மன்னார் நிருபர்
இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக பாம்பன் கடற்கரைக்கு தங்கக்கட்டிகள் கடத்திவரப் படவுள்ளதாக திருச்சியில் உள்ள சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து 03-02-2024 காலை திருச்சியில் இருந்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன் மண்டபம் முந்தல் முனை,மற்றும் குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்த சொல்லும் போது அவர் வேகமாக தப்பி ஓடினார்.
இதனை அடுத்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை விரட்டி பிடித்தனர்.
பின் வண்டியை சோதனை செய்த போது சுமார் 4.634 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடத்தல் தங்கத்தையும், ராமேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நம்புராஜன் என்பவரை கைது செய்து அவர் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
பின் கைது செய்யப்பட்ட நம்புராஜனிடம் விசாரணை நடத்தி பின் நாளை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் குறிப்பாக தனுஷ்கோடி அரிச்சல் முனை ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால் முந்தல் முனை, வேதாளை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கடத்தல் தங்கம் போதை பொருள்கள் என கைப்பற்றப்பட்டு வருவது மீனவர்கள் மத்தியிலும் மீனவக் கிராம மக்களிடையே இப்பகுதிகள் கடத்தல் கூடாரமாக மாறி வரும் சூழல் உருவாகிவருவதாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.