கைகளில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளுடன் ‘சிரிசி’ யின் தற்போதைய நிர்வாகக் குழு ஒட்டுமொத்தமாக இராஜினாமாச் செய்ய வேண்டும்’ எனவும் ஆர்ப்பரிப்பு
(ஸ்காபுறோவிலிருந்து சத்தியன்)
இலங்கை சுதந்திரமடைந்த தினமான பெப்ரவரி 4ம் திகதி அன்று கனடாவில் கனடிய தமிழர் பேரவை அலுவலகம் முன்பாக கூடிய நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கனடிய தமிழர் பேரவையானது உலகத் தமிழர் பேரவையோடு இணைந்து இலங்கை அரசுக்கு சமர்ப்பித்துள்ள ‘இமாலய பிரகடனத்தை உடனடியாக வாபஸ் வாங்கவேண்டும் என்றும் இதை மறுக்கும் பட்சத்தில் தற்போதைய நிர்வாகக் குழு முழுமையாக தங்கள் பதவிகளை இராஜினாமாச் செய்து பதவி விலக வேண்டும் என்றும் அங்கு கூடிய தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அச்சமையம் அவர்களில் பலர் கைகளில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளுடன் ‘சிரிசி யின் தற்போதைய நிர்வாகக் குழு ஒட்டுமொத்தமாக இராஜினமாச் செய்வதையே கனடியத் தமிழர்கள் விரும்புகின்றார்கள் என்றும் கோசங்கள் எழுப்பினர்
இது பற்றி மேலும் அறியப்படுவதாவது:-
இலங்கையின் சுதந்திர தினத்தை இலங்கை அரசாங்கம் மாத்திரமன்றி ரொறன்ரோ நகரில் உள்ள இலங்கையின் உதவித் தூதுவர் அலுவலகமும் கொண்டாடி வருகின்றது. அன்றைய தினம் கனேடிய தமிழர் பேரவைக்கு முன்பாக கூடிய மக்கள் தமிழர்களுக்கு எதிரான இமாலய பிரகடனத்தை உருவாக்கி அதனை இலங்கை அரசிடம் சமர்ப்பித்த கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பின் அலுவலகத்திற்கு முன் தமிழர்களுக்கு ஒரு சிறு அமைப்பாக இருந்து இயங்கிக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிநிதியாக செயல்படுவதினையும் கண்டித்து ‘இமாலய பிரகடனம்’ என்பது ஒரு தமிழர்களுக்கு எதிரான ‘பிரளயம்” என்றும் ஒலி எழுப்பினர். தமிழ் மக்களுக்கு எதிரான தீர்மானம் என்றும் தெரிந்தும் அதனை தொடர்ந்தும் அமுல்செய்வதில் கனடிய தமிழர் பேரவையின் தலைவி தீவிரமாக செயற்படுவை எதிர்த்து,ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பினர் ராஜினாமா செய்ய கோரியும் இனிமேலும் புத்த பிக்கு மற்றும் சிங்கள அரச கைக்கூலிகளிடம் கையேந்தி ஒட்டு மொத்த தமிழினத்தை விற்க வேண்டாம் எனவும் கோரி, கோஷம் எழுப்பினார்கள் தொடர்ந்து ‘இமால பிரகடனத்தை அமுல் செய்யும் விடயத்தில் புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து சென்ற விசமிகளின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுக்கு முட்டைகளை வீசி எறிந்து தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்
அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்று சேர்ந்த ‘நீண்ட வாகனப் பேரணியாக’ இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட இடத்திற்கு கோசங்கள் எழுப்பிய வண்ணம் சென்று அங்கு தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது