– விவசாயிகள் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முறைப்பாடு
தமிழ் அதிகாரிகள் மாத்திரம் சுற்று நிருபத்தை கடைப்பிடிக்கின்றனர் எனவும், சிங்கள உத்தியோகத்தர்கள் சுற்று நிருபத்தை கடந்து மனிதாபிமானத்துடன் 2018ம் ஆண்டு அழிவு பெற்று தந்தனர் என குறிப்பிட்ட விவசாயிகள், விவசாயத்தில் ஏற்பட்ட நட்டத்திற்கு திருப்திகரமான தீர்வில்லை என விவசாயிகள் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தமது செய்கைக்கு ஏற்பட்ட செலவு அதிகமாக உள்ளது. ஆனால் காப்புறுதி கொடுப்பனவு திருப்திகரமானதாக இல்லை. விவசாய காப்புறுதி நிறுவனம் செய்கையை மூன்று கட்டமாக மதிப்பீடு செய்துள்ளனர்.
மழை வெள்ளம் காரணமாகவே அழிவு ஏற்பட்டது. ஆனால், அதற்கு ஏற்ற இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து எமது கடித்திற்கான பதில் கிடைத்துள்ளது.
நாங்கள் இது தொடர்பாக மீண்டும் கடிதம் அனுப்ப உள்ளோம் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் சிவமோகன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் விவசாய காப்புறுதி நிறுவனத்தின் பிரதிநிதி குறிப்பிடுகையில்,
பயிர் அழிவு தொடர்பில் முழுமையான அழிவுக்கு 40,000 மட்டுமே வழங்கும் வகையில் சுற்று நிருபம் உள்ளது. அதற்கு அமைவாகவே நாம் வழங்க முடியும்.
செய்கை மேற்கொள்ள அதிக செலவுகள் விவசாயிகளுக்கு ஏற்படும். அதற்காக மேலதிக காப்புறுதியை விவசாயிகள் கமநல சேவைகள் திணைக்களம் ஊடாக பெற வேண்டும்.
இதுவரை விவசாயிகளிடமிருந்து 400 ரூபா காப்புறுதி பணம் பெறப்படுகிறது. மிகுதியை அரசாங்கம் காப்புறுதிக்காக செலுத்துகிறது. மேலதிக காப்புறுதியை விவசாயிகளே செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு அதிக இழப்பீடுகளை வழங்கி அவர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடாது. கடந்த காலத்தில் அவ்வாறு அதிக தொகை வழங்கப்பட்டதால் அதனையே விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்தார்.
இதன்போது பதில் அளித்த சிவமோகன், 2018ம் ஆண்டு எமக்கான இழப்பீடு முழுமையாக வழங்கப்பட்டது. வெளியிலிருந்து வந்த சிங்கள உத்தியோகத்தர்கள் சுற்று நிருபத்துக்கு மேலாக மனச்சாட்சியுடன் நட்டயீட்டுக்கு சிபாரிசு வழங்கினர்.
ஆனால் இங்குள்ள தமிழ் உத்தியோகத்தர்கள் சுற்று நிருபத்தை முறையாக பின்பற்றுபவர்களாகவே உள்ளனர் என தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய தீர்வை பெற்று தர வேண்டும் எனவும் அமைச்சரிடம் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் விவசாயிகளுடன் பேசி ஜனாதிபதிக்கு பதில் அனுப்புவதுடன், தமக்கும் கடிதம் ஊடாக வழங்குமாறும் தெரிவித்தார். இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சருடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.