சுமந்திரன் அணி தொடர்ந்தும் பலமாக இருப்பதைத்தான் தமிழரசு கட்சிக்குள் நடந்து வரும் இழுபறிகள் காட்டுகின்றன. சுமந்திரன் அணி எனப்படுவது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. அது ஏற்கனவே தமிழ் அரசியலில் இருந்தது. அது சுமந்திரனிலிருந்து தொடங்கவில்லை. அது ஏற்கனவே தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்தில் உண்டு. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய ஒரு கட்சி மாவட்ட அபிவிருத்தி சபைகளை நோக்கிச் சறுக்கிய கேவலமான ஒரு கடந்த காலம் உண்டு. தமிழ் மக்களுக்கு மறதி அதிகம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய ஒரு கட்சி, பின்னர் மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்றுக்கொள்ளும் ஒரு நிலைக்கு தாழ்ந்து போனது. அப்படி என்றால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அவர்கள் விசுவாசமாக நிறைவேற்றவில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் அரசியலை முழுக்க முழுக்க எதிர்ப்பு அரசியல் திசையில் செலுத்திய ஒரு கட்சிக்கு அதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இருந்து மாவட்ட அபிவிருத்தி சபைகளை நோக்கிக் கீழிறங்கினார்கள். அதனால் அவர்கள் மீது அதிருப்தியும் கோபமும் அடைந்த இளைய தலைமுறையினர் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் திரண்டார்கள். தமிழரசு கட்சியின் அல்லது தமிழ் மிதவாதிகளின் ஏமாற்றுகரமான, இரட்டை நாக்கு அரசியலின் விளைவாகத்தான் ஆயுதப் போராட்டம் முன்னிலைக்கு வந்தது. எனவே தமிழரசு கட்சி ஒன்றும் புனிதமான கட்சி இல்லை. அது தொடர்ச்சியாக கொள்கை பிடிப்புடன் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்த ஒரு கட்சி என்று கூற முடியாது.
தமிழரசு கட்சிக்குள் பொதுவாக இரண்டு போக்குகள் இருந்தன. ஒரு போக்கு வாக்காளர்களை மையமாகக் கொண்ட விட்டுக்கொடுப்பற்ற எதிர்ப்பு அரசியல். இன்னொரு போக்கு கொழும்பை மையமாகக் கொண்ட சட்ட வல்லுனர்களின் அரசியல். கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் சட்டவாளர்கள் கொழும்பில் சொத்துக்களையும் சுகங்களையும் கொண்டிருந்தார்கள். அவர்கள் நீதிமன்றங்களில் வழக்காடுவதற்காகவும் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்காகவும் கொழும்பை மையமாகக் கொண்டு ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள். தேர்தல் காலங்களிலும் தேவையான போதும் வாக்காளர்களை நோக்கி வருவார்கள். தமிழரசு கட்சி எனப்படுவது இந்த இரண்டு போக்குகளையும் கொண்ட ஒரு கட்சிதான். பொதுவாக தலைமைத்துவம் கொழும்பு மைய சட்டத்தரணிகளுக்குரியதாகவே காணப்பட்டது. 2009 க்குப் பின் சம்பந்தர் அதை மேலும் அதிகமாக கொழும்பை நோக்கித் திருப்பினார். அந்த தேவைக்காக சுமந்திரனையும் விக்னேஸ்வரனையும் உள்ளே கொண்டு வந்தார். ரணிலுடன் இணைந்து எக்கிய ராஜ்ஜிய என்ற தீர்வை நோக்கி உழைத்தார். எனவே இதில் சுமந்திரனை மட்டும் ஒரு தனி வில்லனாக பார்க்கத் தேவையில்லை. அவர் ஒரு போக்கின் பிரதிநிதி.கட்சிக்குள் ஏற்கனவே காணப்பட்ட ஒரு பாரம்பரியத்தின் பிரதிநிதியும் கூட.
அந்தப் போக்கு தமிழரசியலில் எப்பொழுதும் இருந்திருக்கிறது. ஆயுதப் போராட்டம் அந்த போக்கிற்கு எதிராக வளர்ச்சி பெற்றது. எனினும் அந்த போக்கை முற்றாக அகற்ற முடியவில்லை. அந்தப் போக்கு தொடர்ந்து நிலைத்திருக்கின்றது என்பதைத்தான் சுமந்திரனின் எழுச்சி காட்டுகின்றது.
