பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கிராமத்தின் மைந்தன் அருட்தந்தை றமேஸ் (சதீஸ்குமார்) அமதி அடிகளாருக்கு கடந்த 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம் பெற்ற சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் (IHRM) ஏற்பாட்டில் இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரிகள், சமூக, மனிதநேயப் பணியாளர்கள் மற்றும் அறங்காவலர் சபையினர், மதகுருக்கள் முன்னிலையில் தேசபந்து எனும் மனிதாபிமானம் மிக்கவர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
அருட்தந்தையின் சமூகத் தன்னார்வ தொண்டுப் பணிக்காகவும், நாட்டில் மனித நேயத்தையும், மனித மாண்பையும், பாதுகாத்து மேம்படுத்தும் செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமைக்காகவே இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
சமூக நீதியை நிலைநாட்டவும், மனித தர்மத்தைக் காக்கவும் ஆற்றிவரும் பணிக்காக இலங்கை அரசினால் வழங்கப்படும் உயர் விருதான ‘ *தேசபந்து மனிதாபிமானம் மிக்கவர்’* விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டதோடு இந் நிகழ்வில் அவர் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு நீதி, மற்றும் சிறைச்சாலை விவகாரம், யாப்பு சீர்திருத்தங்கள் அமைச்சின் கீழ் இயங்கும் யாழ்ப்பாண மாவட்ட சக வாழ்வு அமைப்பின் ஆலோசனை குழு அங்கத்தவர்களில் ஒருவராகவும் , அருட்தந்தை றமேஸ் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார்.
றமேஷ் அடிகளாரை அண்மையில் அவரது சொந்த ஊரான கட்டைக்காட்டு கிராமத்தில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழாவிற்கு அழைத்து அம்மக்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.