(ரொறன்ரோவிலிருந்து சத்தியன்)
கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பை பிரதிநிதித்துவம் செய்த உலகத் தமிழர் இயக்கத்தினால் பல வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட கனடிய தமிழர் பேரவையின் அண்மைக்கால நடவடிக்கைகள் மீது பொதுமக்களும் கல்விமான்களும் சமூக ஆர்வலர்களும் கொண்ட அதிருப்தி காரணமாக கடந்த சில வாரங்களாக கருத்துப் பரிமாற்றங்களும் உரையாடல்களும் கனடிய தமிழர்கள் மத்தியில் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பெற்ற மத்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்விச் சபை மற்றும் நகர சபைகளின் உறுப்பினர் அனைவருமே கனடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கும் குறிப்பாக ‘இமாலயப் பிரகடனம்’ என்ற ஒரு அரசியல் சார்ந்த திட்டத்தை இலங்கையில் அறிமுகம் செய்ததில் மக்களால் நிராகரிக்கப்பெற்ற உலகத் தமிழர் பேரவையோடு இணைந்து ஒத்துழைப்பு வழங்கிய காரணத்தால அதைக் கண்டித்து வெளிப்படையான அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறாக அனைத்து தரப்பினர் மத்தியிலிருந்தும் தோன்றிய எதிர்ப்பலைகள் இன்னும் தணியாத நிலையில் ஆங்காங்கே பல உரையாடல்கள் தமிழர் சமூக மட்டத்தில் நடைபெற்று வருவதாக அறியப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் கனடிய தமிழர் பேரவையின் நிர்வாக அமைப்பில் மாற்றங்களைக் ஏற்படுத்தும் வகையில் ரொறன்ரோ நகரில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சமூக ஆர்வலர்களின் கலந்துரையாடல்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளதாகவும் மேற்படி கலந்துரையாடல்களில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கல்விமான்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு கனடிய தமிழர் பேரவை என்ற அமைப்பு கனடிய தமிழர்கள் மத்தியில் மிகவும் அவசியமான ஒன்று என்றும் அதை இயக்கத்தை தடை செய்வதிலும் பார்க்க அந்த அமைப்பின் நிர்வாகத்திலும் ஏனைய செயற்பாடுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால் கனடிய தமிழர் பேரவையின் இருப்பினால் பொதுமக்களும் முழுமையான பயனை அனுபவிக்க முடியும் என்ற கருத்துக்களும் பகிரப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.
இவ்வாறிருக்க. கனடிய தமிழர் பேரவையின் தற்போதைய தலைவியும் மிக விரைவில் தனது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளார் என்ற தகவலும் கசிந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.
அடுத்து வரும் வாரங்களிலும் விரிவுபடுத்தப்பட்ட கலந்துரையாடல்களும் செயற்பாடுகளும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலில் இடம்பெறவுள்ள எனவும் தெரியவருகின்றது