அதே சமயம் சிறீதரனின் எழுச்சி என்பது ஆயுதப் போராட்டத்தின் நேரடி விளைவு. ஆயுதப் போராட்டத்தால் அதிகம் பாதிப்படைந்த ஒரு மாவட்டத்தை அவர் பிரதிபலிக்கின்றார். ஆயுதப் போராட்டத்திற்குள் அதிக காலம் வாழ்ந்த ஒரு மக்கள் மத்தியில் இருந்து அவர் வாக்குகளைப் பெற்றார். அவருடைய பலம் ஆயுதப் போராட்ட பாரம்பரியம் தான்.தமிழரசு கட்சிக்குள் அவர் பெற்ற வெற்றியும் ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளில் ஒன்றுதான்.
ஆனால் அவர் மட்டும் தமிழ் அரசியலைப் பிரதிபலிக்கவில்லை. சுமந்திரனும் பிரதிபலிக்கிறார். டக்ளஸ் தேவானந்தா பிள்ளையான் போன்றவர்களும் பிரதிபலிக்கிறார்கள். அவர்களுக்கு வாக்களித்தது தமிழ் மக்கள்தான். அவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களை தமிழ்த் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று கூற முடியுமா? இல்லை. அவர்கள் தமிழ்த் தேசத்தின் பிரஜைகள். அவர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதற்காக அந்த மக்களை தமிழ்த் தேசத்துக்கு வெளியே கழித்து விட முடியாது. அவர்களை எப்படி அரவணைப்பது அவர்களையும் உள்ளீர்த்து எப்படி தமிழ்த் தேசத்தைப் பலப்படுத்துவது என்று தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் சிந்திக்க வேண்டும்; உழைக்க வேண்டும்.
சுதந்திரனின் விடயத்திலும் சிறீதரன் அப்படிப்பட்ட ஓர் அணுகுமுறையைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். சுமந்திரன் தமிழரசு கட்சிக்குள் ஒரு யதார்த்தம் அவருக்கு 137 க்கும் குறையாதவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அவ்வாறு அவருக்கு வாக்களித்த அனைவரையும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்த முடியுமா? இல்லை. அப்படி முத்திரை குத்தினால் தமிழரசுக் கட்சி இரண்டாக உடைய வேண்டியிருக்கும். எனவே இந்த விடயத்தில் சிறீதரன் பொறுமையாகவும் பெருந்தன்மையோடும் தீர்க்கதரிசனத்தோடும் முடிவுகளை எடுக்க வேண்டிய ஒருவராகக் காணப்படுகிறார்.
சுமந்திரன் தமிழ்த் தேசிய நீக்கத்தைச் செய்கிறார் என்றால் ஸ்ரீதரன் அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மயமாக்கலைச் செய்ய வேண்டும். தமிழ்த் தேசிய மயமாக்கலுக்கு உரிய வழி வகைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். கட்சிக்குள் எந்த போக்கு பலமடைகின்றதோ அதுதான் கட்சியின் செல்நெறியாகவும் இருக்கும்.
ஒரு தேசமாகக் காணப்படும் மக்கள் கூட்டத்திற்குள் பல்வேறு நம்பிக்கைகளும் பல்வேறு போக்குகளும் இருக்க முடியும். ஒரு தேசம் எனப்படுவது ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டது அல்ல. அது பல பரிமாணங்களையும் பல அடுக்குகளையும் பல நுண் அடுக்குகளையும் கொண்ட ஒரு கதம்பமான கலவை.அந்த நுண் அடுக்குகளில் சில எதிர்த்தரப்புக்கு சேவகம் செய்பவைகளாகவும் இருக்க முடியும்.எனவே எதிர் தரப்பால் கையாளப்படக்கூடியவர்களையும் எப்படித் தேசத்துக்குள் உள்ளீர்ப்பது ? தேசத்தை எப்படி பிரிக்கப்பட முடியாத உருகிப் பிணைந்த ஒரு பலமான கட்டமைப்பாக மாற்றுவது? என்று சிந்திக்க வேண்டிய பொறுப்பு சிறீதரனுக்கு உண்டு.எனவே சுமந்திரனை நீக்குவது அல்லது சுமந்திரனின் ஆதரவாளர்களைக் கழட்டி விடுவது என்று எதிர்மறையாக சிந்திப்பதை விடவும் கட்சியை எப்படி ஐக்கியப்படுத்துவது என்று நேர்மறையாகச் சிந்திப்பது நல்லது.
