கனேடிய பல் மருத்துவ திட்ட (CDCP) விண்ணப்பங்கள் விரிவாக்கப்படுகின்றன: தகுதிபெறுவார்களெனக் கருதப்படும் 72 வயதை அடைந்த முதியவர்கள் விண்ணப்பிக்கக் கோரும் கடிதங்களை ஃபெப்ரவரி முதலாந் திகதி முதல் பெறுவார்கள்.
கனேடிய அரசு கனேடிய பல் மருத்துவ திட்டத்தை (CDCP) கடந்த மாதம் ஆரம்பித்தது. கனேடிய பல் மருத்துவ திட்டம் (CDCP) தற்போது தனிப்பட்ட பல் மருத்துவ காப்புறுதி இல்லாத 9 மில்லியன் வரையானோர் வாய்ச் சுகாதாரப் பராமரிப்பைப் பெறுவதில் நிலவும் நிதிச் சுமையைக் குறைப்பதற்கான சமஷ்டி அரசின் புதிய திட்டமாகும்.
டிசம்பர் நடுப்பகுதியின் பின்னர் சேர்விஸ் கனடா (Service Canada) 400,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளது. சேர்விஸ் கனடா திணைக்களம் ஒவ்வொரு மாதமும் வயதின் அடிப்படையில் முதியவர்களின் புதிய பிரிவுகளைத் தொடர்புகொள்ளும். 77 வயதிற்கு மேற்பட்டோர் தற்போதும் விண்ணப்பிக்கக் கூடியதாக இருக்கும் அதேவேளை, பெப்ரவரி மாததத்தில் 72 வயதிற்கும் 76 வயதிற்கும் இடைப்பட்டோருக்கு இந்த திட்டத்தை கனடிய அரசு விரிவாக்கியுள்ளது
. இதன்படி, தகுதி பெறுவார்களெனக் கருதப்படும் 72 முதல் 76 வயது வரையான முதியவர்கள் கனேடிய பல் மருத்துவ திட்டத்திற்கு (CDCP) விண்ணப்பிக்குமாறு கோரும் கடிதங்களைப் பெறுவார்கள். தகுதி பெறுவதை உறுதி செய்வது குறித்த விபரங்களும், தொலைபேசி மூலம் விண்ணப்பிப்பதற்கான விபரங்களும் இந்தக் கடிதத்தில் இருக்கும்.
கனேடிய பல் மருத்துவ திட்டம் (CDCP) இடையூறுகளின்றி நடைமுறைப்படுத்துவதற்காக சில கட்டங்களாக செயற்படுத்தப்படுகிறது:
• 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து தகுதி பெறுவார்களெனக் கருதப்படும் 77 வயதை அடைந்த முதியவர்களை விண்ணப்பிக்குமாறு கோரும் கடிதங்களை சேர்விஸ் கனடா அனுப்பியது.
• பெப்ரவரி மாதம் முதலாந் திகதியில் இருந்து 72 முதல் 76 வயது வரையான முதியவர்களை விண்ணப்பிக்குமாறு கோரும் கடிதங்களை சேர்விஸ் கனடா அனுப்பும்.
• மார்ச் மாதம் முதலாந் திகதியில் இருந்து 70, 71 வயதான முதியவர்களை விண்ணப்பிக்குமாறு கோரும் கடிதங்களை சேர்விஸ் கனடா அனுப்பும்.
• 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் விண்ணப்பங்கள் இணையத்தின் மூலமான விண்ணப்ப முறைக்கு மாற்றப்படுவதுடன், 65 வயதை அடைந்த முதியவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவார்கள்.
• 2024 ஆம் ஆண்டு ஜுனில், செல்லுபடியாகும் Disability Tax Credit சான்றிதழை வைத்திருப்போரும், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களும் இணையத்தில் விண்ணப்பிக்கக் கூடியதாக இருக்கும்.
• 2025 ஆம் ஆண்டில் இருந்து 18 வயதிற்கும் 64 வயதிற்கும் இடைப்பட்ட எஞ்சிய, தகுதியுள்ள, அனைத்துக் கனேடியர்களும் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கக் கூடியதாக இருக்கும்.
கனேடிய பல் மருத்துவ திட்டத்தில் (CDCP) சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு சேர்விஸ் கனடா திணைக்களத்தால் ஒருவர் அங்கீகரிக்கப்பட்டதும் இந்தத் தகவல் Sun Life நிறுவனத்திற்கு வழங்கப்படும். Sun Life தகுதி பெற்றவர்களை கனேடிய பல் மருத்துவ திட்டத்தில் சேர்த்து, அவர்களுக்கு கனேடிய பல் மருத்துவ திட்டம் குறித்த தகவல், சேவை விபரங்கள், அவர்களது உறுப்பினர் அட்டை, அவர்களுக்கான சேவையின் ஆரம்பத் திகதி என்பவற்றை உள்ளடக்கிய வரவேற்கும் ஆவணத் தொகுதியை அனுப்பி வைக்கும்.
