(25-01-2024)
கட்டுநாயக்க அதிவேக வீதியில் 25-01-2024 அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்
இலங்கையின் நீர் வழங்கல் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன் லொறி ஒன்றின் பின் பகுதியில் மோதியுள்ளது.
பின்னர், பாதுகாப்பு வேலியில் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
25-01-2024 அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக வீதியின் R 11.1 கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஜயகொடி என்ற பாதுகாப்பு அதிகாரியே இதன்போது உயிரிழந்தவராவார்.
காயமடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் விபத்து தொடர்பாக கந்தானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.