– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தில் சிவில் சமூகங்கள் தலையிட வேண்டும் என்று கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரை தொடர்பாக சிவில் சமூக மட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் எதற்காக சிவில் சமூகம் தலையிட வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது எதைப் பாதுகாப்பதற்காக அந்த தலையீடு? என்று அந்தக் கேள்வியை மேலும் கூர்மையாகக் கேட்கலாம்.
ஆம். சிவில் சமூகங்களின் தார்மீகத் தலையீடு என்பது ஒரு கட்சியைப் பாதுகாப்பதற்கு அல்ல. ஒரு நிர்ணயகரமான காலகட்டத்தில் தமிழ் அரசியலில் ஏற்படக்கூடிய ஒரு சேதத்தை தவிர்க்கும் நோக்கத்தோடுதான் அதைச் செய்யலாம். கட்சிகளை பாதுகாப்பது சிவில் சமூகங்களின் வேலையாக இருக்க முடியாது என்பதில் பிரதான சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெளிவாக காணப்பட்டார்கள்.
மேலும், கடந்த 15 ஆண்டு காலத் தோல்விகளுக்கும் பெரும் பொறுப்பு தமிழரசுக் கட்சி தான். இப்பொழுது தலைமை பதவிக்காகப் போட்டியிடும் இருவருமே அதற்குப் பொறுப்புத்தான். இவர்கள் யாரையும் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. இவர்கள் யாருடைய பக்கமும் நிற்க வேண்டிய தேவையும் இல்லை.கட்சி எக்கேடுகெட்டாவது போகட்டும். அது சிதையும் இடத்தில் வேறொன்று புதிதாக வரட்டும். என்று ஒர் அபிப்பிராயம் சில சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் காணப்பட்டது.
அதே சமயம் தமிழ்ச் சமூகத்தின் பொதுவான நோய்க்கூறாகிய சூழ்ச்சிக் கோட்பாடுகளை முன்வைத்து சிந்திப்பது என்ற போக்கு. சிவில் சமூகங்கள் மத்தியிலும் அவ்வாறான ராணுவப் புலனாய்வுச் சிந்தனையாளர்கள் உண்டு. தமிழரசுக் கட்சியின் விடயத்தில் சிவில் சமூகங்கள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கைக்குள் ஏதும் உள்நோக்கம் உண்டா என்ற ஒரு சந்தேகத்தை சில சிவில் சமூகத்தவர்கள் கிளப்பினார்கள்.
இவ்வாறான வாதப்பிரதிவாதங்களில் சிவில் சமூகங்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே திருகோணமலையில், அந்த மறை மாவட்டத்தின் ஆயர் தலைமையில் ஒரு சமரச முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அது எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்த தரப்புகள் நிபந்தனையின்றி அந்த வழக்கைக் கைவிடுவதற்குத் தயாராக இருக்கவில்லை. அதனால் ஆயரின் முயற்சி வெற்றி பெறவில்லை.
எனினும் யாழ்ப்பாணத்தில் இந்து மதத் தலைவர்களும் உள்ளிட்ட மதத் தலைவர்களின் சமூகம் ஒன்று இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு தமிழரசுக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசுவது என்று ஒரு நகர்வை முன்னெடுத்தது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நல்லை ஆதீனத்தில் ஒரு சந்திப்பு நடக்கவிருந்தது. ஆனால் சுமந்திரனின் தாயார் இயற்கை எய்தியதையடுத்து சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கிற்கு சில நாட்களே இருக்கும் ஒரு பின்னணியில், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களின் தலையீடு பயன் பொருத்தமானதாக இல்லாத ஒரு வெற்றிடத்தில், வழக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படலாம் என்ற ஒரு நிலைதான் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் காணப்படுகிறது. சில சமயம் சுமந்திரனுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பு இந்த விடயத்தில் தாக்கம் செலுத்துமாக இருந்தால் ஏதும் மாற்றங்கள் நிகழலாம். இல்லையென்றால் வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்.
