தமிழரசு கட்சியின் தலைவருக்கான தேர்தல் ஏதோ பெரிய ஜனாதிபதித் தேர்தல் போல களைகட்டியது. ஒரு கட்சியின் தலைவர் யார் என்பதற்கான தேர்தலுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது? ஏனென்றால் தமிழ அரசியல் அந்தளவுக்கு கட்சி மைய அரசியலாக மாறிவிட்டது என்று பொருள். சிறீதரன் ஒரு மக்கள் இயக்கத்தைப் பற்றிப் பேசியிருந்தாலும்கூட தமிழ் மக்களின் அரசியலானது கட்சிகளுக்குள் தேங்கி விட்டது என்பதைத்தான் அது காட்டுகின்றது. உள்ளதில் பெரிய கட்சியின் தலைவர் யார் என்பது தமிழ் அரசியலில் எதிர்காலப் போக்கை தீர்மானிக்கும் என்ற எதிர்பார்ப்புக் காரணமாகத் தான் தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தல் அத்துணை முக்கியத்துவம் பெற்றது.
இத்தனைக்கும் தமிழரசு கட்சி தொடங்கி 73 ஆண்டுகளாகின்றன. அந்தக் கட்சியின் ஆங்கில பெயர் பெடரல் பாட்டி. அதாவது சமஷ்டிக் கட்சி. கடந்த 73 ஆண்டுகளாக அக்கட்சியால் தனது பெயரில் ஒட்டிக் கொண்டிருக்கும் சமஸ்டியை ஏன் அடைய முடியவில்லை? அப்படி என்றால் அக்கட்சி அதன் இலட்சிய வாசகத்திலேயே கடந்த 73 ஆண்டுகளாக வெற்றி பெறவில்லை என்று பொருள். இந்நிலையில் ஒரு புதிய தலைவர் இந்த ஆண்டிலிருந்து அதை வெற்றிப் பாதையில் செலுத்துவார் என்று நம்பலாமா?
சிறீதரனின் வெற்றி கொள்கை வெற்றியாக வியாக்கியானம் செய்யப்படுகின்றது. அப்படியென்றால் சுமந்திரனுக்கு வாக்களித்தவர்கள் கொள்கை அற்றவர்களா? அல்லது கட்சிக்குள் பொதுச்சபை உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 137 பேர் தமிழ்த் தேசியக் கொள்கைக்கு மாறானவர்களா?
அது பொதுமக்கள் வாக்களித்த ஒரு தேர்தல் அல்ல.கட்சி உறுப்பினர்கள் வாக்களித்த ஒரு தேர்தல். அதாவது அரசியல்வாதிகள் வாக்களித்த ஒரு தேர்தல். அந்த அரசியல்வாதிகள் கொள்கையால் வார்த்தெடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுவது பொருத்தமானதா? அப்படி என்றால் கடந்த 15 ஆண்டுகளாக கட்சி சீரழிந்த பொழுது இந்த கொள்கை வாதிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? அவர்களால் ஏன் தலை எடுக்க முடியவில்லை? அது மட்டுமல்ல அந்தக் கொள்கைவாதிகளுக்கு தலைமை தாங்கும் சிறீதரன் கடந்த பொதுத் தேர்தலின் போது கொள்கைக்கு எதிரான சுதந்திரனோடு கூட்டுச் சேர்ந்திருந்தாரே ?அப்பொழுது கொள்கை எங்கே போனது?
எனவே இதை ஒரு கொள்கை வெற்றியாகக் காட்ட முடியாது. அது மட்டுமல்ல, இதில் வாக்களித்த அரசியல்வாதிகள் எல்லாரையும் கொள்கைவாதிகள் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. தமிழரசுக் கட்சிக்குள் உண்மையான நேர்மையான ஆட்கள் உண்டு. அவர்களை இக்கட்டுரை கொச்சைப்படுத்தவில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் பதவிகளுக்காகவும் நலன்களுக்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சார்ந்து இருப்பவர்கள்தான். அவர்கள் எல்லாரும் கொள்கைவாதிகள் என்றோ நேர்மையானவர்கள் என்றோ எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அருகில் இருப்பவர்கள் யார் யார் என்று ஒவ்வொருத்தராக எடுத்துப் பார்த்தால் அதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். அதில் எத்தனை பேர் கொள்கை வாதிகள்? எத்தனை பேர் நேர்மையான வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டவர்கள்? எத்தனை பேர்களுக்கு சமூகத்தில் கௌரவமான ஒரு இடம் இருக்கிறது? ஆனால் இந்த கேள்விகள் எல்லாவற்றுக்கும் அப்பால் அவர்கள் கடுமையான உழைப்பாளிகளாகவோ அல்லது சிறந்த ஒழுங்கமைப்பாளர்களாகவோ இருப்பதனால் அரசியலில் முன்னேறியிருக்கிறார்கள் என்பது தான் சரி.எனவே தேர்தலில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட மனமாற்றம் எனப்படுவது கொள்கை ரீதியானது என்பதை விடவும் நலன் சார்ந்து அதாவது தலைமை பொறுப்பு மாறப் போகின்றது என்பது தெரிந்து ஒரு பகுதியினர் தடம் மாறினார்கள் என்றும் வியாக்கியானம் செய்ய முடியும்.
