தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030-ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு லட்சிய இலக்கினை நிர்ணயித்து உள்ளார். இதன் பொருட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே சிறந்து விளங்கும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் வகையிலும், மாநிலத்தின் வலுவான தொழில் சூழலமைப்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் மனித வளத்தை, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையிலும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டினை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து இரு தினங்களும் பங்கேற்றார்.
சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28-ந் தேதி ஸ்பெயின் சென்று அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உண்டான சாதகமான சூழ்நிலை பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து கூற உள்ளார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் 5 நாட்கள் அமையும் வகையில் இருக்கும் என தெரிகிறது.