நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்த கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலையே நீடிக்கிறது. மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார்.
இந்த கூட்டணியில் பிரதான கட்சியான தி.மு.க. உறுதியாக உள்ளது. அதே நேரம் இங்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இதுவரை நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதமே திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்த இருந்த ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ இந்த மாதம் 26-ந்தேதி நடக்கிறது.
இந்த மாநாட்டுக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் தலைவர் கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ. (எம்.எல்) திபாங்கர் பட்டாச்சார்யா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
பிரமாண்டமாக நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முன்னிலை வகிக்கிறார்.
இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெறும் முதல் பொதுக் கூட்டம் இது. இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கூறும்போது, இது எதிர்க் கட்சி கூட்டணியின் பிரசாரத்தின் தொடக்கமாகத் தான் பார்க்கப்படும். நிச்சயமாக தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் வேகத்தை அதிகரிக்கும் என்றார்.
பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாது என வருங்கால வைப்பு நிதி நிறுவனம்(பிஎப்) கூறியுள்ளது.
ஒன்றிய அரசு தனிமனித அடையாளம் என கூறி ஆதாரை கொண்டுவந்து, அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கியுள்ளது.
மேலும் குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது. இதனால் ஆதாரை அனைத்துக்கும் கட்டாயமாக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, வங்கிக் கணக்கு தொடங்க, அரசின் நலத்திட்டச் சலுகைகள் பெற ஆதார் அட்டையில் முகவரி முக்கியமானதாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது, பள்ளி கல்லூரிகளில் சேர்க்கைக்கும் பான் கார்டு, செல்போன் எண், அரசு மானியங்கள் பெற, வருமான வரிக் கணக்கு இப்படிப் பல சேவைகளில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தங்களது பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாது என வருங்கால வைப்பு நிதி நிறுவனம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் ஆதார் அட்டையை பயன்படுத்தி பிறந்த தேதியை சரி செய்ய முடியாது என்றும், ஆதார் அட்டையை ஒரு நபரின் அடையாளமாகத் பயன்படுத்த முடியும். பிறந்த தேதிக்கான சான்றாகப் பயன்படுத்த முடியாது என்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்ற அச்சம் எழுந்துள்ளது.