இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட சுற்றிவளைப்பு தேடுதல் மற்றும் கைது நடவடிக்கையான நடவடிக்கையான ‘யுக்திய’வை நிறுத்த முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்த கைதுகள் குறித்து கவலை வெளியிட்ட ஐ.நா விமர்சனங்களைப் புறந்தள்ளியுள்ளும் வகையில் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
“யாருடைய அறிக்கையை அடுத்தும் நாங்கள் நிறுத்த மாட்டோம், அப்படித்தான் நடப்போம்” என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
அவிசாவளை பிரதேசத்தில் சமூகப் பொலிஸ் குழுவால் கடந்த வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் பரபரப்புடன் முன்னெடுக்கப்படும் அந்த நடவடிக்கையை ’சட்டத்தை அமல்படுத்த மிகவும் கடுமையான வகையில்’ முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என ஐ நாவின் மனித உரிமைகள் ஆணகை்குழு விமர்சித்துள்ளது. ’ஒபெரேஷன் யுக்திய (நீதி)’ என பெயரிடப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பமான நடவடிக்கையில், சந்தேகத்தின் அடிப்படையில் 25,000 அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘யுக்திய’ நடவடிக்கையை இலங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், மனித உரிமைகள் அடிப்படையில் இதை அணுக வேண்டும் எனவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டுர்க் வலியுறுத்தியுள்ளார்.
”இந்த நடவடிக்கையின் முன்னரும் பின்னரும், மக்கள் ஏராளமான விதிமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் அனுமதி பெறாமல் சோதனைகளை நடட்துவது, சட்டவிரோத கைதுகள் மற்றும் தடுத்து வைப்பது, மோசமாக நடத்துவது, சித்திரவதை செய்வது மற்றும் பொது இடங்களில் நிர்வாணப்படுத்தி சோதனையிடுவது ஆகியவை இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது” என ஐ நா மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் லிஸ் தொர்செல் இம்மாதம் 12ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
பெயரிடப்படாத சில சட்டத்தரணிகள் மற்றும் அமைப்புகளே ஐ.நாவிற்கு தகவல்களை அளிப்பதாக குற்றஞ்சாட்டிய அமைச்சர், அவர்களை ‘தேசத்திற்கு எதிராகச் செயற்படும் போலிக் கும்பல்கள்’ என்வும் சாடினார்.
“அப்படிச் சிலர் உள்ளனர், அவர்கள் கைநிறைய பணத்திற்காகச் செய்கின்றனர். தன்னார்வ அமைப்பிடமிருந்து பணம் வருகிறது. பணம் வரும் போது அறிக்கைகளும் வெளியிடப்படுகின்றன”.
இலங்கையில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளவர்களை எதிர்கொள்ளும் அரச பாதுகாப்பு படைகளின் இந்த கடும்போக்கு நடவடிக்கையை ஐ.நா கடுமையாக விமர்சித்துள்ளது.
“போதைப் பொருட்களை விற்பவர்கள் அல்லது கடத்துபவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களும் மனிதாபிமான நடவடிக்கைக்கு உரியவர்களே, அவர்களுக்கும் முழு மரியாதையும் வெளிப்படையன வழிமுறைகளும், நேர்மையான விசாரணைகளும் தேவை” என கூறியுள்ள ஐ.நா, அதேவேளை “அதிகார துஷ்பிரயோக, சித்திரவதை, மோசமாக நடத்தப்படுதல், மற்றும் நியாயமான விசாரணைகள் மறுக்கப்படுவது போன்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் ஆகியவை பாரபட்சமின்றி முழுமையாக விசாரிக்கப்பட்டு நீதி வழங்கபப்ட வேண்டும்” எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுவேளை, சமூகத்தை வேவு பார்க்குமாறு நாட்டின் பொலிஸ் மாஅதிபர் வெளிப்படையாகவே கோரியுள்ளார்.
”தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது குழுவின் பிரதான நோக்கமாகும்” என பதில் பொலிஸ் மா அதிபராக இருக்கும் தேசபந்து தென்னகோன் கோரியுள்ளார்.
“ஒவ்வொரு வீட்டிலும் யார் இருக்கின்றார்கள் என கிராம பிரஜா பொலிஸ் குழு உறுதிப்படுத்த வேண்டும். அந்த சமயத்தில்தான் பிரிவினைவாதிகளுக்கு, தீவிரவாதிகளுக்கு, மத பிரிவினைவாதிகளுக்கு எங்கள் பிரதேசத்திற்கு வந்து வாடகைக்கு வீடுகளை எடுத்து அழிவுகரமான செயல்களை மேற்கொள்ள எமது கிராமத்தில் வாய்ப்பில்லை என சான்றுப்படுத்த முடியும்”.
கிராம சேவகர்களிடம் இருக்கும் வாக்காளர்கள் பட்டியல் மற்றும் குடியிருப்பாளர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளின் தனிப்பட்ட தகவல்களை பொலிசாருக்கு வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அந்த குழுவின் உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார்.