”அதிக சர்ச்சைகளுக்குள்ளும் கடும் விமர்சனங்கள் கண்டனங்களுக்குள்ளும் சிக்கியவராகவும் அரசு சார்பாக மட்டும் செயற்படுபவர், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள், வியாக்கியானங்களைக்கூட புறம்தள்ளி செயற்படுபவர் என்ற குற்றச்சாட்டை சுமப்பவராகவும் அரசின் கையாளாக ”காட்டுத் தர்பார்”நடத்தியதன் மூலம் பாராளுமன்ற வரலாற்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொண்ட 4ஆவது சபாநாயகர் என்ற அவப்பெயரை தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பெற்றுக்கொண்டுள்ளார்” கே. பாலா
9 ஆவது பாராளுமன்றத்தின் 11 ஆவது சபாநாயகராக 2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டு இற்றைவரை அப்பதவியில் இருந்து வரும் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றும் போது மேற்படி சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தப் பரித்துரைகளை சரியாக அமுல்படுத்தாமை, பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் அரசியலமைப்பை மீறியமை,அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன
பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் ஷமிந்த குலரத்னவிடம் 05-03-2024 அன்று கையளிக்கப்பட்டுள்ள இந்த சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு , ஜே .வி.பி. ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 44 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எப்போது விவாதத்திற்கு எடுப்பதென்பது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும்.
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இதுவரையில் 11 சபாநாயகர்கள் பதவி வகித்துள்ளனர். முதலாவது பாராளுமன்றத்தின் 1978 முதல் 1988 வரையான ஆட்சிக்காலத்தில் கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் 7 செப்டெம்பர் 1978 – 13 செப்டெம்பர் 1978 வரை பதவி வகித்தார் . கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் இராஜிநாமா செய்ததையடுத்து பாக்கீர் மாக்கார் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார் .இவர் 21 செப்டெம்பர் 1978 முதல் 30 ஆகஸ்ட் 1983 வரை பதவி வகித்தார். பாக்கீர் மாக்கார் இராஜிநாமா செய்ததையடுத்து சேனாநாயக்க சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார் .இவர் 6 செப்டெம்பர் 1983 முதல் 20 டிசம்பர் 1988 வரை பதவி வகித்தார்.
இரண்டாவது பாராளுமன்றத்தின் 1989 – 1994 வரையிலான ஆட்சிக்காலத்தில் எம். எச். மொஹமட் 9 மார்ச் 1989 முதல் 24 ஜூன் 1994 வரையும் மூன்றாவது பாராளுமன்றத்தின் 1994 – 2000 வரையான ஆட்சிக்காலத்தில் கே. பீ. ரத்நாயக்க 25 ஆகஸ்ட் 1994 – 18 ஆகஸ்ட் 200014 செப்டெம்பர் 2000 – 10 ஒக்டோபர் 2000 வரையும் நான்காவது பாராளுமன்றத்தின் 2000 – 2001வரையான ஆட்சிக்காலத்தில் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு எதிர்க்கட்சி எம்.பி.யாக அநுர பண்டாரநாயக்க 18 ஒக்டோபர் 2000 – 10 ஒக்டோபர் 2001 வரையும் ஐந்தாவது பாராளுமன்றத்தின் 2001 – 2004 வரையான ஆட்சிக்காலத்தில் ஜோசப் மைக்கல் பெரேரா 19 டிசம்பர் 2001 – 07 பெப்ரவரி 2004 வரையும் பதவி வகித்தனர்.
அதேபோன்று ஆறாவது பாராளுமன்றத்தின் 2004 – 2010 வரையான ஆட்சிக்காலத்தில் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார 22 ஏப்ரல் 2004 – 09 பெப்ரவரி 2010 , 9 மார்ச் 2010 – 20 ஏப்ர ல் 2010 வரை பதவி வகித்தார். ஐ. தே. மு யைச் சார்ந்த எதிர்க்கட்சி வேட்பாளரான டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார ஐ. ம. சு. மு. வேட்பாளரான டி. யூ.டபிள்யூ. குணசேகர பெற்ற 109 வாக்குகளுக்கெதிராக 110 வாக்குகளைப் பெற்று சபாநாயகர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட பெருமையை கொண்டவர். ஏழாவது பாராளுமன்றத்தின் 2010 – 2015 வரையான ஆட்சியில் சமல் ராஜபக்ஸ 22 ஏப்ரல் 2010முதல 26 ஜூன் 2015 வரையும் எட்டாவது பாராளுமன்றத்தின் 2015 – 2020 வரையான ஆட்சிக்காலத்தில் கரு ஜயசூரிய 01 செப்டெம்பர் 2015 – 02 மார்ச் 2020 வரையும் பதவி வகித்த நிலையில் எட்டாவது பாராளுமன்றத்தின் 2020 -2025 வரையான ஆட்சியில் மஹிந்த யாப்பா அபேவர்தன 2020 ஆகஸ்ட் 20 – இன்று வரை சபாநாயகராக உள்ளார்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் இதுவரையில் 11 சபாநாயகர்கள் பதவி வகித்த நிலையில் 1980 -12-23 ஆம் திகதியும் 1990-10-10 ஆம்திகதியும் 1992-06-09 ஆம் திகதியும் அப்போதைய சபாநாயகர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டபோதும் அவை தோற்கடிக்கப்பட்ட வரலாறே உண்டு .
