சாந்தனின் உடல் இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும். திராவிட கட்சிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான பகையுணர்வை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. சாந்தன் உயிரோடு நாடு திரும்பி அதன் பின் உயிர் நீத்திருந்திருந்தால் அவருடைய சாவு இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. ஆனால் அவர் உயிரிழந்த பின் தன் தாயிடம் ஒப்படைக்கப்பட்டமை என்பது பரவலாக உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 33 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டுத் தன் தாயைக் காண வந்த கடைசி நாட்களில் அவர் உயிர் நீத்தமை அவர் மீதான அனுதாபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்ட மக்கள் கூட்டம் அதை உணர்த்துகின்றது.
தாயகத்தில் அதிகம் மக்கள் திரண்ட ஒரு சாவீடாகவும் உணர்ச்சி கொந்தளிப்பான ஒரு அது அமைந்தது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியைப் போலவே வவுனியாவில் இருந்து தீருவில் வரையிலும் மக்கள் தாமாகத் திரண்டார்கள். போராளிகள் நலன்புரி அமைப்பும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பும் சாந்தனின் இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தன. இறுதி ஊர்வலம் வந்த வழியெங்கும் பொதுமக்கள் அமைப்புகள் தன்னார்வமாக அஞ்சலி செலுத்தின. குறிப்பாக வடமராட்சியில் சனசமூக நிலையங்கள் அதிகம் பங்களிப்பை நல்கின. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணிக்கு பின்னர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தொகை மக்கள் பங்குபற்றிய ஒர் ஊர்வலமாக, மிகக் குறுகிய காலத்துக்குள் அதாவது ஒரு நாளில் அதிகரித்த தொகையினர் பங்குபெற்றிய ஒரு இறுதி ஊர்வலமாக அதைக் கூறலாம்.
அதேசமயம் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது அதோடு முடியவில்லை. சாந்தனோடு சிறையில் இருந்தவர்கள் இப்பொழுதும் சிறப்பு முகாமில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுவித்தால் தான் சாந்தனின் ஆன்மா மகிழ்ச்சி அடையும்.
சாந்தனோடு சிறப்பு முகாமில் இருந்த மூவரும் இப்பொழுதும் அங்கேதான் இருக்கிறார்கள். அவர்களை முதலில் சிறப்பு முகாமில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள சட்டச் செயற்பாட்டாளர்கள் கேட்கின்றார்கள். அவர்கள் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்கள். அவர்களிடம் உரிய பயண ஆவணங்கள் இல்லை; அவர்களை வெளியே விட்டால் அது அவர்களுடைய பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையலாம் அல்லது அவர்கள் தமிழகத்தின் பாதுகாப்புக்கு குந்தகமாக அமையலாம் போன்ற காரணங்களைக் கூறி தமிழக அரசு அவர்களைத் தொடர்ந்தும் சிறப்பு முகாம்களில் வைத்திருக்கின்றது. மாறாக அவர்களை வெளிப்பதிவு அகதிகளாக சிறப்பு முகாம்களுக்கு வெளியே எங்காவது தங்க அனுமதித்தால், அதுவே அரைவாசி விடுதலை தான். அதன்பின் அவர்கள் தங்களுக்குரிய ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு நாடு திரும்பலாம். சாந்தனின் விவகாரத்தில் இலங்கை அரசு எப்படி நடந்து கொண்டது என்பது ஏனைய மூவருக்கும் அப்படியே பின்பற்றப்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. சாந்தனைத் தவிர மற்றைய மூவரிடமும் உத்தியோகபூர்வ பயண ஆவணங்கள் கிடையாது. சாந்தனிடம் பாஸ்போர்ட் இருந்தது. மற்றைய மூவரிடமும் பாஸ்போர்ட் இல்லை. எனவே அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிக பயண ஆவணங்களை வழங்க வேண்டியிருக்கும்.
எனவே சாந்தனோடு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மூவருக்கும் முதலில் சிறப்பு முகாமில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும். நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்களை மீண்டும் சிறப்பு முகாம்களில் அடைப்பது என்பது அந்த நீதிப் பொறிமுறைக்கு முரணானது.
சாந்தனை சிறப்பு முகாமில் இருந்து விடுவித்து தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்வதற்கு மறைந்த சட்டத்தரணி தடா சந்திரசேகர் முயற்சித்தார். அப்பொழுது இரத்த உருத்துச் சொந்தக்காரர்கள் அவ்வாறு பொறுப்பெடுத்தால் மட்டுமே சிறப்பு முகாம்களில் இருப்பவர்களை விடுவிக்கலாம் என்று கூறி தமிழக அரசு அதற்கு மறுத்துவிட்டது. இப்பொழுது ஏனைய மூவரின் விடயத்தில் அவ்வாறு சிறப்பு முகாம்களை விட்டு அவர்களை வெளியே கொண்டு வந்து குறைந்தபட்சம் வெளிப் பதிவு அகதிகளாக அவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்வதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களும் முன் வைக்க வேண்டும். தாயகத்தில் உள்ள தமிழ் தேசிய அரசியல் சமூகமும் முன் வைக்க வேண்டும். சாந்தனின் இறப்பை முன்வைத்து அவ்வாறு கேட்கும்போது அந்தக் கோரிக்கைக்கு அரசியல் அடர்த்தி அதிகமாக இருக்கும்.
தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காணப்படுகின்றவர்களும் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் அது தொடர்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று அங்குள்ள சட்டச் செயற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சாந்தன் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின் 15 மாதங்களாக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் மந்தத்தனமாக நடந்து கொண்டார்கள். சாந்தனின் மரணம் ஒரு வகையில் அந்த மந்தத்தனத்தின் விளைவுதான். மிஞ்சிய மூன்று பேரின் விடயத்திலாவது அவர்கள் வினைத்திறனோடு செயல்படுவார்களா?
பாரதூரமான குற்றச்சாட்டுகளின் பேரில் தண்டிக்கப்பட்டு அதன் பின் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் இதற்கு முன்னரும் நாடு திரும்பியிருக்கிறார்கள். 2022ஆம் ஆண்டு அவ்வாறு ஒருவர் விடுவிக்கப்பட்ட பின் நாடு திரும்பினார். அவர் நாட்டில் ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்வதாக தகவல். எனவே சிறப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களும் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவர்களும் நாடு திரும்பும் நடைமுறை ஏற்கனவே உண்டு.
மேலும் தற்பொழுது சிறப்பு முகாமில் உள்ள ரோபேர்ட் பயஸ் என்பவரின் மனைவி நாட்டில் வசிக்கின்றார். அவர் தன் கணவரை சென்று சந்திக்க விரும்புகின்றார். ஆனால் எட்டு ஆண்டுகளாக அவருக்கு விசா வழங்கப்படவில்லை என்று தமிழக சட்டச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அவர் ஏற்கனவே இந்தியாவில் தங்கியிருந்து தன் கணவரை சிறையில் சென்று பார்த்து வந்தார். அவருடைய விசா காலாவதியாகிய பின்னரும் அவர் அங்கே தங்கி இருந்த காரணத்தால், அதாவது “ஓவர் ஸ்டே” என்பதனால், அவருக்கு மீண்டும் விசா வழங்கப்படவில்லை என்று தமிழக சட்டச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள். அந்தப் பெண் தன் கணவனை 8 ஆண்டுகளாக சந்திக்க முடியாதவராக இருக்கிறார்.
எனவே,இந்தியச் சிறைகளிலும் தமிழகச் சிறப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் தொடர்பாக ஈழத்து அரசியல்வாதிகள் கூட்டாகச் செயற்பட வேண்டியுள்ளது. சிறப்பு முகாம்களை மூடி அங்கிருக்கும் அரசியல் கைதிகளையும் சிறு குற்றம் புரிந்தவர்களையும் ஒன்றில் அகதி முகாம்களுக்கு மாற்ற வேண்டும், அல்லது வெளிப்பதிவு அகதிகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக முன்வைக்க வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் சென்று வருகிறார்கள். அங்கு தமிழகத் தலைவர்களையும் மத்திய அரசாங்கத்தில் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகிறார்கள். இவர்களில் எத்தனை பேர் சிறப்பு முகாம்களுக்கும் அகதி முகாம்களுக்கும் சென்றிருக்கிறார்கள்? இவர்களில் எத்தனை பேர் சிறைகளில் வாடும் ஈழத்து அகதிகளை கண்டு கதைத்திருக்கிறார்கள்? இங்கிருந்து போகும் பிரமுகர்கள் அங்கே உள்ள பிரமுகர்களைக் கண்டு படம் எடுத்து அதை ஊடகங்களில் பிரசிப்பதற்குமப்பால் அங்கு யாராலும் பொறுப்பேற்கப்படாமல் சிறப்பு முகாம்களிலும் சிறைகளிலும் இருக்கும் ஈழத் தமிழர்களைக் காண்பதே இல்லை.
சாந்தனின் மரணத்தை முன்வைத்து ஈழத்து அரசியல்வாதிகள் இனிமேலாவது தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களின் மீதும் கைதிகளின் மீதும் கவனத்தைக் குவிக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்காக ஈழத் தமிழர்கள்தான் போராட வேண்டும். ஈழத் தமிழர்களின் நலன்களை ஈழத் தமிழர்கள் தான் பாதுகாக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு துன்பம் ஏதும் ஏற்பட்டால் ஈழத் தமிழர்கள்தான் குரல் கொடுக்க வேண்டும். இது தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும். தமிழகமும் சேர்ந்து குரல் கொடுத்தால் அது பன்மடங்கு பலம்.
சாந்தனின் மரணத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் இந்த விடயத்தில் அதிகம் அக்கறை காட்டுவதாகத் தொலைக்காட்சிச் செய்திகள் கூறுகின்றன. சாந்தனின் மரணம் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளுக்கும் ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையில் அதிகரித்து வரும் முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். சாந்தனுக்காக போராடியது தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள்தான். சாந்தனின் உடலை நாட்டுக்குள் கொண்டுவர ஏற்பாடுகள் செய்ததும் தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்கள்தான்.
எனவே சாந்தனின் நினைவுகளை கௌரவிப்பது அல்லது சாந்தனுக்கு மெய்யாக அஞ்சலி செலுத்துவது என்பது, சிறப்பு முகாம்களை மூடுவதுதான். சிறப்பு முகாம்களில் இப்பொழுதும் அடைபட்டிருக்கும் ஈழத் தமிழர்களை நாட்டுக்குள் கொண்டு வருவதுதான்.அல்லது குறைந்தபட்சம் அவர்களை வெளிப்பதிவு அகதிகளாக அங்கே தங்க வைப்பது தான்.