கடந்த ஆறாம் திகதி காலை, உடுவில் மகளிர் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் தொடங்கின. கல்லூரி மண்டபத்தில் தொடக்க நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் தலைப்பு “அந்திசோ” என்ற கிரேக்க வாசகம் ஆகும். அதன் பொருள் “மலர்தல்“என்பதாகும்.
200 ஆண்டுகளுக்கு முன் வயதில் இளைய அமெரிக்க இறை ஊழியரான ஹரியட் வின்ஸ்லோ உடுவில் மகளிர் கல்லூரியைத் தொடங்கினார்.அது அப்பொழுது பெண்கள் மத்திய கல்லூரி என்று அழைக்கப்பட்டது.முதல் இரண்டு மாணவிகளும் யார் என்றால்,மிஷன் வீட்டின் சாளரங்கள் வழியே விடுப்புப் பார்த்த இரண்டு சிறிய பெண்கள்தான்.ஹரியட்,அவர்களுக்குப் படிப்பிக்கத் தொடங்கினார்.அதிலிருந்தே ஒரு மகத்தான நிறுவனம் பிறந்தது. ஆசியாவின் மிகப் பழைய, விடுதி வசதிகளோடு கூடிய,பள்ளிக்கூடம் அதுதான்.பெண்களைக் கற்பிப்பது தொடர்பாக சமூகத்தில் இருந்த எதிர்ப்புகளின் மத்தியிலும் அங்கு கற்கும் பெண்களின் தொகை மெதுமெதுவாக உறுதியாக அதிகரித்தது.ஹரியட் தனிப்பட்ட பல இழப்புக்களால் துன்பப்பட்டார்.முடிவில் தனது 33ஆவது வயதில்–இளவயதில்,இறந்து போனார்.
உடுவில் மகளிர் கல்லூரியின் 200 ஆண்டு கால வரலாற்றில் 10 அதிபர்கள் பணி புரிந்திருக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் கல்லூரியின் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புவதில் தங்களுடைய அழியாத அடையாளங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.இப்பொழுது ரோஷனா குலேந்திரன் அதிபராக இருக்கிறார்.
பெண்களைப் படிப்பிப்பது அவர்களைத் திருமணத்துக்குத் தயாராக்குவதற்கு என்று,முன்பொருகாலம் நகைச்சுவையாகக் கூறப்படுவதுண்டு.அக்கூற்றில் ஓரளவுக்குப் பொறாமையும் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உடுவில் மகளிர் கல்லூரி அதைவிட அதிக தூரம் பயணித்தது.கல்வி மற்றும் இணைப் பாடவிதான நடவடிக்கைகள்மூலம் சமூகத் தடைகளை உடைத்து, இளம் பெண்களைச் சக்தி மிக்கவர்கள் ஆக்கிய முதலாவது கல்லூரி அது. இலங்கைத் தீவின் செழிப்பான கல்வி வரலாற்றில் அது ஒரு பெரிய பங்களிப்பு.
கடந்த ஆறாம் திகதி நடந்த விழாவில்,பிரதம விருந்தினராகிய திருமதி ஷிராணி மில்ஸ் அதை முக்கியத்துவப்படுத்திக் கூறினார்.அவர் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார்.மற்றவர்களுக்கு இரங்குவது மற்றவர்களின் மீது அனுதாபப்படுவது,மற்றவர்களின் திறமைகளைக் கட்டியெழுப்புவது என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட போக்காக மாறுவதற்கும் வெகு காலத்துக்கு முன்னரே,உடுவில் மகளிர் கல்லூரி,அவற்றுக்குரிய முக்கியத்துவத்தைக் கொடுத்தது என்பதனை அவர் தனது உரையில் அழுத்திக் கூறினார்.
அக்கல்லூரி எப்பொழுதும் பேணிய உயர் தராதரத்துக்கு அன்றைய நிகழ்வு ஒரு சான்றாக அமைந்தது.அந்நிகழ்வில் பங்குபற்றியவர்கள் தன்னம்பிக்கையோடும் விடயங்களை சிறப்பாக எடுத்துக் கூறும் ஆற்றலோடும் காணப்பட்டார்கள்.ஆரம்பப் பள்ளிச் சிறார்கள் ஆர்வத்தோடு,வசீகரமாக மேற்கத்திய நடனத்தை ஆடினார்கள்.வளர்ந்த பிள்ளைகள் உயிர்த்துடிப்போடு பாரம்பரிய நடனத்தை ஆடினார்கள்.200ஆவது ஆண்டு நிறைவையொட்டி பாடல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இசைக்கப்பட்டன.கீழைத்தேய மற்றும் மேலைத்தேய இசைகளில் பாடப்பட்ட அப்பாடல்கள் உடுவில் மகளிர் கல்லூரியிடமிருந்து எப்பொழுதும் எதிர்பார்க்கப்படும் தராதரத்தை வெளிப்படுத்தின.இரண்டு நினைவுச் சின்னங்கள் மாணவர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன.அவையனைத்தும் அதிபர் மற்றும் ஆசிரியர் குழாத்தினால் பண்படுத்தப்பட்ட பிள்ளைகளின் திறமைக்குச் சான்றாக அமைந்தன.
உலகில் இப்பொழுது நேர்மையும் விசுவாசமும் எல்லா நிலைகளிலும் அருகிக் கொண்டுவரும் இத்தருணத்தில், “உண்மை உன்னை விடுதலை செய்யும்” என்ற பாடசாலையின் இலட்சிய வாசகமானது மகத்தான முக்கியத்துவத்தோடு அங்கே எதிரொலித்தது.
தனிப்பட்ட முறையில் நான் ஒன்றைச் செல்ல வேண்டும். அங்கே நான் பிரசன்னமாகியிருந்தது தனிப்பட்ட முறையில் எனக்குப் பேருவையாக இருந்தது. அந்தப் பள்ளிக்கூடம் தொடர்பான எனது ஞாபகங்கள் மிகவும் மங்கலானவை. எனது தாயார் இணுவில்,மக் லியோட் ஆஸ்பத்திரியில் மருத்துவப் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்த காலகட்டத்தில் அப்பள்ளிக்கூடத்தின் ஆரம்பப் பிரிவில் நான் இரண்டு ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்றேன்.
தன்னிகரற்ற அந்த நிறுவனத்தின் மிகச் செழிப்பான 200 ஆண்டுகால வரலாற்றை நினைவு கூரும் அற்புதமான கொண்டாட்டங்களை,அதிபரும் ஆசிரியர் குளாமும் மாணவர்களும் இணைந்து சிறப்பாக முன்னெடுப்பார்கள் என்று நான் மிக உறுதியாக நம்புகிறேன்.
மருத்துவ நிபுணர்
தயாளன் அம்பலவாணர்