அந்த வகையில் அதிக சர்ச்சைகளுக்குள்ளும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்கள் கண்டனங்களுக்குள்ளும் சிக்கியவராகவும் அரசு சார்பாக மட்டும் செயற்படுபவர், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள், வியாக்கியானங்களைக்கூட புறம்தள்ளி செயற்படுபவர் என்ற குற்றச்சாட்டை சுமப்பவராகவும் அரசின் கையாளாக ”காட்டுத் தர்பார்”நடத்தியதன் மூலம் பாராளுமன்ற வரலாற்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொண்ட 4ஆவது சபாநாயகர் என்ற அவப்பெயரை தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பெற்றுக்கொண்டுள்ளார்
இன்று எதிர்கட்சிகளினால் கடுமையாக குற்றம்சாட்டப்படும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன போட்டியிட்டு சபாநாயகராக தெரிவாகவில்லை. மாறாக அரசு மற்றும் எதிர்கட்சிகளினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு 2020 ஓகஸ்ட் 20 ஆரம்பமான போது சபாநாயகரை தெரிவு செய்யும் விதமாக மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை புதிய சபாநாயகர் பதவிக்கு அப்போதைய சபை முதல்வரான தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார்.அதனை பிரதான எதிர்க் கட்சியாகவிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலரான ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வழிமொழிந்த நிலையிலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன போட்டியின்றி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்.அவ்வாறு ஏக மனதாக தெரிவான சாபாநாயகரே இன்று எதிர்க்கட்சிகளுக்கும் நாட்டுக்கும் எதிராக அரசியலமைப்புக்களை மீறி ”காட்டுத் தர்பார்”நடத்துகின்றார்.
அதிலும் அண்மையில் அரசினால் கொண்டு வரப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டத்தை மூலம் நிறை வேற்றப்பட்ட முறை, பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் அரசியலமைப்பை மீறி செயற்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்கட்சிகளினாலும் மனித உரிமைகள் அமைப்புக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளினாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.
நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தைப்பொறுத்தவரையில் 9 சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு முரணாக சபாநாயகர் செயற்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 123 (4) இன் பிரகாரம், ஏதேனும் சட்டமூலம் அல்லது ஏதேனும் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்பிற்கு ஒவ்வாததாக உள்ளதெனத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற விடத்து,அல்லது தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுமிடத்து,அத்தகைய சட்டமூலம் அல்லது அத்தகைய ஏற்பாடு உயர்நீதிமன்றத்தின் தீர்மானிப்பில் கூறப்பட்டுள்ள முறையில் தவிர, நிறைவேற்றப்படுதல் ஆகாது என குறிப்பிடப்பட்டுள்ளது.உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் மூலம் இச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அதனை சபாநாயகர் புறம்தள்ளிவிட்டார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் கூட நாட்டின் உயரிய சட்டத்தை மறந்துவிட்டு தம் இஷ்டம் போல சபாநாயகர் நடந்து கொண்டுள்ளார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது சிரமமான விடயம் என்பதனால் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் நோக்கில் அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது. இங்கு ஜனாதிபதியால் முன்மொழியப்படும் பெயரை அங்கீகரிக்கவும் நிராகரிக்கவும் பேரவையின் 5 வாக்குகள் தேவை.ஆனால் பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் போது சபாநாயகர் அதனை மீறி விட்டார்
பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு 4 பேர் ஆதரவாகவும் 2 பேர் எதிராகவும் 2 பேர் வாக்களிக்காமலும் இருந்தனர். சபாநாயகர் தனது அறுதியிடும் வாக்கை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி பொலிஸ் மா அதிபரை நியமித்தார். அதாவது அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் முடிந்து வீட்டுக்கு சென்றதன் பின்னர் சபாநாயகர் ‘ புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.ஆகவே அவர்கள் குறித்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக கருதி எனது தீர்மானமிக்க வாக்கினை வழங்குவதாக ‘ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.இது முற்றிலும் அரசியலமைப்புக்கும்,அரசியலமைப்பு பேரவையின் வழிமுறைகளுக்கும் எதிரானது.
இவ்வாறான நிலையில்தான் நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றும் போது மேற்படி சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தப் பரித்துரைகளை சபாநாயகர் சரியாக அமுல்படுத்தாமை, பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் சபாநாயகர் அரசியலமைப்பை மீறியமை ,அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுதல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறுகையில் நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயர் நீதிமன்றத்தின் கட்டளையைப் புறக்கணிக்கவில்லை, அரசமைப்பை மீறவில்லை, பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறவில்லை.அதனால் பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சி என் பதவியை இராஜிநாமா செய்யமாட்டேன். எவருக்கும் பயந்து ஓடவும் மாட்டேன்.நான்பாராளுமன்றத்தில் நடுநிலையுடன் செயற்படுகின்றேன். எனவே, எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நீதியின் பக்கம் நிற்கும் எம்.பிக்களால் தோற்கடிக்கப்பட்டே தீரும் என்று சூளுரைத்துள்ளார்
இதேபோன்றே எதிர்கட்சிகளினால் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுன தலைவருமான மகிந்த ராஜபக்ஸ சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என உறுதிபடத்தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் வெற்றி பெற்றதாக வரலாறில்லை. அந்த வகையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கும் எதிரான இந்த நம்பிக்கையில்லாத் பிரேரணையும் தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படித் தோற்கடிக்கப்படும்போது அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியவர் சபாநாயகராக மட்டுமன்றி நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களித்த அத்தனை அமைச்சர்களும் எம்.பி.க்களும் அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுபவர்களாகவே இருப்பர்.