(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண் மற்றும் கேக்கை விற்பனை செய்த பேக்கரியில் கடமையாற்றி வந்த ஆண் உட்பட இருவரையும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய 53 நாட்களின் பின்பு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வியாழக்கிழமை (18) வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்தார்.
கடந்த வருடம் நவம்பர் 26ம் திகதி பட்டிப்பளை கொக்கட்டிச்சோலையை சேர்ந்தவரும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடாவில் தற்போது வசித்துவரும் பாலிப்போடி உதயகுமாரி என்ற பெண் சம்பவதினமான 26ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளையிட்டு நகரத்திலுள்ள பேக்கரி ஒன்றில் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வே.பிரபாகரன் அண்ணா தலைவர் என பெயரை பெறுத்து வாங்கி எடுத்துக் கொண்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்றுள்ள நிலையில் அவரை பின் தொடாந்து சென்ற புலனாய்வு பிரிவினர்; பொலிசாருடன் இணைந்து அவரை அந்தபகுதி வீதியில் வைத்து கைது செய்தனர்.
இதனையடுத்து குறித்த கேக்கை விற்பனை செய்த மட்டு நகரிலுள்ள பேக்கரியில் கடமையாற்றிவரும் கொக்கட்டிச்;சோலையைச் சோந்த 35 வயதுடைய பரமேஸ்வரன் முனீஸ்வரன் என்பவரை கேக்கில் பிறந்தநாள் மற்றும் பிரபாகரனின் பெயரை பொறித்து கொடுத்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் 53 நாட்கள் வைக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை(18) குறித்த இருவரின் வழக்கை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவர்களை நீதவான் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்தார்.