நடராசா லோகதயாளன்.
தமிழ்த் தேசியப் பிரச்சனை, அதற்கான ஒழுங்கான அரசியல்த் தீர்வு இல்லாமல் ஒரு ஆயுதத் தீர்வை இலங்கை அரசாங்கம் முன் வைத்து அதற்காக கடன்கள் பெற்று பொருளாதாரத்தை நாசமாக்கி விட்டிருக்கின்றது. என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதபதி ரணில் விக்கிரமசிங்கா நேற்று முன்தினம் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார். அந்த உரை தொடர்பில் நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இங்கே மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி தனது உரையில் நாட்டின் இனப்பிரச்சணை தொடர்பில் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தான் பதவியேற்றபோது மக்களிற்கும் இந்த சபைக்கும் அவர் சொன்னது உடனடியாக இனப்பிரச்சணைக்கான தீர்வை நாங்கள் கண்டுகொள்ளுவோம் நீங்கள் தயாரா, நீங்கள் தயாரா என ஒவ்வொருவரையும் கேட்டு 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம இந்த சபையிலே அனைவரையும் சேர்த்து அனைத்துக் கட்சிகளின் மாநாட்டையும் 3 தடவைகள் கூட்டி 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இது தீர்க்கப்படும் என்றெல்லாம் பறைசாற்றினார்.
அப்பொழுது எங்களை அழைக்கின்றபொழுதே நாங்கள் சொன்னோம் இது வெறும் வார்த்தைகள் இதனைச் செய்ய அவருக்கு அரசியல்ப் பலம் கிடையாது இனப்பிரச்சனைக்கான தீர்வை எதிர்க்கிரவர்களை போலிப் பெரும்பான்மையாக வைத்துக்கொண்டு ஜனாதிபதி இதனைச் செய்ய முடியாது. வெறும் வார்த்தை ஜாலங்களாலே எம்மை ஏமாத்துகின்றார் ஆனாலும் நாங்கள் இதற்கு தடங்களாக இருந்தோம் எனச் சொல்லாமல் இருப்பதற்காக அனைத்துக் கூட்டங்களிற்கும் நாங்கள் போனோம். எங்களுடைய ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்பதனை வெளிப்படுத்தினோம். அப்படிச் செய்திருந்தும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 3வது, 4வது கூட்டத்திலே எமது கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியைப் பார்த்துச் சொன்னார் இந்தக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளிலே ஒரேயொரு முடிவுதான் நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனச் சொன்னார்.
கூட்டங்கள்கூடி, கூட்டங்கள்கூடிச் செய்வதாக கூறிப் பழக்கமாகிவிட்ட ஜனாதிபதி இந்த விடயத்தை முற்றுமுழுதாக மறுதலித்தவராக அரசாங்க கொள்கைப் பிரகடனத்தை இங்கே உரையாற்றியிருக்கின்றார். இதனை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். ஏனென்றால் இந்த நாட்டிலே பொருளாதாரப் பிரச்சணை ஏற்படுவதற்கு அத்திவாரமே இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ்த் தேசியப் பிரச்சணை, அதற்கான ஒழுங்கான அரசியத் தீர்வு இல்லாமல் ஒரு ஆயுதத் தீர்வை இலங்கை அரசாங்கம் முன் வைத்து அதற்காக கடன்கள் பெற்று பொருளாதாரத்தை நாசமாக்கி விட்டிருக்கும் காரணத்தை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றார்.