கதிரோட்டம்- 19-01-2024
தென்னாபிரிக்கா என்றவுடன் எமக்கு கறுப்பு நிறம் தான் ஞாபகத்திற்கு வரும். அதற்கு காரணம் அங்கு கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் தலைவன் நெல்சன் ம ண்டேலா அந்த இனிய தேசத்தின் அதிபராக பதவி வகித்துள்ளார். கறுப்பு இனத்தவர்களை விட தென்னிந்தியாவிலிருந்து அங்கு வெள்ளைக்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தென்னிந்தியர்கள் உள்ளார்கள். அவர்களின் நிறமும் பெரும்பாலும் கறுப்பாகவே காணப்படுகின்றது. ஆனாலும். அங்கு வெள்ளை நிறத்தவர்கள் உள்ளார்கள். ஆனால் அவர்கள் ஆங்கிலேயர்களின் வழி வந்தவர்கள் அல்ல என்று வரலாறு கூறுகின்றது
இனி வரும் பந்திகளில் இந்த நிறம் பற்றிய விடயங்கள் எதுவுமே இடம்பெறா என்பதை உறுதியாகக் கூறிவைக்கின்றோம். இந்த வாரம் நாம் நம் முக்கிய பக்கமாக விளங்கும் கதிரோட்டம் பகுதியில் தென்னாபிரிக்கா பற்றிய முக்கியவத்தை வழங்கியதற்கு பலஸ்தீனமும் நமது தாயக மண்ணும் காரணமாக அமைந்து விட்டது. தனது இவ்வார ‘உதயன்’ தொடரில் யாழ்;பபாணத்திலிருந்து எழுதும் நிலாந்தன். அந்த யாழ் மண்ணிலிருந்து முதலில் பலஸ்தீனத்தையும் பின்னர் தென்னாபிரிக்காவையும் தொட்டுப் பார்த்துள்ளார். பலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்னும் கொடிதான தேசம் நடத்தும் இனப்படுகொலைகளைக் கண்டித்து சர்வதேச நீதி மன்றத்தை நாடியுள்ள செய்தி நிலாந்தனின் மனதை தொட்டு உறுத்தியுள்ளது.
ஆமாம், தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றது. பலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கின்றது என்பதுதான் தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டு.
நிலாந்தனின் கூற்றுப்படி. இதுபோன்று ஏற்கனவே ஒரு வழக்கு பர்மா தேசத்தின் அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கம்பியா அந்த வழக்கை 2019இல் தொடுத்தது. இந்த இரண்டு வழக்குகளும் அனைத்துலக நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள். இந்த இரண்டு வழக்குகளையும் தொடுத்தது ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் நாடுகள் என்கிறார் நிலாந்தன்.
அத்துடன் அவர் நமது ஈழத்தமிழர்கள் இந்த தென்னாபிரிக்கா சர்வதேச நீதி மன்றத்தை நாடிய விடயத்தை தங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்.
எங்கள் தாய் மண்ணில் 2009 வரையிலும் மாத்திரமல்ல. இன்னும் அங்கு இடம்பெறும் இனப்படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் தமிழ்ப் பெண்கள் மீதான வன்முறைகள் காணிகளை அபகரித்து அதன் உரிமையாளர்களாக விளங்கும் தமிழர்களை விரட்டி அடித்தல் கொலை செய்தல் போன்ற கொடிதான அடக்குமுறைகளை மேற்கொள்ளும் இலங்கை அரசையும் அதன் ஆட்சியாளர்களையும் அவர்களுக்கு பக்கத் துணையாக விளங்கும் இராணுவக் கொடியவர்களையும் சர்வதேச நீதி மன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய வேண்டுகோள்களையும் கோரிக்கைகளையும் எழுத்து மூலமான விண்ணப்பங்களையும் நம்மவர்களில் பல தரப்பினர் 2009ம் ஆண்டு தொடக்கம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான முயற்சிகள் ஏன் வெற்றியளிக்கவில்லை என்று ஏமாற்றமும் சலிப்புத் தன்மையும் எமது தரப்பில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் ஆயிரக்கணக்கானவர்களில் படிந்துள்ளமை நன்கு புலப்படுகின்றது.