இப்பொழுது சிறீதரனுக்குள்ள சவால் என்னவென்றால் அதைக் கொள்கை வெற்றியாக அவர் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதுதான். அதாவது கடந்த 15 ஆண்டுகளாக கட்சிக்குள் தமது கொள்கை காரணமாக குரல் எழுப்ப முடியாதவர்களாகக் காணப்பட்டவர்களை ஸ்ரீதரன் எவ்வாறு பாதுகாப்பார்? பலப்படுத்துவார் ? என்பதைப் பொறுத்துத்தான் அது ஒரு கொள்கை வெற்றியா இல்லையா என்பதனை எதிர்காலத்தில் கணிப்பிடலாம்.
தேர்தலை வைக்க வேண்டும் என்றும் தேர்தலைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஒரு நிலையை ஏற்படுத்தியது சுமந்திரன்தான். தேர்தலை நோக்கி கட்சியைத் தள்ளியது அவர். ஏனென்றால் ஒரு தேர்தல் நடந்தால் தனக்கு வெற்றி நிச்சயம் என்று அவர் கணக்குப் போட்டிருந்தார். அதை நோக்கி பல ஆண்டுகளாக அவர் உழைத்திருந்தார். தன்னைச் சுற்றி ஒரு விசுவாசிகள் கூட்டத்தை அவர் கட்டி எழுப்பி வைத்திருந்தார். அந்த விசுவாசிகளில் பெரும்பாலானவர்கள் நலன்களின் அடிப்படையில் தான் அவரோடு நின்றார்கள். சிறுதொகையினர்,அவர் கெட்டிக்காரன் பிடித்தவர் அரசியலைக் கெட்டித்தனமாகக் கையாள்வார் என்று நம்பி அவருடன் நின்றார்கள். அடுத்த தேர்தலில் அவர்களுக்கு என்ன பதவி பரிசாகத் தரப்படும் என்பதன் அடிப்படையில்தான் அவருடைய விசுவாசக் கட்டமைப்பு கட்டமைக்கப்பட்டிருந்தது. அதை அவர் உறுதியாக நம்பினார். அந்த அடிப்படையில் வெற்றி தனக்கு என்றும் நம்பினார்.
ஆனால் சிறீதரன் கடைசி நேரப் பிரச்சார உத்திகள் மூலம் சுமந்திரனின் வெற்றியை கேள்விக்கு உள்ளாக்கினார். சிறீதரன் அவமானகரமான ஒரு தோல்வியைத் தழுவுவார் என்று சுமந்திரனின் ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. ஏனென்றால், கடைசி நேரத்தில் தளம்பக்கூடிய கட்சிக்காரர்கள் சிறீதரனின் பக்கம் தாவி விட்டார்கள். அதாவது வெல்லக்கூடியவர் அவர் என்று அனுமானித்து வெல்பவரின் பக்கம் சென்று விட்டார்கள் என்று பொருள். அந்த அடிப்படையில் தான் அது கொள்கை வெற்றியா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. ஏனென்றால் சுமந்திரனுக்கு விழுந்த வாக்குகள் கொள்கைக்கு எதிரான வாக்குகள் என்று எடுத்துக் கொண்டால் கட்சிக்குள் 137 பொதுச்சபை உறுப்பினர்கள் கொள்கை அற்றவர்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும்.
சிறீதரனின் அடிப்படைப் பலம் அவருடைய சொந்த தொகுதி. அடுத்ததாக மட்டக்களப்பு. தொடக்கத்திலிருந்து மட்டக்களப்பு உறுப்பினர்கள் தாங்கள் தேசியத்தின் பக்கம் என்று திரும்பத் திரும்பக் கூறி வந்தார்கள். அப்படித்தான் யாழ்ப்பாணம் தீவுப் பகுதிக் கிளையும் உறுதியாக சிறீதரனோடு நின்றது. தீவுக்களுக்கென்று பெருமைக்குரிய ஒரு முன்னுதாரணம் உண்டு. தமிழரசுக் கட்சி மிகப் பலமாக காணப்பட்ட காலகட்டத்திலும் காவலூர் நவரத்தினம் அதற்கு எதிராகக் கேள்விகளைக் கேட்டார். அமிர்தலிங்கத்தை பகிரங்கமாக விவாதத்துக்கு அழைத்தார். தனி நாட்டுக் கோரிக்கையின் தந்தையர்களில் ஒருவராகிய காவலூர் நவரத்தினம் அவருடைய சுயாட்சிக் கழகத்தைக் கட்டி எழுப்பிய போதும் அவருக்குப் பக்கத் துணையாக இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தீவுகளைச் சேர்ந்தவர்கள்தான். தீவுகளின் அந்த முன்னுதாரணம் சிறீதரனுக்கு யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை ஊட்டும் பலங்களில் ஒன்றாக இருந்தது. தீவுக் கிளையைச் சேர்ந்தவர்களின் தொகை குறைவுதான். ஆனாலும் அவர்கள் தொடக்கத்தில் இருந்து கிளிநொச்சியைப் போல மட்டக்களப்புப் போல சிறீதரனின் பக்கம் உறுதியாக நிலை எடுத்து நின்றார்கள்.
