நடராசா லோகதயாளன்
இந்தியாவின் பலத்த கவலைகளுக்கு மத்தியில் சீனாவின் சர்ச்சைக்குரிய ஆய்வுக் கப்பலொன்று தற்போது மாலைத்தீவை சென்றடைந்துள்ளது.
சீனாவின் இயற்கைவள அமைச்சுக்கு அறிக்கை அளிக்கும் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான “சியாங் யாங் ஹாங் 3” (Xiang Yang Hong 3) என்ற கப்பலானது கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பயணம் மேற்கொண்டு மாலைத்தீவு தலைநகரான மலோயில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் மாலைதீவு துறைமுகம் வருகைக்கு முன்னர் இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக நீர்நிலைகளை ஆய்வு செய்ததாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் வெளிக்காட்டுவதாக தற்போது தெரிவிக்கப்படுகின்றது.
விஞ்ஞான புரிதலுக்கு பயனளிக்கும் வகையில் இந்த கப்பல் பயணம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா, கப்பல் இந்தியப் பெருங்கடலில் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் கூறியது.
இந்த கப்பலானது சீனாவின் இராணுவத்தைச் சேர்ந்ததாக இல்லாத நிலையிலும், அது இந்திய பெருங்கடலில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்து இந்தியா ஏற்கனவே தனது கவலையை வெளியிட்டிருந்தது.
கப்பலின் மாலைத்தீவு பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்பு அதிகாரியொருவர், சியாங் யாங் ஹாங் 3 கப்பல் சேகரிக்கும் தரவு பொதுமக்கள் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்று கூறியுள்ளார். இதேநேரம் குறித்த கப்பல் இந்தியப் பெருங்கடலுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளது..
இது 2021 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் உள்ள சுந்தா ஜலசந்தி வழியாக பயணித்து, இந்தோனேசிய அதிகாரிகளை அச்சுறுத்தியது.
2022 ஆம் ஆண்டில், ராக்கெட் மற்றும் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் திறன் கொண்ட யுவான் வாங் 5 என்ற இராணுவக் கப்பல் இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வந்து இந்தியாவை அச்சுறுத்தியது.
இறுதியாக 2023ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்திலும் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இலங்கையில் வந்து நிறுத்தப்பட்டது, இது இந்தியாவின் கவலையை அல்லது அச்சத்தை மேலும் அதிகரித்தது.
சியாங் யாங் ஹாங் 03 கப்பலின் வருகை ஜனவரி மாதம் மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் சீனாவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்தியுள்ளது.
இருப்பினும் அண்மைக்காலமாக விரிசலடைந்து வரும் இந்தியா மற்றும் மாலைத்தீவு இடையிலான உறவுகளுக்கு நிச்சயமாக மற்றுமோர் அடியாக இந்த ‘ஆய்வுக் கப்பல்’ மாலேயின் நங்கூரமிட்டுள்ளது பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தமது துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அந்த கப்பல் அதன் நீரில் எந்த ஆராய்ச்சியும் செய்யாது, பணியாளர்கள் சுழற்சி மற்றும் பொருட்களை நிரப்புவதற்கு மட்டுமே நிறுத்தப்படும் என்று மாலைத்தீவு கூறியுள்ளது.
இவ்வாறு 2023 ஆம் ஆண்டு இலங்கை வந்த கப்பல் துறைமுகத்தை அடைய முன்பு கூறினாலும் பின்னர் ஆராச்சிக்கும் அனுமதிக்கப்பட்டமை போன்று மாலைதீவும் அனுமதிக்கும் அல்லது அனுமதியை பெற முடியும் என சீனா நம்புகின்றது.
மாலைதீவில் இவ்வாறு வலை விரிக்கும் சீனா, இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிய 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அனுப்பவுள்ளதாக மற்றுமோர் தகவல் தெரிவிக்கின்றது.
இவற்றில் பெரும்பாலான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும், மேலும் சில கப்பல்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் நங்கூரமிடவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பி.எச். ஆர். சரிபோ டீன் தெரிவித்துள்ளார்.
இங்கு வரும் இந்த ஒரு சொகுசு பயணிகள் கப்பலில் சுமார் 1000 பயணிகள் இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் ஒரு கப்பல் இரண்டு நாட்களுக்கு இந்த நாட்டின் துறைமுகங்களில் நங்கூரமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்த சொகுசு பயணிகள் கப்பல் நடவடிக்கைகளின் மூலம் இந்நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் என நம்பப்படுகிறது.
இவ்வருடம் பெப்ரவரி 16ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 350,000ஐத் தாண்டியுள்ளது.
இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஜனவரி மாதத்தில் 208,253 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஏறக்குறைய 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன் இந்த ஆண்டு அது 25 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு இந்தியாவைச் சுற்றி கரிசனைகொள்ளும் சீனாவின் வியூகம் வெறுமனே பொருளாதார நலனை மட்டுமே அடிப்படையாக கொண்டதுதான என்பதே தற்போதைய மிகப்பெரும் கேள்வியாகவுள்ளது.
சீனாவிலிருந்து வரும் சொகுசு கப்பல், இலங்கை பயணத்திற்கு பிறகு மாலைத்தீவிற்கு செல்லும் என்றும், அப்படிச் செல்லும் போது சில சீனர்கள் அங்கு தொடர்ந்து தங்கியிருப்பார்கள் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. எனினும் இது குறித்து எந்த உறுதியாக செய்தியும் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், மாலைத்தீவிற்கு ஏராளமான சீனர்கள் செல்வதை இந்தியா கவனத்தில் எடுக்காமல் இருக்காது.
எனினும், அப்படியான ஒரு சூழலில் இந்தியா என்ன செய்யும், அல்லது செய்ய முடியும் என்பதே இப்போது எழுந்துள்ள பெரும் கேள்வி என்று பாதுகாப்பு ஆய்வாளர்களும், அரசியல் அவதானிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியப் பெருங்கள் பகுதி இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு பிராந்திய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியில் சிக்கியுள்ளது என்பது மட்டும் உண்மை.