ந. லோகதயாளன்.
கச்சதீவு புனித அந்தனியார் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு தமக்கும் தனியான அழைப்பு அனுப்பி உதவுமாறு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயரிடம் இந்தியாவின் கச்சதீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயணக் குழு விண்ணப்பித்துள்ளது.
இது தொடர்பில் கச்சதீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயணக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சே.நல்லதம்பி ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
மீனவர்கள் பாதுகாப்பு வேண்டியும், கடல் மீன்வளம் வேண்டியும் தமிழ்நாட்டு பாரம்பரிய மீனவர்களால் கச்சத்தீவில் 1913 ஆண்டு முதல் புனித அந்தோணியார் ஆலயம் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது பாரம்பரிய மீனவர்கள் தாய் பங்கான தங்கச்சிமடத்தில் இருந்து அருட்பணியாளர்களையும், தங்கள் குடும்பங்கள் மற்றும் உறவினர்களை அழைத்துகொண்டு நாட்டுப்படகில் கச்சத்தீவு திருப்பயணம் மேற்கொண்டு திருவிழாவை சிறப்பாக கொண்டாடி வந்தனர். இதில் இலங்கை மீனவ மக்களையும், உறவினர்களையும், அருட்பணியாளர்களையும் விருந்தினராக அழைத்து அன்பை பகிர்ந்து மகிழ்ச்சியாக கச்சத்தீவு திருவிழாவை கொண்டாடி வந்தனர்.
இந்தநிலையில் 1974 ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கபட்டது. ஆனாலும் இந்திய பாராம்பரிய மீனவர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கும் நோக்கத்தில், கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ள 5வது சரத்தில், கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் விசா உள்ளிட்ட எந்த அனுமதி இல்லாமல் குடும்பத்துடன் சென்று வழிபடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்.
இதனடிப்படையில் தொடர்ந்து நாட்டுப்படகில் பாரம்பரிய மீனவர்கள் தங்கள் குடும்பங்களுடன், பணம் வாங்காமல் நேர்ச்சையாக தங்கள் உறவினர்களை திருப்பயணிகளாக அழைத்துக் கொண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு சென்று வந்தனர்.
இது சமீபகாலமாக பணம் வாங்கிக் கொண்டு விசைப்படகில் வெளியூரிலிருந்து வரும் திருப்பயணிகளை, சுற்றுலா பயணிகளை போல் அழைத்து வரும் இராமேஸ்வரம் பங்கு பாதிரியாரின் தலைமையிலான கச்சத்தீவு விழா குழுவில் உள்ள சில நபர்களுக்கு இடையூறாக இருந்ததால், கச்சத்தீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயனத்தை 2014 ஆண்டு தடை செய்தனர்.
இதை எதிர்த்து பாரம்பரிய மீனவர்கள் தொடர்ந்து போராடினார். கடந்த 2018 ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ள பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயண உரிமையை மீட்டு உறுதிப்படுத்தினர். இதனடிப்படையில் 2019 ஆண்டு முதல் கச்சத்தீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பாயண குழு கச்சத்தீவு திருப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் உயர்நீதிமன்ற ஆணையை மத்திய, மாநில அரசுகள் இதுவரை முழுமையாக செயல்படுத்தவில்லை.
இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் விசாரித்ததில், இலங்கை யாழ்ப்பாணம் மேதகு ஆயர் அவர்கள் இராமேஸ்வரம் பாதிரியாருக்கு மட்டும் தான் கச்சத்தீவு திருவிழா அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளார், எனவே அவர்களை மட்டுமே அங்கீகரிக்க முடியும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இருநாட்டு பாரம்பரிய கத்தோலிக்க மக்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு சம்பந்தப்பட்டது. எனவே இருநாட்டு பாரம்பரிய மீனவர்களின் நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்திற்கு கத்தோலிக்க திருச்சபை மதிப்பளிக்க வேண்டும். பாரம்பரிய கத்தோலிக்க மீனவர்களின் உரிமையை கத்தோலிக்க திருச்சபை புறக்கணிக்க கூடாது.
எனவே இந்த ஆண்டு இந்திய பாரம்பரிய கத்தோலிக்க மீனவர்களின் உணர்வுக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை மதிப்பளிக்கும் வகையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அழைப்பிதழை கச்சத்தீவு பாரம்பரிய திருப்பயண குழுவுக்கு அனுப்பவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.