ஆனால் இந்த கால தாமதத்திற்கும் தொடர்ச்சியாக முயன்றும் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதற்கான எமக்கு சாதகமான பதில்களோ அன்றி விளைவுகளோ ஏற்பட்டுள்ளனவா என்ற கேள்விகளை எமக்கு முன்பாக வைத்தால். அவற்றிக்கு பதிலாக ‘பூஜ்ஜியம்’ தான் பதிலாகக் கிடைக்கின்றது.
ஆனால் எம் மக்களை கொன்றழித்தவர்கள் எவ்வாறு ‘காப்பாற்றப்படுகின்றார்கள்’ என்று சற்றும் கணித்துப் பார்த்தால் அந்த விடயத்தில் இலங்கை அரசோ அன்றி அந்த கொடிய அரசிற்கு சாதகமான நாடுகளோ உள்ளன என்பதிலும் நமது மொழி பேசுகின்றவர்களும் நமது மக்கள் அவர்கள் பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தலில் வாக்குகளை வழங்கி பாராளுமன்றத்திற்கு அனுப்பியவர்களில் சிலரும் உள்ளார்கள் என்பதை அறிகின்றபொழுது எமது மனது எரிவது தான் ‘எஞ்சி’ நிற்கின்றது.
தென்னாபிரிக்கா என்னும் மனித நேயமிக்க நாடு எங்கோ ஒரு பகுதியில் கொடிய கந்தகக் குண்டுகளுக்கு இரையாகி மடியும் பலஸ்தீனத்தின் அப்பாவித் தாய்மார் பிள்ளைகள் வயதானோர் என அந்த நாட்டு பிரஜைகள் மீது காட்டும் நேசம் பாராட்டுக்குரியது. இதன் காரணமாகவே நாம் இவ்வாரக் கதிரோட்டத்தின் தலைப்பில்”தென்னாபிரிக்காவை வணங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளோம் என்பதையும் வாசகர்கள் கவனிக்கவும்.
“தென்னாபிரிக்கத் தேசத்தின் இந்த நகர்வானது இனப்படுகொலைக்கு உள்ளாகும் அல்லது உள்ளாகிய மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒன்று. நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படியும் அமையலாம்.அது ரோகியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கில் நடந்தது போல பொருத்தமான நீதியை பெற்றுக் கொடுக்கத் தவறலாம். உலக அரசியலில் தூய நீதி எதுவும் கிடையாது. போருக்கு பின்னரான சமூகங்களில் பொறுப்புக் கூறும் நோக்கத்தோடு ஐநா முன்வைக்கும் நிலை மாறு கால நீதியும் கூட தூய நீதி அல்ல. அது ஒரு அரசியல் நீதி, அது ஓர் அரசியல் தீர்மானம்.யார் யாருக்கு எதிராக வழக்கு தொடுப்பது? யார் யாரைக் கூப்பிட்டு விசாரிப்பது? போன்ற எல்லாவற்றிலுமே அரசியல் தீர்மானங்கள் உண்டு.”
இவ்வாறு இந்த வாரத்தின் தனது கட்டுரையில் நிலாந்தன் எமக்கு உலக அரசியலின் ‘யதார்த்தத்தை’க் காட்டும் கருத்துக்களை தொடராக முன்வைக்கின்றார்.
கடந்த காலங்களில் எமது மக்களுக்கும் நியாமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி போராளிகளுக்கும் அவர்கள் தலைகளில் விழும்படியாக கந்தகக் குண்டுகளை அள்ளி அள்ளி வீசிய நாடுகளில் கியூபா என்கின்ற ஆயுதப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்ற ஒரு நாடு இருந்தது என்பதை நம்ப முடியாமல் உள்ளது என்றும் எழுதுகின்றார் நிலாந்தன் அவர்கள்.