கனேடிய பல் மருத்துவ திட்டத்திற்குத் தகுதி பெறுவோர் 2024 ஆம் ஆண்டு மே முதல் பல் மருத்துவரிடமோ, வேறொரு வாய்ச் சுகாதாரப் பராமரிப்பாளரிடமோ சிகிச்சை பெறக்கூடியதாக இருக்கும். தனிநபர் ஒருவரின் சேவை ஆரம்பமாகும் திகதி, விண்ணப்பம் கிடைக்கும் திகதியிலும், அவர் இணைத்துக் கொள்ளப்படும் நடவடிக்கை நிறைவு செய்யப்படும் நாளிலும் தங்கியிருக்கும். சேவை ஆரம்பமாகும் நாளுக்கு முந்தைய செலவினங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
வாய்ச் சுகாதாரப் பராமரிப்பும் சுகாதாரப் பராமரிப்பாகும். பற்களைப் பராமரிப்பதா அல்லது ஏனைய தேவைகளை நிறைவு செய்வதாவென முடிவெடுக்கும் நிலை எவருக்கும் ஏற்படக் கூடாது. கனேடிய பல் மருத்துவ திட்டம் அனைத்துக் கனேடியர்களும் சமாளிக்கக்கூடியதாக பல் மருத்துவப் பாதுகாப்பை பெறுவதை உறுதிப்படுத்தும்.
மேலதிக தகவல்களுக்கு Canada.ca/dental ஐப் பார்வையிடவும்
இந்த கனடிய பல் மருத்துவ திட்டம் பற்றி முக்கிய தலைவர்களின் மேற்கோள்கள் கீழே காணப்படுகின்றன
கனேடிய பல் மருத்துவ திட்டத்தில் ஏற்கனவே கணிசமானோர் இணைந்துள்ளார்கள். முதல் மாதத்தில் மட்டும் நான்கு லட்சத்துக்கும் அதிகமான முதியவர்கள் தொலைபேசி மூலம், தொலைபேசியில் காத்திருக்கவேண்டிய தேவை இன்றி விண்ணப்பித்தார்கள். முதியவர்களும், விரைவில் ஏனைய வயதுப் பிரிவினரும், தேவையான வாய்ச் சுகாதார சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதே எமது நோக்கம். எதிர்வரும் வாரங்களில் வேறு வயதுப் பிரிவினரும் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறும் வகையில் தகுதி தொடர்ச்சியாக விரிவாக்கப்படும். சேர்விஸ் கனடா தடையின்றிய, தரமான பயனாளர் சேவையை வழங்கத்தக்க நிலையில் உள்ளது.
– கௌரவ ரெறி பீச், குடிமக்கள் சேவைகள் அமைச்சர்
The Honourable Terry Beech, Minister of Citizens’ Services
முதியோர் பற்பராமரிப்பைத் தடையின்றிப் பெற உரித்துடையோர். இன்று வரை CDCP திட்டத்தில் இணைவதற்கு 400,000 திற்கும் அதிகமான முதியவர்கள் வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ளார்கள். அவர்கள் 2024 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து பற் சுகாதார சேவையாளரின் சிகிச்சையைப் பெறக் கூடியதாக இருக்கும். அதிக முதியவர்கள் ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கிறார்கள். மக்களை உடல் நலத்துடன் வைத்திருப்பதும், அவர்கள் உடல்நலத்துடன் வாழ்வதற்குத் தேவையான கண்ணியத்தை வழங்குவதுமான பல் மருத்துவத்தை மேலும் அதிக கனேடியர்கள் பெறக்கூடியதாக இருக்குமென்பதே இதன் அர்த்தமாகும்.
– கௌரவ மார்க் ஹொலன்ட், சுகாதார அமைச்சர்
The Honourable Mark Holland, Minister of Health
அனைத்துக் கனேடியர்களுக்கும், முக்கியமாக முதியோருக்கு பல் மருத்துவ சிகிச்சை கிடைக்கவேண்டும். கனேடிய பல் மருத்துவ திட்டத்தின் கீழ் காப்புறுதி அற்ற லட்சக்கணக்கான முதியோர் பல் மருத்துவத்தைப் பெற ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், நாளாந்தம் மேலும் அதிகமானோர் இணைகிறார்கள். சுகாதாரப் பராமரிப்பு வருடங்கள் தொடர்பானதல்ல, அது வாழ்க்கையின் தரம் தொடர்பானது.
