”1988 இல் தெரிவான வடகிழக்கு மாகாணசபை 1990ஆம் ஆண்டிலேயே கலைக்கப்பட்டது .அடுத்தகட்டமாக 13 இல் தமிழர்களுக்கு முதுகெலும்பாக இருந்த வடக்கு,கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் 2007ஆம் ஆண்டு வட,கிழக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டது .தற்போது 13 இலுள்ள பொலிஸ் அதிகாரத்தை நீக்க 22ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது ”
கே.பாலா
தமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே இலங்கை அரசியலமைப்பு சட்டப் பிரிவாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மட்டுமே இன்றுவரை குற்றுயிரும் குலையுயிருமாக இருந்துவரும் நிலையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒரேயடியாக கொன்று அதன் சவப்பெட்டிக்கான இறுதி ஆணி அடிக்கும் வேலை பேரினவாத கட்சியான ”பிவிதுரு ஹெலஉறுமய”வின் தலைவர் உதய கம்மன் பிலவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புரையோடிப்போன இனப்பிரச்சினை மற்றும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி இந்த 13ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு நாட்டில் மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கில், இந்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்த 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் 9 மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபைகளாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தன.அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையிலேயே இந்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த 13 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்தின் ஊடாக தமிழர்களுக்கு அதிகமாக அரசியல் அதிகாரங்கள் கொடுக்கப்படுகின்றன என்று பேரினவாத தலைவர்கள்,கட்சிகள், சிங்களவர்கள் எதிர்த்தனர்.அதேவேளை தமிழ் மக்களுக்கு, இந்த ஒப்பந்தம் போதுமானளவு அதிகாரங்களைப் பகிரவில்லை என்று மக்களின் உரிமைகளுக்காக ஆயுதப் போரில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளும் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடான இந்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்த்தனர்.
இந்த 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் முதல் குழந்தையாக 1988ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட முதல் வடகிழக்கு மாகாணசபை 1990ஆம் ஆண்டிலேயே அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்த மாகாண சபையானது பதினாறு மாதங்கள் மட்டுமே செயற்பட முடிந்தது.இது நடந்து 17 ஆண்டுகளின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி ( ஜே .வி.பி.) 2006ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கின் அடிப்படையில் 2007ஆம் ஆண்டில் வட,கிழக்கு இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அதன் பின், தேர்தல் நடத்தப்பட்டு 2008இல் கிழக்கு மாகாணசபை உருவானது.
இந்தியாவின் வற்புறுத்தலினால் உருவான 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு எந்தவித அதிகாரங்களும் கிடைத்து விடக்கூடாது என்பதில் கண்கொத்திப்பாம்பாக இருந்த பேரினவாதிகள் தமது முதல் நடவடிக்கையாக 1988 இல் தெரிவான வடகிழக்கு மாகாணசபையை 1990ஆம் ஆண்டிலேயே கலைத்தனர்.அடுத்தகட்டமாக 13 இல் தமிழர்களுக்கு முதுகெலும்பாக இருந்த வடக்கு,கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் 2007ஆம் ஆண்டு வட,கிழக்கு இணைப்பைத் துண்டித்தனர்.தற்போது 13 இலுள்ள பொலிஸ் அதிகாரத்தை நீக்க முடிவெடுத்துள்ளனர்.