தென்னாபிரிக்காவின் வழக்கு தொடர்ந்த விடயம் தொடர்பாக நமது மக்கள் சிந்திக்க வேண்டும் என்ற கருத்து எவ்வாறு முனைப்பு பெறப்போகின்றதோ என்பதற்கு முன்பாக இனப்படுகொலை செய்யப்பட்ட எமது மக்கள். தொடர்ச்சியாக அச்சுறுத்துப்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களது வாரிசுகள் ஆகியோருக்கு நீதியைப் பெற்றுத்தர யாரும் இல்லை என்ற நிலைதான் தற்பொழுது எமது கண்களுக்கும் மனதிற்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது.
தென்னாபிரிக்கா நாடு பலஸ்தீன மக்களை காப்பாற்றுவதற்காக சர்வதேச நீதி மன்றத்தை நாடியுள்ளது. ஆனால் நமது மண்ணில் இனப்படுகொலைகளுக்கு எதிரான குரல் எழுப்பிய வண்ணம் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ள அமைப்புக்களுக்கு எதிராக மறைமுகமான தாக்குதல்களை நடத்துகின்றவர்கள் யார் என்று பார்த்தால் ‘நமது தமிழர்களே’ என்ற பதில் வருகின்றது.
நமது ம்ணணில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக வருடக்கணக்காக போராட்டங்களை நடத்திவரும் அன்னையர்களையும் அவர்களோடு இணைந்திருக்கும் தோழர்களையும் எம்மால் தெரிவு செய்யப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘எதிரிகளாகவே’ பார்க்கின்றார்கள். அவர்கள் போராட்டங்கள் நடத்தும் கொட்டகைகள் மீது தங்கள் பார்வை பட்டுவிடக்கூடாது என்பதற்கான வேறு வழிகளால் பயணிக்கின்றார்கள். அந்த அமைப்பின் முக்கியஸ்த்தரான ஒரு செயற்பாட்டாளர் மீது அரசாங்கத்தில் அமைச்சராக விளங்கும் ஒருவரது கையாட்களான ‘காடையர்கள்’ சில வருடங்களுக்கு முன்னர் ‘நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கு இன்னும் வவுனியா நீதி மன்றத்தில் தொடர்கின்றது. இவ்வாறு ‘குலத்தைக் கெடுக்க வந்த இந்த கோடரிக்காம்புகள்’ எதற்காக இவ்வாறு நடந்து கொள்கின்றன என்று பார்த்தால். அவை அற்ப சலுகைகளுக்காகவும். பதவிகளை தக்க வைப்பதற்காகவும் தான் என்பது புலனாகின்றது. தமிழர்கள் அல்லாதவர்கள் எவ்வாறு எமக்கெதிராக ஒன்று பட்டு நிற்கின்றார்களோ. அவர்களை பின்பற்றுபவர்களும் ‘தமிழர்களும்’ உள்ளார்கள் என்ற நிலை காணப்படும் போது தென்னாபிரிக்காவின் முயற்சி போன்று எமது மண்ணில் நிகழுமா என்பது கேள்வியாகவே இருக்கப்போகின்றது என்பதும் ஒரு ‘சாபம்’ தான்.
இவ்வாறிருக்கும் போது எம்மை கொன்றழித்தவர்கள் எப்போது தண்டிக்கப்படுவார்கள் என்ற கேள்விகளை போராடிக் கொண்டிருக்கும் எமது மக்களும் அமைப்புக்களும் தென்னாபிரிக்காவின் முயற்சிகளின் தன்மையை நோக்க வேண்டும். மேலும். நிலாந்தன் குறிப்பிட்டுள்ள எமது ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோள் நிஜமாகும் வகையில் எமக்கு எதிராகச் செயற்படும் ‘கோடரிக்காம்புகளை’ தவிர்த்து நம் நாளைய அரசியலை நகர்த்திச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதையே எமது கருத்தாக சமர்ப்பிக்கின்றோம்.