– கௌரவ சீமஸ் ஓ ரீகன், முதியோருக்கான அமைச்சர்
The Honourable Seamus O’Regan, Minister for Seniors
வாய்ச் சுகாதாரப் பராமரிப்பு, கனேடியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு ஆகியவற்றின் இன்றியமையாத ஓர் அங்கமாகும். கனேடிய பல் மருத்துவ திட்ட விண்ணப்பங்களை விரிவாக்குவதன் மூலம் முதியவர்கள் அவர்களுக்கு உரித்துடைய அத்தியாவசிய பல் மருத்துவ சேவைகளைப் பெறுவதை நாம் உறுதி செய்கிறோம். வாழ்க்கைச் செலவைக் குறைத்து எம் நாட்டுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதில் நாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் விளைவாகவே குறிப்பிடத்தக்க இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
– கௌரவ ஜோன் ஈவ் டுக்ளோ, அரச சேவைகள் மற்றும் கொள்வனவு அமைச்சர்
The Honourable Jean-Yves Duclos, Minister of Public Services and Procurement
கனேடிய பல் மருத்துவ திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது 90,000 டொலரிலும் குறைவான திருத்திய நிகர குடும்ப வருமானத்தைப் பெறும் அனைத்துக் கனேடியர்களையும் உள்ளடக்கியிருக்கும். இதற்குத் தகுதி பெறுவதற்கு உங்களது வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதை உறுதி செய்யுங்கள்
– கௌரவ மரீ குளோட் பிபோ, தேசிய வருமான அமைச்சர்
The Honourable Marie-Claude Bibeau, Minister of National Revenue
விரைவுத் தகவல்கள்
• கனேடிய பல் மருத்துவ திட்டத்தைச் செயற்படுத்த 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில், 2023-24 இல் ஆரம்பமாகி, ஐந்து வருடங்களுக்கு 13 பில்லியன் டொலருக்கும் அதிகமான முதலீடு அறிவிக்கப்பட்டதுடன், 4.4 பில்லியன் தொடர்ந்து ஒதுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது. கடந்த சில தலைமுறைக் காலத்தின் மிகப் பெரும் அரச திட்டமாக இது அமைகிறது.
• கனேடிய பல் மருத்துவ திட்டம் ஹெல்த் கனடாவால், Employment and Social Development Canada (ESDC) வின் ஒத்துழைப்புடன் சேர்விஸ் கனடா மற்றும் Sun Life ஆகியவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
• கனேடிய பல் மருத்துவ திட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கு உங்களது குடும்பத்தின் திருத்திய நிகர வருமானம் 90,000 டொலரிலும் குறைவாக இருப்பதுடன், வேலைகொள்வோர் அல்லது ஓய்வூதியம் மூலமான அல்லது தனியார் பல் மருத்துவ காப்புறுதி இல்லாதிருப்பதுடன், முந்தைய ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை நீங்கள் சமர்ப்பித்தும் இருக்கவேண்டும்.
• வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக கனேடிய பல் மருத்துவ திட்டம் வாய்ச் சுகாதாரப் பராமரிப்பாளரின் பரிந்துரைக்கு அமைவாக விரிவான வாய்ச் சுகாதார சேவைகளை வழங்கும். துப்பரவு செய்தல், பொலிஷ் செய்தல் போன்ற நோய்த் தடுப்பு சிகிச்சைகளும் பரிசோதனைகள், எக்ஸ் கதிர் படப்பிடிப்பு, பல் அடைத்தல், கழற்றக்கூடிய பொய்ப் பற்களைக் கட்டுதல், பல்வேர் சிகிச்சை (root canal) போன்றன வேறு சேவைகளும் உதாரணங்களாக விளங்கும்.
• 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆந் திகதி வரை கனடா பல் மருத்துவ உதவிக் கொடுப்பனவு தொடர்ந்து கிடைக்கும். 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்காக பெற்றோரும், பராமரிப்பாளர்களும் 2024 ஆம் ஆண்டு ஜூன் முதல் கனேடிய பல் மருத்துவ திட்டத்திற்கு விண்ணப்பிக்கக் கூடியதாக இருக்கும்.
தொடர்புகளுக்கு:-
Erik Nosaluk
Director of Communications and Issues Management
Office of the Honourable Terry Beech
Minister of Citizens’ Services
erik.nosaluk@hrsdc-rhdcc.gc.ca
Media Relations
Employment and Social Development Canada
819-994-5559
media@hrsdc-rhdcc.gc.ca