின்மையை தோற்றுவித்த காவல்துறையினர், கைகளில் ஒப்படைத்த தம் உறவுகளுக்கு நீதி கேட்டு தெருப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை மனிதநேயமற்ற முறையில் பலவந்தமாக அடக்கி ஒடுக்கி பேருந்துக்குள் இழுத்துச் சென்று அடாவடியாக கைதுசெய்துள்ளனர்.
இது மிக மோசமானதொரு உரிமை மறுப்பாகும். இதுபோன்ற ஜனநாயக விரோதங்கள், நாட்டினுடைய எதிர்கால முன்னேற்றத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தவல்லன. ஜனநாயகப் பெயர் பொறிக்கப்பட்ட இலங்கை தேசத்தினுடைய ஆளுகைத்தரப்பின் ஒற்றை வாக்குறுதிக்கு மதிப்பளித்து, தமது உற்றச் சொந்தங்களை உயிர்ப்புடன் கையளித்த உறவுகள், தம் அன்பிற்குரியவர்களை மீளத்தருமாறு, அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது எனக்கேட்டு 14 ஆண்டுகாலமாக தொடர் போராட்டங்களை நடாத்தி வருகிறார்கள்.
அந்தப் போராட்டங்களில் பங்கெடுத்த வயோதிபப் பெற்றோர்களில் பலர் உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டு உயிர்நீத்துள்ளார்களே தவிர, இவர்களுக்கு இதுவரை நீதிகிட்டவில்லை. இதுபோன்று, போரின் பெயரில் படுகாயப்படுத்தப்பட்ட பல்வேறு மனக்காயங்களுக்கு மருந்திட வேண்டிய ஆட்சியாளர்கள், அதனைச் செய்ய முயற்சிக்காது மென்மேலும் காயங்களை ஏற்படுத்திக்கொண்டு உதட்டளவில் நல்லிணக்கம் பற்றிப் பேசுவது முரண்நகையானது.
பாதிக்கப்பட்ட குடிமக்களது நீதி நியாயத்திற்கான குரல்களை, காவல்துறை கரம்கொண்டு அடக்கி தீர்வினைக் காண்பதனூடாக நாட்டை மீண்டும் அழிவுக்கே இட்டுச்செல்வதாக அமையும்.
எனவே, நீதிகோரி குரலுயர்த்திய, வவுனியா வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத் தலைவி திருமதி சி.ஜெனிற்றா காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரை உடனடியாக விடுவிக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினராகிய நாம் மனிதநேய சிவில் அமைப்பென்ற வகையில் வலியுறுத்த கடமைப்படுகிறோம்.
பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்து கருத்துச் சுதந்திரத்திற்கு செவிசாய்த்து ஜனநாயக பண்புடைய உணர்வு வெளிப்பாடுகளுக்கான தடைகளை அகற்றி, நடந்து முடிந்த யுத்தத்திற்கான காரண காரியங்களை கண்டடைந்து அவற்றுக்கு தாமதமற்ற தீர்வினை காண்பதன் மூலமே நாட்டில், உண்மையான நல்லிணக்கத்தை உறுதிசெய்யமுடியும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறோம் – என்றுள்ளது.