சிறீதரன் அவருடைய சொந்த மாவட்டத்தில் ஜமீன் என்று அழைக்கப்பட்டவர். ஏன் அவ்வாறு ஜமீன்தார் என்று அழைக்கப்படுகிறார்? அவர் அங்கே அப்படிப்பட்ட ஓர் அரசியலைத்தான் முன்னெடுத்து வந்தார். தமிழரசுக் கட்சியின் ஏனைய கிளைகளோடு ஒப்பிடுகையில் கிளிநொச்சிக் கிளைக்கென்று தனித்துவமான அம்சங்கள் உண்டு. சிறீதரன் அங்கே ஒரு பலமான கட்சிக் கட்டமைப்பை வளர்த்தெடுத்திருக்கிறார். அதேசமயம் அந்த மாவட்டத்தில்தான் அரசியல் எதிரிகளை துரோகிகளாக; எதிரியின் ஆட்களாக சித்தரிக்கும் நிலைமையும் அதிகமாகக் காணப்படுகின்றது. அது போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். எனவே அங்கே அவ்வாறு அரசியல் எதிரிகளுக்கு முத்திரை குத்துவது இலகுவானது. தனது அரசியல் எதிரிகளை மட்டுமல்ல, தனது கட்சியை சேர்ந்த ஏனைய வேட்பாளர்களும் தனது மாவட்டத்துக்குள் நுழைவதை அவர் அனுமதிப்பது குறைவு என்ற குற்றச்சாட்டு உண்டு. ஒரு ஜமீன்தாரைப் போல அவர் கிளிநொச்சி மாவட்டத் தமிழரசுக் கட்சியை நிர்வகித்து வருகிறார் என்று கூறப்படுவது அதனால் தான்.
ஒரு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது அவர் அவ்வாறு நடந்து கொண்டார். இப்பொழுது அவர் கட்சியின் தலைவர். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மிகப்பெரிய கட்சி அது.சிறீதரன், எதிர்காலத்தில் ஏனைய கட்சிகளையும் இணைத்து ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்கப் போவதாக வேறு கூறியிருக்கிறார்.எனவே இனியும் அவர் ஜமீன்தார் போல நடந்து கொள்ள முடியாது. தன்னை ஒரு பெருங் கட்சியின் பெருந்தலைவர் என்ற அடிப்படையில் தகவமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு வேண்டிய தகுதிகளை பெருக்கிக் கொள்ள வேண்டும். தன்னிடம் இல்லாத தகுதிகளை கற்றுக் கொள்ள வேண்டும். தன்னிடம் உள்ள தவறுகளைக் களைய வேண்டும். ஒரு தேசத்துக்குள் எல்லா விதமான நம்பிக்கைகளைக் கொண்ட மக்களும் இருப்பார்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, சுமந்திரனை ஆதரிப்பவர்களும் அவ்வாறு ஒரு பகுதியினர்தான் என்பதை ஏற்றுக் கொண்டு, அவர் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.கட்சிக்கு அதிகமாக நண்பர்களை சம்பாதிக்க வேண்டும்.ஏற்கனவே சம்பாதித்த பகைவர்களை எப்படி நண்பர்கள் ஆக்குவது என்றும் சிந்திக்க வேண்டும்.
இந்த வழியில் சிறீதரன் தன்னுடைய தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்திக் கொள்வாராக இருந்தால், தமிழரசு கட்சியும் தப்பும். தமிழ் அரசியலிலும் அவர் தாக்கத்தைச் செலுத்தலாம். இல்லையென்றால் தமிழரசுக் கட்சி இப்போதிருக்கும் பிளவுகளால் மேலும் சிதையக்கூடிய வாய்ப்புகளே அதிகமாகத் தெரிகின்றன.