(மன்னார் நிருபர்)
(4-03-2024)
மன்னார் மடுவில் வீதியோரம் இருந்த வளர்ந்த தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி குற்றிகளாக ஏற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
04-03-2024 தினம் நள்ளிரவு மடு தேவாலயம் – மடு ரோட் சந்தி வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இவ்வாறு அவர்களால் வெட்டப்பட்ட மரத்தின் குற்றிகளை மர்ம நபர்கள் ஏற்றி சென்ற நிலையில் கிளைகள் வீதியிலேயே போடப்பட்டுள்ளது.
04-03-2024 , அன்று காலை குறித்த வீதியில் வாகனங்கள் பயணிக்க முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
மடு தேவாலயத்திற்கு சில கிலோ மீற்றர் தூரத்தில் வீதி ஓரம் வளர்ந்திருக்கும் பெறுமதியான தேக்கு மரங்கள் இவ்வாறு பல தடவைகள் மர்ம நபர்களால் வெட்டி எடுத்து செல்லப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மர்ம நபர்கள் தேக்கு மரங்களை வெட்டிய பகுதியில் இருந்து சில மீற்றர் தூரத்தில் இராணுவ முகாம் இருப்பதாகவும், சில கிலோ மீற்றர் தூரத்தில் மடு வீதி சந்தியில் மடு பொலிஸ் நிலையம் இருப்பதாகவும், அதற்கு அருகில் மடு ரோட் சந்தியில் இராணுவ சோதனை சாவடி இருப்பதாகவும் மறுபுறம் சில கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் மடு தேவாலய சந்தியில் பொலிஸ் காவலரணும் அமைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் தான் வீதியோரம் இருக்கும் பெறுமதியான தேக்கு மரங்கள் நள்ளிரவில் வெட்டப்பட்டு குற்றிகளாக இவ்வாறு பல தடவைகள் ஏற்றி செல்லப்பட்டுள்ளது.இராணுவம், பொலிஸ் உள்ள நிலையில் வீதியோரம் இருக்கும் மரத்தை வெட்டி ச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மடு தேவாலயத்தை அண்மித்த பெரியபண்டிவிரிச்சான் காட்டு பகுதிகளிலும் மற்றும் மடு – பரப்புக்கடந்தான் வீதிக்கு அருகில் இருக்கும் காட்டு பகுதிகளிலும் பெறுமதி வாய்ந்த மரங்களான முதிரை, பாலை போன்ற மரங்கள் வெட்டப்பட்டு குற்றியாக்கி கடத்தி செல்லப்படுகிறது.
பெரும்பாலும் இவ்வாறு வெட்டப்படும் குற்றிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றது.
இதற்கு பொலிஸார் உட்பட யாரும் இதுவரை பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது.
எனவே இந்த மரக்கடத்தல் காரர்களிடம் இருந்து வளங்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.