நடராசா லோகதயாளன்
காணமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்பில் காலத்தை இழுத்தடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடகிழக்கில் அரச பாதுகாப்பு படைகளால் யுத்த காலப்பகுதியில், பலவந்தமாக கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் நீதி கேட்டு தொடர் போராட்டம் ஆரம்பித்து அதன் ஏழாவது நிறைவு தினத்திலே மீண்டும் ஒரு கவனயீர்ப்பு போராட்ட பேரணியை நடத்தி ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு ஆறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இக்கோரிக்கைகள் நியாயமானது. உறவுகளை பறிகொடுத்த வலிகளோடு தொடர் போராட்டங்களை நடத்தி வரும் வடகிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் தமது முழுமையான ஆதரவை நடத்துவதோடு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்றுமாறு ஐ.நா மனித உரிமை பேரவையை வலியுறுத்துகின்றது.