வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரை சுவீகரிக்க இடம்பெறும் முயற்சி தொடர்பில் மாவட்ட அரச அதிபரைச் சந்திக்க குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் சந்தர்ப்பம்கோரி கடிதம் வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளிற்கா தற்போது படையினரிடம் உள்ள நிலங்கள் தவிர்நரு 500 ஏக்கரை சுவீகரித்து தருமாறு விமான போக்கு வரத்து அதிகார சபை விடுத்த கோரிக்கையின் பெயரில் பெப்ரவரி 28ஆம் திகதி நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அப பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இதற்கமைய ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையிலேயே இந்த 500 ஏக்கரை சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவதாக கூறப்படுவதோடு விமானப் போக்குவரத்து அதிகார சபை ஊடாக நில அளவைத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த வரைபடமும் நில அளவைத் திணைக்களம் வசம் வரங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சுவீகரிக்க முயற்சிக்கும் பகுதிகளின் கிராம சேவகர்களும் இதன்போது அப் பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றதனால் அப் பகுதி மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
இவைதொடர்பில் பேசுவதற்கு நேரம்கோரியே குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் பொன்னுத்துரை தங்கத்துரை ஒப்பமிட்டு மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் வழங்கியுள்ளதோடு இந்த விடயம் தொடர்பில் நான்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்களும் நேற்று ஒன்றுகூடி ஆராய்ந்துள்ளனர்.