சட்டரீதியாக கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை இந்திய அரசின் அழுத்தத்தின் பேரில் இரவோடு இரவாக விடுதலை செய்கின்றீர்கள் ஆனால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்களை ஏன் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு முடியவில்லை என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை எல்லைக்குள் உள் நுழைந்து தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்ற ரீதியாக கைது செய்யப்பட்டு, அவர்கள் இந்திய மத்திய அரசினுடைய அழுத்தத்தின் காரணமாக இரவோடு இரவாக விடுதலை செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்கள் இடம்பெறுகின்றன.
நீதிமன்றங்களில் வழக்குகள் இருந்தாலும் அதற்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகளை வழங்கி இரவோடு இரவாக விடுதலை செய்யப்படுகின்ற சம்பவங்கள் இந்த நிகழ்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த நேரத்தில் கூட சாந்தன் அவர்கள் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில்கூட ஏன் அவருக்கு இப்படியான சம்பவம் நடக்கவில்லை.
வயது முதிர்ந்த காலத்தில் கூட அவரது தாயார் ஒரு நேர உணவை உண்டு கொண்டு தன்னுடைய மகனுக்கு தன்னுடைய கையால் ஒரு நேர சாப்பாடு ஆவது ஊட்டி விட வேண்டும் என்ற ஒரு அந்த உயரிய கனவோடு காத்திருந்தார்.
அவருக்கு எவ்வாறான தேற்றுதல்களை நீங்கள் சொல்லி தேற்றுவீர்கள்?
அதே நேரத்தில் குடி வரவு குடியகல்வு திணைக்களங்கள் கூட இந்த சம்பவத்திற்கு கரிசினையாக செயல்பட்டு இருந்தால் சாந்தன் அவர்களை உயிரோடு தாயாரிடம் ஒப்படைத்திருக்க முடியும் என்பதனையும் இந்த நேரத்தில் பொறுப்போடு கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.