2009ல் முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உலக நாடுகளிலேயே இந்தத் தமிழ் நாட்டில் மட்டும் தான் 18 பேர் நெருப்பிலே தங்களை ஆகுதியாக்கிக் கொண்டார்கள். அதை கண்ணீரோடும், கனத்த இதயத்தோடும் நன்றியோடு நினைவு கூறுகிறேன்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கனடா ஒன்றாரியோ பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி முழக்கம்!
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற “அயலகத் தமிழர் மாநாட்டில் கனடாவின் பிரதிநிதியாக ஒன்றாரியோ பாராளுமன்ற உறுப்பினர் திரு. லோகன் கணபதி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இலங்கையில் நடைபெற்ற இனமழிப்புப் படுகொலைகளுக்கு உரிய நீதி கிடைக்க உலகத் தமிழர்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் அப்பொழுது கேட்டுக் கொண்டார்.
அவர் தன்னுடைய உரையில், “பூமிப்பந்தில் எங்கோ ஒரு மூலையில் பொங்கு தமிழர்க்கு இன்னல் நேர்ந்தால் அவர்கள் திரும்பிப் பார்க்கும் ஒரே திசை தமிழ் நாடு தான். இந்தத் தாய்த் தமிழ் மண்ணில் நடைபெறும் அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். தமிழர்கள் இல்லாத நாடில்லை என்பதை நிரூபிப்பது போல உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து இங்கே வருகை தந்துள்ள சிறந்த ஆளுமைகளைப் பார்த்து நான் பெருமை கொள்கிறேன்.
கீழடியும், கந்தரோடையும் தமிழனின் 2500 ஆண்டு காலப் பழமையை உலகிற்குப் பறை சாற்றி நிற்கின்றன. தாய்த் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளின் முன்னால் கனடா தேசத்தின் குடிமகனாக, பாராளுமன்ற உறுப்பினராக நின்று கொண்டிருக்கிறேன். ஆனால் பிறப்பால் நான் முள்ளி வாய்க்கால், கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்தவன். யாழ்ப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தில் அங்கம் வகித்த பொழுதே இனமழிப்புப் படுகொலைகளுக்காக எதிர்க்குரல் எழுப்பியவன் நான். எண்பதுகளில் போரின் பாதிப்புகளுக்கு உள்ளாகிப் புலம் பெயர்ந்து கனடா சென்றவன் நான். இது என்னுடைய கதை மட்டுமல்ல நண்பர்களே! அரை நூற்றாண்டு காலமாக சபிக்கப்பட்ட இலட்சக்கணக்கான அகதிகளின் கதை.
கனடா தேசம் எனக்கு எல்லாவிதமான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது. அகதிகள் கூட மக்கள் பிரதிநிதியாக, அமைச்சராக, ஆக முடியும் என்ற அதி உன்னத செயப்பாட்டை முன்னெடுத்த உலகின் முதன்மையான ஜனநாயக நாடான, நீதியின் முகமாகத் திகழ்கிறது கனடா தேசம். இலங்கையில் நிகழ்ந்த இனமழிப்புப் படுகொலைகளுக்கு தமிழகத்திற்கு அடுத்தபடியாக எதிர்க்குரல் எழுப்பியது கனடா தேசம் தான். அது மட்டுமல்ல. தமிழ் மரபுத் திங்களுக்கு அங்கீகாரம் அளித்து தமிழர்களை பெருமைப்படுத்தியதும் கனடா தேசம் தான். தமிழர்கள் நன்றியை என்றும் மறக்க மாட்டார்கள்.
2009ல் முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உலக நாடுகளிலேயே இந்தத் தமிழ் நாட்டில் மட்டும் தான் 18 பேர் நெருப்பிலே தங்களை ஆகுதியாக்கிக் கொண்டார்கள். அதை கண்ணீரோடும், கனத்த இதயத்தோடும் நன்றியோடு நினைவு கூறுகிறேன்.
தமிழகம் இன்று அரசியல், பொருளாதாரம், கல்வி, மருத்துவம், போன்ற துறைகளில் கோலோச்சி வருவதோடு, சமூக நீதி மாநிலமாகவும் திகழ்கிறது. அதன் அபரிமிதமான வளர்ச்சி, விரிவாக்கங்களுக்காக எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைத் தமிழர்களின் இனமழிப்புப் படுகொலைக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. நீதிக்காகப் போராடிய கண்ணகி, கண்கள் சிவக்க, மெரீனாவிலே நின்று கொண்டிருக்கிறார். அந்தக் கண்ணகியை தெய்வமாக வழிபடுபவர்கள் நாம். சரிந்தாலும், பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழும் தமிழினம் நாம். இன அழிப்புக்கான நீதி கிடைத்தால் தான் உலகத் தமிழர்களின் தன்மானமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். தமிழனின் ஆளுமை சந்தேகமின்றி நிரூபிக்கப்படும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கேற்ப, உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் ஒருங்கிணைந்து இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
திரு, லோகன் கணபதியின் எழுச்சி உரை இலங்கை தமிழர்களின் உரிமைக் குரலாக அவையில் ஒலித்தது.