சுவர் இருந்தால்தான் சித்திரத்தை தீட்ட முடியும். அந்த சித்திரம் ஒருபோதும் சிதைந்து போகாமலும் பிறரை கவரும் தன்மையுடனும் என்றும் அழகானதாக இருக்க வேண்டுமானால், சுவர் எப்போதும் பலமானதாக இருக்க வேண்டும்.
இந்த சித்திரத்தை பிரதிபலிக்கும் சுவரைப் போல்தான் உடலும் மனதும் பலமானதாகவும் நோயற்றதாகவும் இருந்தால்தான். அதற்குள் குடிகொண்டு எங்கும் பரந்து இப்பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கும் ஆன்மாவை ஒரு மனிதனால் பரிபூரணமாக உணர்ந்து கொள்ள முடியும்.
சித்த மருத்துவம் என்பது ஒரு மனிதன் தன் ஆன்மாவை உணர்வதற்கான அகம் புறம் சார்ந்த ஒரு வாழ்வியல் முறையாகும். அந்த முறையின்படி ஒருவன் தன் வாழ் நாளில் பயணித்தால் தன்னுடைய இயல்பான சுதந்திரத்தை அல்லது விடுதலையை பரிபூரணமாக உணர்ந்து கொள்ள முடியும்.
இப்பிரபஞ்சத்தில் வாழும் ஒரு மனிதன் தன் வாழ் நாளில் தன் சுயத்தை உணர்வதற்கு பெரும் தடைக் கல்லாக இருப்பது வறுமையும் நோயும்தான். அந்த இரண்டையும் இல்லாமல் செய்வது இறைவனின் மிகப் பெரும் கடமையாகும்.
அதனால் தான் தன்னை தனக்குள் உணர முற்படும் மனிதனின் சரீர நோயை குணப்படுத்துவதற்கும். அவன் அகத்தை ஞானத்தால் குளிரச் செய்வதற்கும். சித்தர்கள் மூலமாக சித்த மருத்துவத்தை இவ்வுலகுக்கு இறைவன் தோற்றுவித்தான்.
சித்தத்தை சிவன்பால் வைத்த ஒரு சித்த மருத்துவனால் மட்டும்தான் சித்தர்களின் சித்த மருத்துவ ஞானத்தை முழுமையாக பயின்று இவ்வுலகில் நடைமுறைப்படுத்த முடியும். இல்லையேல் அந்த மருத்துவம் வெறும் கானல் நீரேயாகும்.
சித்த மருத்துவத்தை கொடுக்க நினைப்பவனும் அதைப் பெற்று பயன் பெற நினைப்பவனும் அகங்காரமற்று ஒரு புள்ளியில் சந்தித்தால் மட்டுமே நூறு விதமான வெற்றியை பெற முடியும். இல்லையேல் இருவரில் ஒருவராவது சித்தம் கலங்கும் நிலைக்கு தள்ளப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும். இதுவே யதார்த்த பூர்வமான உண்மையாகும்.
மேலைத்தேச மருத்துவம் புறத்திலே வெற்றி பெருகின்றது. ஆனால் சித்த மருத்துவமோ புறமாகிய சரீரத்தையும் குணமாக்கி அகமாகிய மனத்தையும் வளப்படுத்தி ஒருவனை தன் தெளிந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது. அதனால்தான் அது சித்த மருத்துவம் எனப் போற்றப்படுகின்றது.
வெறும் மூலிகைகளைப் பற்றியும் தைலங்களைப் பற்றியும் சூரணங்களைப் பற்றியும் கற்பதனால் ஒருவன் சித்த மருத்துவத்தில் வெற்றி பெற முடியாது. தன் அகங்காரத்தை துறந்தவன் எவனோ..? தன் ஆசைகளை குறைத்தவன் எவனோ..? புகழை விரும்பாதவன் எவனோ..? அவனே சித்த மருத்துவத்தில் ஒரு தெளிந்த நிலையை அடைந்து வெற்றி பெறுகின்றான்.
சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது எம் முன்னோர்களின் வாக்கு. அப்படிப்பட்ட சித்தர்களின் மருத்துவத்தை கொழுத்த ஊதியத்திற்காகவும் எண்ணற்ற அரசாங்க சலுகைகளுக்காகவும் வெறும் ஏட்டுப் படிப்பில் முழுவதுமாக கற்றுணர்ந்து விட முடியாது. அதுவும் ஒரு அறியாமையே.
மனதை செம்மையாக வைத்து சித்தத்தை தெளிவாக்கிய ஒரு சித்த மருத்துவனால் மட்டுமே பெரும் அற்புதங்களையும் அதிசயங்களையும் சித்த வாழ்வியலில் நிகழ்த்த முடியும்.
இலங்கை சிவபூமி என அழைக்கப்பட்டாலும் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகமே எப்போதும் சிவபூமிக்குரிய அனைத்து கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் அதன் விழுமியங்களையும் கடைப்பிடித்து வருகின்றது. அங்கும் சித்த மருத்துவத்தில் அது பாரிய பின்டைவையே சந்தித்து வருகின்றது. மருத்துவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு இல்லாமையும் பதவி போட்டியும் தெளிவற்ற மருத்துவ முறையுமே இதற்கு முழுக் காரணமென புத்திஜீவிகளாலும் மக்களாலும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு என்பதை சித்த மருத்துவர்கள் அனைவரும் உணர்ந்தால் மட்டுமே மக்களிடம் சித்த மருத்துவத்தை ஒரு வாழ்வியலாக மாற்ற முடியும். ஏனென்றால் தமிழனின் மருத்துவமே சித்த மருத்துவம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லையேல் காலப்போக்கில் தோல்வியை சந்திக்கும் ஒரு மருத்துவமாக அது மாற்றம் காண முற்படும் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.
சாம் – ரமேஸ்குமார்.