இந்த விடயத்தில் சிவில் சமூகங்களின் தலைஇட வேண்டும் என்ற சிந்தனையே மிகவும் பிந்தித்தான் ஏற்பட்டது. அதுவே ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. நடப்பு அரசியல் அரங்கில் நிகழ்வுகள் தொடர்பில் சிவில் சமூகங்கள் எந்தளவுக்கு கூருணர்வோடு–சென்சிட்டிவ் ஆகக்–காணப்படுகின்றன என்பது.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான ஒரு கூட்டை உருவாக்கியபொழுது அதில் சிவில் சமூகங்கள் தலையிட்டன.குறிப்பாக மறைந்த சோபித தேரின் தலைமையில் சிங்களச் சிவில் சமூகங்கள் தலையீடு செய்தமையை, பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட “அரசியல் கட்சிகளின் மீதான சிவில் சமூகத்தின் தார்மீகத் தலையீடு” என்று வர்ணித்தார்.
உண்மைதான்.அரசியல் சமூகம் முடிவெடுக்க முடியாது திணறிக் கொண்டிருக்கும் பொழுது, சிவில் சமூகத்தின் தார்மீகத் தலையீடு தேவையாக இருக்கிறது.
அரசியலில் நேரடியாக ஈடுபட விரும்பாதவர்கள் அல்லது ஈடுபட முடியாதவர்கள் அல்லது தேர்தல் மைய அரசியலில் வெறுப்பும் சலிப்பும் அடைந்தவர்கள் போன்ற வகையினர் பொதுவாக சிவில் சமூகங்களில் இணைவதுண்டு.அவர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கம் அற்றவர்கள் என்பதுதான் அவர்களுக்குரிய மகிமை. அதேசமயம் தமது சமூகத்தின் கருத்துக்களை உருவாக்குவதில் அபிப்பிராயங்களை திரட்டுவதில் அவர்கள் செல்வாக்கு செலுத்த முடியும் என்பது அவர்களுக்கு உரிய பலம்.
இவ்வாறு தேர்தல் மைய அரசியல் அபிலாசைகள் இல்லாதவர்களும் அதேசமயம் தமது சமூகத்தின் நீதிக்காக குரல் கொடுப்பவர்களுமாகிய சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு எப்பொழுதும் சமூகத்தில் குறிப்பாக அரசியல் சமூகத்தில் மதிப்பான இடம் இருக்கும். ஆனால் தமிழ் அரசியல் சூழலில் அவ்வாறான பலமும் மதிப்பும் எந்த ஒரு சிவில் சமூகத்திற்கும் கிடையாது.
மிகக்குறிப்பாக அதிக ஆசனங்களை வென்று பலமாக காணப்படும் கட்சி சிவில் சமூகங்களை மதிக்காது. அல்லது சிவில் சமூகங்களை இடைஞ்சலாகப் பார்க்கும். இதுதான் கடந்த 15 ஆண்டு கால அனுபவம். மாற்று ஓட்டத்துக்குரிய கட்சியாக அல்லது ஒப்பீட்டளவில் பலம் குறைந்த கட்சியானது, சிவில் சமூகங்களோடு பெருமளவுக்கு ஒத்துழைக்கும். அதுகூட இயலாமையின் பாற்பட்ட ஒத்துழைப்பா? என்ற கேள்வி உண்டு. ஒரு பலமான அரசியல் எதிரியை எதிர்கொள்வதற்கு ஒப்பீட்டளவில் பலம் குறைந்த கட்சி சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பைப் பெறுவது என்பது பொதுவான ஒரு போக்கு. அவ்வாறு சிவில் சமூகங்களின் ஒத்துழைப்போடு அக்கட்சியானது பலமடைந்த பின் அது சிவில் சமூகங்களை அவமதிப்பதும் உண்டு. கடந்த 15 ஆண்டுகளில் அதுவும் நடந்திருக்கின்றது.
இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில்,தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான சிவில் சமூகங்கள் அறிக்கைச் சமூகங்களாகவே காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக செயற்பாட்டு ஒழுக்கத்தை பொறுத்தவரை அவை அனேகமாக “ரியாக்டிவ்” ஆனவை. அதாவது அரசியலில் நிகழும் நகர்வுகளுக்குப் பதில் வினை ஆற்றுவது. மாறாக ஒரு புதிய போக்கை உருவாக்கும் “ப்ரோஆக்டிவ்” ஆன சிவில் சமூகங்கள் இல்லை.
இப்படிப்பட்டதோர் சிவில் சமூகச் சூழலில், ஒரு சிவில் சமூகம் சொன்னால் கட்சிகள் கேட்கும் என்றோ அல்லது மக்கள் கேட்பார்கள் என்றோ கூறத்தக்க ஒரு பலமான நிலை தமிழ் சமூகத்தில் இன்னமும் ஏற்படவில்லை. பெரும்பாலான சிவில் சமூகங்கள் அறிக்கைச் சமூகங்களாகதான். நீதியான ஒரு நிலைப்பாட்டை எடுத்து அந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவை திரட்டுவது; சூம் சந்திப்புகளை ஒழுங்கு செய்வது; அல்லது நேரடியாக சந்திப்புகளை ஒன்று செய்வது; அல்லது கூட்டு அறிக்கைகளைத் தயாரித்து சிவில் சமூகப் பிரதிநிதிகளிடமும் கையெழுத்துக்களைப் பெறுவது…போன்ற நடவடிக்கைகளில்தான் அவர்கள் பொதுவாக ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, தேர்தல் காலங்களில் அவர்கள் எப்பொழுதும் தமிழ்ப் படங்களில் வரும் போலீசைப்போல சண்டை முடிந்த பின் கடைசி நேரத்தில் விசில் அடித்துக் கொண்டு வந்து அறிக்கை விடுவார்கள். இப்பொழுது தமிழரசுக் கட்சியின் உன் வீட்டுச் சண்டையிலும் அதுதான் நிலைமை.
இதில் இரண்டு தரப்பிலும் நிற்கும் சட்டத்தரணிகள் யார் யார் என்று பார்த்தால்,அதில் முக்கியமான இருவர் ஒரே சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் சிறீதரன் அணியின் சட்டத்தரணியாக உள்ளார். மற்றவர் யாழ்ப்பாணத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சிறீதரனுக்கு எதிரான அணியின் சட்டத்தரணியாக உள்ளார்.
தமிழ் சிவில் சமூகங்கள் மத்தியில் உள்ள பிரச்சினை என்னவென்றால்,இங்கு தீவிரமாகச் செயல்படும் சிவில் சமூகங்கள் ஏதோ ஒரு கட்சிக்கு நெருக்கமானவைகளாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ் சிவில் சமூக அமையத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு நெருக்கமானது என்று சில விமர்சிகர்கள் விமர்சிப்பது உண்டு. ஆனால் அந்த அமைப்புக்குள் இருக்கும் எல்லாருமே அவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிபந்தனையற்ற ஆதரவாளர்கள் அல்ல.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மீது விமர்சனத்தை கொண்டவர்களும் அங்கே உண்டு.
கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளை அதிகமாக முன்னெடுத்தவர் மன்னாரைச் சேர்ந்த சிவகரன். இப்பொழுது அவரும் ஒரு பக்கம் வைத்து பார்க்கப்படுகிறார்.
இப்படிப்பட்டதோர் சிவில் சமூகப் பின்னணிக்குள், தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிணக்கைத் தீர்க்கும் விதத்தில், இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும், தமிழ் சிவில் சமூகங்களால் தலையீடு செய்ய முடியவில்லை. இவ்வாறு ஏற்கனவே உள்ள சிவில் சமூகங்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட சிவில் சமூகங்கள் உணர்த்திறனோடு செயற்படாத வெற்றிடத்தில்தான் புதிது புதிதாக யார் யாரோ சிவில் சமூகங்களை உருவாக்குகிறார்கள். ராணுவ புலனாய்வாளர்கள் உட்பட.