(கனடா உதயனின் பிரத்தியேகச் சிறப்புச் செய்தி)
நடராசா லோகதயாளன்
இலங்கையில் அனைத்து துறைகளிலும் பொறுப்புக்கூறல் இல்லை என்பதும் சிவில் நிர்வாகத்தில் படையினரின் பிரசன்னம் மற்றும் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது என்பதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கவலைக்குரிய விடயமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அதே போன்று நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், சாதாரணம் கிராம நிர்வாக மட்டத்திலிருந்து, கொழும்பிலுள்ள உயர்மட்டம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பது குறித்தும் பன்னாட்டு அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஓடாத ஒரு படகிற்கு 51 மில்லியனுக்கு அதிகமாக பணம் கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ள விவகாரம் ‘கனடா உதயனின்’ சிறப்பு புலனாய்வில் தெரியவந்துள்ளது.
வடக்கு மாகாண சபையினால் 2017ஆம் ஆண்டு உலக வங்கியின் ’நெல்சிப் திட்டத்தில்’ 150 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் கட்டப்பட்ட நெடுந்தாரகை கப்பல் ஓடாது நிறுத்தி வைக்கப்பட்டள்ள போதும் அதன் திருத்தச் செலவிற்காக 51 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது நமது புலனாய்வில் அம்பலமாகியுள்ளது.
வடக்கு மாகாண சபையின் முயற்சியினால் கடல் கடந்த
தீவக மக்களின் இலவச போக்குவரத்திற்காக 2017 இல் உலக வங்கியின் ’நெல்சிப் திட்டத்தில்’ அப்போதைய பிரதம செயலாளர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆகியோரின் முயற்சியில் 150 மில்லியன் ரூபா பணத்தில் கட்டி வழங்கி வைக்கப்பட்ட நெடுந்தாரகை கப்பலை 51 மில்லியன் ரூபா பணமும் வழங்கி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உடமை மாற்றமும் செய்ய வடக்கு மாகாண சபை முடிவு செய்துள்ளது.
பெருநிலப் பிரப்பிற்கும், தீவகப் பகுதிகளுக்கும் இடையே மக்கள் சுலபமாக பயணிக்க, உலக வங்கியின் அனுசரணையில் கட்டப்பட்டு வடக்கு மாகாண சபையிடம் கையளிக்கப்பட்ட கப்பலை எப்படி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உடமை மாற்றம் செய்ய முடியும் என்ற கேள்வியும் இதில் எழுகிறது. அதாவது ஒரு பன்னாட்டு அமைப்பு, போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்காக ஒரு சிறப்பு திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட கப்பலை எப்படி மத்திய அரசு கையகப்படுத்த முடியும் அல்லது மாகாண அரசு மத்திய அரசுக்கு அளிக்க முடியும்?
இதற்கு விடை கிடைக்காத சூழலில், இனிவரும் காலங்களில் படகுகள் அனைத்தும் வீதி அபிவருத்தி அதிகார சபையின் கீழேயே இருக்க வேண்டும் என ஜனாதபதி கூறயுள்ளதோடு அதற்கான அமைச்சரவைப் பத்திரமும் விரைவில் வருகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
இதனை 2023-10-26 அன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக் காட்டி 4 மாதம் கடந்துவிட்ட போதும் அவ்வாறு எந்த அறவித்தலும் இதுவரை வெளிவரவில்லை.
தெளிவில்லாத இப்பாடியான நிலையில், அந்த கப்பலை செலுத்தும் பராமரிக்கும் சான்றிதழ் பெற்ற பணியாளர்களும் மாகாண சபையில் இல்லை என்பதன் அடிப்படையில் நெடுந்தாரகைப் படகினை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்குமாறு பணிக்கப்பட்டது.
இதனால் நெடுந்தாரகையை வீதி அதிகார சபையிடம் கையளிக்க இணங்கியபோது நெடுந்தாரகை கப்பலானது தற்போது பழுதடைந்த நிலையில் இயங்காமல் உள்ளமையினால் அதனை திருத்தி தந்தாலே படகை பொறுப்பேற்போம் என வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உறுதியாக கூறி கூறிவிட்டனர்.
