முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற சிறுமி டானியாவுக்கு, அரசு வழங்கிய வீட்டுமனையில் வீடு கட்டிக்கொள்ள ரூ.2 லட்சத்துக்கான காசோலையை, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவருடைய மனைவி சவுபாக்யா. இத்தம்பதியின் மகள் டானியாவுக்கு(வயது 9) அரிய வகை முகச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது.
ஆகவே, தனக்கு உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வருக்கு சிறுமி டானியா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, பூந்தமல்லி அருகே தண்டலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆக. 23-ம் தேதி சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு முக சீரமைப்பு செய்யப்பட்டது.தொடர்ந்து, தமிழக முதல்வர், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
பிறகு, சிறுமி டானியாவுக்கு, 2-ம் கட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில நாட்களில் அவர் வீடு திரும்பினார். இதையடுத்து, சிறுமி டானியா வீட்டுக்குச் சென்று, நலம் விசாரித்தமுதல்வர், சிறுமிக்கு தேவையான உதவிகள் யாவும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி டானியாவின் குடும்பத்துக்கு, திருவள்ளூர் அருகே பாக்கம் கிராமத்தில் ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள நிலத்துக்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் வீடுகட்டிக் கொள்ள அனுமதி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுமி டானியாவுக்கு, பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின்படி, அரசு மானியம் ரூ. 2.10 லட்சம் போக, வீடு கட்டிக் கொள்ள பயனாளியால் செலுத்தப்பட வேண்டிய தொகை ரூ.2 லட்சத்தை, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.