இதில் யார் யார் கடைசி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள் என்ற விவாதத்தை இனி விடுவோம். இப்பொழுது சிறீதரனுக்கு ஒரு பொறுப்புத் தரப்பட்டிருக்கிறது. தமிழ் அரசியலில் இப்போதுள்ள சீரழிவைக் கருதி கூறின் கட்சியையும் தமிழரசியலையும் ஒரு திருப்தியான வடிவத்துக்கு கொண்டு வருவதற்கு இரண்டு ஆண்டுகள் போதாது.
சிறீதரனுக்கு முன்னால் உள்ள பெரிய சவால் சுமந்திரனின் விசுவாசிகளை எவ்வாறு கையாள்வது என்பது. சுமந்திரன் விசுவாசிகளை மட்டுமல்ல அவருடைய சொந்த தேர்தல் தொகுதிக்குள்ளேயே அவருக்கு பலமான எதிர்ப்பு அணி உண்டு. சந்திரகுமாரின் தலைமையிலான சமத்துவக் கட்சி அவருக்கு தொடர்ந்தும் சவாலாக இருக்கும்.
தனது மாவட்டத்தில் தனக்கு வெளியே நிற்கும் பெருந்தொகை வாக்காளர்களை சிறீதரன் எவ்வாறு கையாளப் போகிறார்? தமிழரசுக் கட்சியின் ஏனைய மாவட்டக் கிளைகளோடு ஒப்பிடுகையில் கிளிநொச்சியில் தமது கட்சியின் எதிரிகளை துரோகிகளாகக்காட்டும் போக்கு கிளிநொச்சியில் தான் அதிகமாக உண்டு. போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டத்தை தொடர்ந்தும் அவ்வாறு துரோகி தியாகி என்று பிரித்து வைத்திருப்பது தவறு. சிறீதரன் இந்த விடயத்தில் கடந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.
முதலில் அவர் தன் சொந்த மாவட்டத்துக்குள் தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கட்சிக்குள் சுமந்திரனின் விசுவாசிகளை எப்படி வென்றெடுக்கலாம் என்று முயற்சிக்க வேண்டும். அதன்பின் உள்ளதில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு எப்படி ஒரு பொது நிலைப்பாட்டிற்கு வருவது என்று சிந்திக்க வேண்டும்.
ஏனென்றால் விக்னேஸ்வரன் கூறுவதுபோல சமஸ்டியை அடைவதற்கு யாரிடமும் தெளிவான வழி வரைபடம் கிடையாது. நாடாளுமன்றத்துக்கு ஊடாக சமஸ்டியை பெற முடியாது. எனவே நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு மக்கள் இயக்கத்தால் வழி நடத்தப்படும் அரசியல் அவசியம். ஒரு மக்கள் இயக்கம் என்று வந்தால் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அதைக் கட்டியெழுப்ப வேண்டும். நாடாளுமன்ற அரசியலால் மட்டும் சமஸ்டியை அடைய முடியாது. அதற்கு தீர்க்க தரிசனம் மிக்க வெளியுறவு அணுகுமுறைகள் அவசியம். அதற்கு வேண்டிய வெளியுறவுத் தரிசனம் அவசியம். முதலில் தமிழரசுக் கட்சி தனக்கென்று தெளிவான வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும். அதற்கு வேண்டிய நிபுணர்கள் அடங்கிய வெளியுறவுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். நிச்சயமாக சுதந்திரனுக்கு அங்கே முக்கியமான இடம் தரப்பட வேண்டும். ஒரு கட்டமைப்பை உருவாக்கினால் யாரும் தனி ஓட்டம் ஓட முடியாது.சிறீதரனுந்தான்.
எனவே சமஸ்ரியை அடைவதற்கான வழி எது என்பதனை தமிழரசுக் கட்சி தெளிவாகக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வழியை நோக்கிக் கட்சியைச் செலுத்த வேண்டும். சிறீதரன் அதற்குத் தயாராக இருந்தால் தமிழரசுக் கட்சியின் 74ஆவது ஆண்டுயாவது ஒப்பீட்டளவில் முன்னேறிய ஆண்டாக மாற்றியமைக்கலாம்.