கப்பலைப் பொறுப்பேற்பதில் இப்படி ஒரு பிரச்சனை எழுந்த நிலையில், அதனை யார் திருத்துவது, அதற்கு எவ்வளவு செலவாகும், அப்படி ஆகும் செலவை யார் ஏற்பது, அந்த நிதி எங்கிருந்து வரப்போகிறது என்ற கேள்விகள் எழுந்த நிலையில் வெளிப்படையான பதில்கள் ஏதுமில்லை.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், குடாநாட்டில் தீவுப் பகுதிகளிற்கான கடல் கடந்த போக்குவரத்துப் பயணத்திற்கு படகுகள் எவையுமே இன்றி மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதனால் அவை தொடர்பில் உடன் மாற்று ஏற்பாடுகள் மேற்கொண்டே ஆக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. மக்கள் சந்திக்கும் நாளாந்த பிரச்சனைகளில் ஒன்றான இதற்கு உடனடி தீர்வு வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
”குடாநாட்டின் கடல் கடந்த தீவக போக்குவரத்திற்காக தற்போது ’நெடுந்தாரகை, எழுதாரகை, வடதாரகை’ என பல தாரகைகள் உண்டு. இதில் ஒரு தாரகையும் இயங்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு ’குமுதினியும்’ இரண்டு ஆண்டுகளாக இயங்கவில்லை. அவ்வாறானால் மக்கள் என்ன செய்வது” என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அந்த கூட்டத்தில் வினாவினார்.
இதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் குரூஸ், ”வட தாரகையை திருத்துவதற்கு 95 மில்லியன் ரூபாவும், (268,468 டொலர்) நெடுந்தாரகையை திருத்த 59 மில்லியன் ரூபாவும் வேண்டும். எழுதாரகைக்கு 10.3 மில்லியன் ரூபா வேண்டும்” என மாவட்ட அபிரிவிருத்து சபை கூட்டம் நடைபெற்ற அன்று தெரிவித்தார்.
”இத்தனை மில்லியன்கள் செலவு செய்து திருத்திய பின்பும் அந்த கப்பல்கள் சீராக இயங்குமா என்பதனை உறுதி செய்ய முடியவில்லை. அதனால் இந்த தொகைப் பணத்திற்கு ஏன் புதிய படகுகளை கொள்வனவு செய்ய முடியாது?” என அன்றே தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வியும் எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு அன்று பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ”தீவு பயணங்களிற்காக புதிய படகுகளை கொள்வனவு செய்ய உத்தேச செலவு மதிப்பீடு தயார் செய்து தாருங்கள் என்ற போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நெடுந்தாரகையை 6 கோடி ரூபாயில் திருத்தம் செய்ய முடியும் என சங்கம் கோரியும் வழங்காது இத்தனை கோடியில் திருத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை முயல்கின்றது இதுவே நெடுந்தாரகைக்கும் நிலைமை எனவும் வாதிட்டார்.
இந்நிலையில், நெடுந்தாரகை கப்பலை திருத்தும் பணி இலங்கை கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது நெடுந்தாரகை கப்பலை திருத்தம் செய்வதற்கான பணமாக 51 மில்லியன் 481 ஆயிரத்து 80 ரூபா 42 சதம், 2024-02-20 அன்று வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைத் தளபதியின் உத்தியோக பூர்வ கணக்கிலக்கமான 7041344 இற்கு இலங்கை வங்கி காசோலை மூலம் வழங்கப்பட்டு விட்டது.