ஆனால் மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் ,தீர்வுகள் வழங்கப்படுமென தமிழர்களையும் சர்வதேசத்தையும் தொடர்ந்தும் ஏமாற்றி வந்தனர்.பேரினவாதிகளான ராஜபக்ஸக்களின் ஆட்சியில் கூட தமிழர்களுக்கு 13 பிளஸ் ,13 பிளஸ்,பிளஸ் அடிப்ப டை யில் தீர்வுகள் வழங்கப்படுமென ஐ.நா.வுக்கு கூட வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் மறுபுறத்தால் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஆயுளை முடிக்கும், அதிகாரங்களை குறைக்கும் தந்திரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
13 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்தின் மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின்ற போதும் மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்காதிருக்கின்றது.அதிலும் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க ஒட்டுமொத்த பேரினவாத தலைவர்களும் கட்சிகளும் கடும் எதிர்ப்புக்களை பகிரங்கமாகவே வெளியிட்டு வருகின்றனர். அதிலும் சிலர் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் அடுத்து வரும் யுத்தம் சிங்கள இராணுவத்துக்கும் தமிழ் பொலிஸுக்குமாகத்தான் இருக்கும் எனவும் பொது வெளியில் கூறி வருகின்றனர்
இவ்வாறான சூழலில் சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தை, முழுவதுமாக நடைமுறைப்படுத்த வேண்டும், அதனை நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட்டு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் எனக் கோரி இந்தியப் பிரதமர் மோடிக்கும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தமிழ்க் கட்சித் தலைவர்கள் கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கும் நிலையில்தான் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒரேயடியாக கொன்று அதன் சவப்பெட்டிக்கான இறுதி ஆணி அடிக்கும் வேலையை பேரினவாத கட்சியான ”பிவிதுரு ஹெலஉறுமய”வின் தலைவர் உதய கம்மன் பில முன்னெடுத்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை இரத்து செய்யும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த தனிநபர் சட்டமூலத்தை உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி சமர்ப்பித்தார்.பாராளுமன்றம் அன்று காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தலைமையில் கூடியபோதே மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை இரத்து செய்யும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த தனிநபர் சட்டமூலத்தை கம்மன்பில சமர்ப்பித்த போது இன்னொரு பேரினவாதியான விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி எம்.பி.யான மொஹமட் முஸம்மில் அதனை வழிமொழிந்தார்
இதற்கமையவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை .இரத்து செய்யும் வகையிலான 22 ஆவது திருத்த தனிநபர் சட்டமூலம் கடந்த 12ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு தற்போது பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
52 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ், உதய கம்மன் பிலவின் இந்த மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை .இரத்து செய்யும் வகையிலான 22 ஆவது திருத்த தனிநபர் சட்டமூலம் பாராளுமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட்டவுடன் 52(3) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அச்சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாணதா மற்றும் பதின்மூன்றாம் திருத்தத்தின் ஏற்பாடுகளிற்குட்படுகின்றதாவென்பது தொடர்பாகச் சட்டமா அதிபரின் கருத்தை அறிந்துகொள்வதற்காக அச்சட்டமூலத்தினை சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றது. 52(3) ஆ நிலையியற் கட்டளையின் பிரகாரம் ச சட்டமா அதிபர் தனது அவதானிப்புக்களை ஆறு வாரங்களிற்குள் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
அச்சட்ட மூலத்திற்கான சட்டமா அதிபரின் அவதானிப்பினை பெற்றுக்கொண்டதன் பின்னர் 52(4) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் மூன்று மொழிகளிலும் மீண்டும் வர்த்தமானி அச்சிடப்படுகின்றது. இந்நிலையில் இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்ப்புக்கள் இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் , சிவில் அமைப்புக்கள்,தனி நபர்கள் ,கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய முடியும்.
வர்த்தமானி வெளியிடப்பட்ட திகதியில் இருந்து 7 நாட்கள் கழிந்ததன் பின், சட்டமூலமானது, முதலாம் மதிப்பீட்டிற்காக 52(5) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஒழுங்குப் பத்திரத்திலே சேர்க்கப்படுகின்றது. பாராளுமன்றமானது தனிநபர் சட்டமூலத்தின் முதலாம் மதிப்பீட்டினை அங்கீகரிக்க வேண்டும்.