உள்ளூராட்சித் திணைக்களத்தை தொடர்புகொண்டு இது தொடர்பில் கேட்டால் இதற்கான பணம் வடக்கு மாகாண சபையினால் இந்தப் படகு திருத்தம் செய்வதற்கு எனக் குறிப்பிட்டே விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
வருடம் ஒன்றிற்கு 5 மில்லியன் ரூபா மாகாண சபையால் எரிபொருளிற்கும் பணியாளர் சம்பளத்திற்குமாக 5 ஆண்டாக செலவு செய்த ஓர் சொத்து தற்போது மாகாண சபையில் இருந்து வெளியேறுவது மட்டுமல்ல அதனை வெளியே வழங்கவும் 51 மில்லியன் 481 ஆயிரத்து 80 ரூபா 42 சதம் பணம் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது மட்டுமின்றி பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இவ்வாறு 2024-02-20ஆம் திகதிய கசோலை வழங்கப்பட்ட போதும் நெடுந்தாரகை என்னவோ நெடுநாளாக நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பணம் கடற்படை வசம் சென்றுவிட்டாலும், அந்த கப்பல் திருத்தப்படும் பணி எப்போது ஆரம்பிக்கும், பழுது பார்த்து இயங்கு நிலைக்கு வருவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதற்கும் இதுவரை பதிலில்லை.
இதேநேரம் இப்படகை மத்திய அரசிடம் வழங்காது மாகாண சபையே தொடர்ந்தும் கொண்டு நடாத்தும் வல்லமை இல்லை எனக் குறிப்பிடப்படுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது ”யுத்த காலத்திலே இதனைவிடப் பெரிய படகுகள், கப்பல்களை இயக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொழில் வாய்ப்பின்றி இருக்கின்றனர். அவர்களிடம் இந்தக் கப்பலை வழங்கினால் அவர்கள் சர்வ சாதாரணமாக இயக்குவார்கள் ஆனால் அவர்களிடம் இந்த கப்பல்களைச் செலுத்தும் தகமை கொண்ட சான்றிதழ்கள் இல்லை என்ற காரணத்தினால் அரச நிர்வாக இயந்திரம் அவர்களது திறமையை பயன்படுத்த மறுக்கின்றனர். அவர்களை ஓர் தொழில் தகமைச் சான்றிதழிற்கு உட்படுத்தி ஒரு பரிசோதனையின் பின்னர் சான்றிதழ்களுடன் இப்பணியை வழங்கினால. அவர்களின் குடும்பங்களிற்கான வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்படும் என்பதே எமது நிலைப்பாடு” என்றார்.
போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், புனர்வாழ்வு என்று கூறி அதை அளித்து முடித்த பிறகு சமூகத்தில் ஒருங்கிணைப்பட்ட பல முன்னாள் போராளிகளிடம் திறமைகளும் தொழில்நுட்ப வல்லமைகளும் இருந்தும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் வாடுகின்றனர். அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏன் மத்திய அரசு ஏற்படுத்தி தரவில்லை அல்லது தர மறுக்கிறது என்பதற்கான பதிலும் இல்லை.
கடற்படையிடன் இந்த கப்பலை மிகப்பெரும் தொகைக்கு திருத்துவதற்கு கையளித்திருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது என்று துறைசார் வல்லுநர்கள் கூறுகின்றனர். இலங்கையின் பொருளாதார நிலை உலகமறிந்தது அத்தோடு போரினால் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு உதவ பன்னாட்டு அமைப்புகள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நிலையில், இந்த கப்பலை திருத்த ஏன் அப்படியான அமைப்புகளிடமிருந்து பணத்தை வேண்டக் கூடாது என்ற வாதத்தை செயற்பாட்டாளர்கள் வைக்கின்றனர். இந்த கப்பலை திருத்துவதற்கு ஆகும் தொகை என்பது பன்னாட்டு அமைப்புகளுக்கு பெரிதாக இருக்காது என்றும், உலக வங்கியையே மீண்டும் அணுகினால் அவர்கள் தமது சிறப்பு திட்டம் ஏதேனும் ஒன்றின் ஊடாக இதை திருத்தித்தர முன்வரலாம் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், எதுவுமே கொழும்பு அட்சியாளர்களின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. 51 மில்லியனுக்கும் அதிகமான ரூபாவை இலங்கை கடற்படைக்கு வழங்கிய பின்னரும் அந்த கப்பல் உரிய முறையில் திருத்தப்பட்டு பயணம் செய்து தமிழ் மக்களின் அன்றாட பாவனைக்கு உதவுமா அல்லது அந்த பணமும் கடலுக்கு அடியில் சென்று விடுமா என்பதே இப்போதுள்ள கேள்வி.