பிரேரணை ஒன்று சபைக்கு விடப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதும் அல்லது சபையால் அனுமதி வழங்கப்படாதபோது இருபதிற்கும் குறையாத உறுப்பினர்கள் அவ்வுறுப்பினரின் பிரேரணையை ஆதரித்துத் தத்தம் இடங்களில் எழுந்து நின்றால், 52(6) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அச்சட்டமூலம் முதலாம் மதிப்பீடு செய்யப்பட்டு அச்சிடுவதற்கு கட்டளையிடுவதாகக் கருதப்படும்.
முதலாம் மதிப்பீட்டின் பின்பு குறிப்பிட்ட சட்டமூலத்தை அச்சிடுவதற்கான கட்டளை வழங்கப்படும் பட்சத்தில், அதனை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் 52(6) நிலையியற் கட்டளையின் பிரகாரம் அறிக்கையிடும் பொருட்டுப் பொருத்தமான அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்படும்.
அமைச்சரின் அறிக்கையானது, அரசியலமைப்பின் உறுப்புரை 77 இற்கு அமைய, சட்ட மாஅதிபரின் குறிப்புரைகளுடனும் அமைச்சரவை அங்கீகாரத்துடனும் பாராளுமன்றத்திற்குக் கிடைக்கப் பெற்றதன் பின்பு,சட்டமூலமானது ஓர் அறிக்கை வடிவிலே அச்சிடப்பட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அமைச்சர் சட்டமூலத்தின் சட்டவாக்கத்தினை அங்கீகரிக்காதவிடத்து சட்டமா அதிபரின் சான்றிதழ் மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் என்பன அவசியமற்றதாகும்.
அமைச்சரின் அறிக்கை ஆறு மாதத்திற்குள் கிடைக்காதவிடத்து, சட்டமூல அலுவலகமானது, 52(7) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம், அதற்குப் பொறுப்பான உறுப்பினர் விரும்பும் தினத்தில் இரண்டாம் மதிப்பீடு செய்யப்படுவதற்காக அச்சட்டமூலம் ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
அமைச்சரின் அறிக்கையானது பாராளுமன்றச் சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமூலத்தின் மீது இரண்டாம் மதிப்பீடு நடத்தப்பட்டதன் பின் சட்டமூலமானது சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றது.சட்டமூலமானது பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டதன் பின்பு 72 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டமூலத்தின் மீது மூன்றாம் மதிப்பீடு நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றது.
மூன்றாம் மதிப்பீட்டின் பின், 73 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செய்யப்படுகின்ற முன்னறிவித்தலுக்கிணங்க, வார்த்தைகள் அல்லது வரைவு தொடர்பான திருத்தங்களை அதில் செய்யலாமென்பதோடு 74 ஆம் இலக்க நிலையியற் கட்டளையினதும் அரசியலமைப்பின் 79 மற்றும் 80 ஆம் உறுப்புரைகளினதும் கீழ் சபாநாயகரின் சான்றுரைக்காக சமர்ப்பிக்கப்படும்.
தற்போது உதய கம்மன் பிலவின் இந்த மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை .இரத்து செய்யும் வகையிலான 22 ஆவது திருத்த தனிநபர் சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிராக தமிழ் தரப்புக்கள் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளன.இதற்கு உயர் நீதிமன்றம் தனது பரிந்துரைகள், வியாக்கியானத்தை வழங்கும் .அதில் பொலிஸ் அதிகாரத்தை நீக்க சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் வலியுறுத்தாது விட்டால் தனிநபர் சட்டமூலம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படும். அவ்வாறு வாக்களிப்புக்கு விடப்பட்டால் அது நிச்சயம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்.
ஏனெனில் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிக்க வேண்டுமென்பதில் சிங்களத்தரப்புக்கள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளன.20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக இதனை அவர்கள் நீக்க எடுத்த முயற்சிகள் கை கூடாத நிலையில் தற்போது 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த தனி நபர் சட்டமூலம் ஊடாக தமது நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றுவதில் உறுதியாகவுள்ளனர். அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் ஒருவரே சபாநாயகராக இருப்பதும் இந்த மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரத்தை நீக்கும் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்ற உதவியாகவே இருக்கும்.