கட்டுரையாளர்:- வி.எஸ்.சிவகரன்
தமிழரசுக் கட்சியின் நீதிமன்ற விவகாரம் மேலும் சில காலம் நீடிக்கும் நிலை காணப்படுகிறது.எந்த விடயமாக இருந்தாலும் சங்கதிகள் சந்திக்கு வந்து விட்டால் சதா நெருக்கடி தான் இவற்றை அறிவார்ந்து அணுகுதலே நிலையான தீர்வை நோக்கி நகர முடியும்.
அவை சாத்தியமா வழிப் போக்கர்களாலும் சந்தர்ப்ப வாதிகளாலும் தான் அரசியல் சாக்கடை எப்போதும் சூழ்ந்து கிடக்கும். என்பது மரபற்ற விதி
29 ம் திகதி வழக்கு விவகாரம் இரக்கத்தின் அடிப்படையில். வழக்காளிகள் மூலம் வழக்கை மீள பெற்றிருக்க வேண்டும். அது தான் கட்சி நலனுக்கு உகந்த தாக அமைந்திருக்கும். 21 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற்ற மாநாட்டு தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கோரியுள்ளனர். வழக்காளிகள் அதில் என்ன தவறு எல்லோரும் ‘ஒரே கட்சிக்காரர்கள் தானே’ என்ற எண்ணம் தேர்தல் நிறைவடைந்த மறு நிமிடமே வந்திருக்க வேண்டும். எதிரியாகவோ துரோகியாகவோ நோக்குவது விமர்சிப்பது, இணைந்து பயணிப்பதற்கு சங்கடத்தை ஏற்படுத்தும். .
சிறிதரனுக்கு வாக்களித்தவர்கள் தேசியவாதிகள் அல்லது தியாகிகள் என்றும் சுமந்திரனுக்கு வாக்களித்தவர்கள் துரோகிகள் அல்லது கட்சிக்கு எதிரானவர்கள் என்றும் ஒரு விமர்சன விம்பம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. அண்மையில் ஒரு துயர் பகிர்வு நிகழ்வில் சுமந்திரனுக்கு வாக்களித்த ஒரு முன்னாள் போராளி மிகவும் வேதனைப்பட்டார்.தாங்கள் இப்போது துரோகி பட்டியலில் இருப்பதாக இந்த நிலை எல்லா மாவட்டங்களிலும் தொடர்கிறது.
அறிஞர் அண்ணா இறந்த பின்னர் தலைமை போட்டியில் சூழ்ச்சிகரமாக வெற்றி பெற்ற கருணாநிதியை மிக கடுமையாக எதிர்த்த பேராசிரியர் அன்பழகன் பின்னர் நான் ஏன் கருணாநிதியை தலைவராக ஏற்றேன் என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதை இவர்கள் முதலில் படிக்க வேண்டும்.
“தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும் அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும் தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்” என்கிறார் லெனின். ஆகவே உள்வீட்டுப் பிரச்சினையை பேசி தீர்ப்பது தான் உகந்தது.
இரண்டு தரப்பின் ஏட்டிக்குப் போட்டி வாதங்களும் இரண்டக செயலும் ஒருபோதும் கட்சிக்கும் இனத்திற்கும் நன்மை பயக்காது. என்பதை அவர்களும் புரியாமல் இல்லை. ஆனால் அவர்களின் வீறாப்பு விடாப்பிடி தன் நிலை வாத மேட்டிமை போக்கு இன உரிமைக்குள் சிந்திக்க விடாமல் சினம் கொண்டு அலைகிறது.அது பெரும் விளைவை ஏற்படுத்தும்.
எனவே கட்சியில் மீண்டும் புதிய தெரிவை கோருவது என்பது பெரிய விளைவை ஏற்படுத்தலாம். அதை அவர்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் பெரிய ஆச்சரியம்.
இரண்டு துருவங்களாக கட்சி உள்ளபோது எப்படி மீள் தெரிவை கோருவது தற்போது உள்ள மாவட்ட. தொகுதி கிளைகளையா அல்லது வட்டார கிளைகளில் இருந்தா பொதுக்குழுக் கு தெரிவு செய்வது எனும் வாதம் எழலாம் சிறிதரன் தரப்பு வட்டார கிளைகளில் இருந்து தெரிவு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தலாம்.
ஏனெனில் பல கிளைகள் தெரிவு செய்த முறை தவறு என விமர்சனங்கள் உண்டு திருகோணமலை, கொழும்பு, காங்கேசன்துறை தொகுதி இதில் யாழ்ப்பாணம்,தொகுதி மானிப்பாய்.மானிப்பாய் தொகுதிகள் பல வருடங்களாக தெரிவு செய்யப்படாமலே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல ஏலவே பொதுக்குழுவில் உறுப்புரிமை அற்றவர்கள் உறுப்புரிமை புதுப்பிக்காதவர்கள் எல்லாம் வாக்களித்துள்ளனர் இந்த விவகாரம் உட்கட்சி தேர்தலில் மேலெழும்
ஆகவே சகல உறுப்புரிமை சீர் செய்யப்பட்டு இலகுவாக தேர்தல் நடாத்த முடியுமா ?
தற்போது நீதிமன்றம் நாடியது போல் இலகுவாக வட்டார அளவிலே நீதிமன்றம் போகக்கூடிய ஆபத்து எழலாம்.
இதைவிட இன்னொரு பேராபத்து உண்டு நீதிமன்றில் இந்த விவகாரங்களை முடித்து வெளியேறிய பின்னர் யாப்பின் படி கடந்த ஐந்து ஆண்டுகளாக உட்கட்சி தேர்தல் நடைபெறவில்லை என்று யாராவது தேர்தல் ஆணைக்குழுக்கு போனால் கட்சியின் நிலை என்னவாகும்.வரும் தேர்தலில் போட்டியிட சின்னமும் இல்லாமல் போகலாம். பெயரளவில் சனாதிபதி சட்டத்தரணிகளாக இருப்பதில் அர்த்தமில்லை. இந்த ஆபத்துக்களை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஏனெனில் யாப்புக்கு எதிராக நீதிமன்றம் போனவர்கள் தேர்தல் ஆணைக்குழுக்கு போகமாட்டார்கள் என்று சொல்லமுடியாது.
வெறுமனே ஊடகச் செய்திகளுக்காக உணர்ச்சிவசப்பட்டு வழக்கை உடைத்தெறிவோம் என்று கூறுவதும் கடந்த 23ம் திகதி கிளிநொச்சியில் நடந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் மிகவும் கோபப்பட்டு எடுத்தெறிந்து வார்த்தைகளை அளவற்று அள்ளி வீசியதாக கலந்து கொண்ட ஒரு மூத்த உறுப்பினர் கவலை தெரிவித்தார்.இவை தலைமைக்குரிய உயர்ந்த பண்பல்ல “அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கியல்பு ” என்கிறார் வள்ளுவர். இக்கூற்றில் இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஆகவே இவ்விதமான முரண்பாடுகள் எல்லாம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று உட்கட்சி தேர்தலிலுக்கு முன்னதாகவே எமது சிவில் அமைப்பின் ஊடாக ஒரு முயற்சி எடுத்தோம்.கடந்த வாரம் பத்தி எழுத்தாளர் நிலாந்தன் அவர்கள் சிவில் சமூகத்தின் வகிபங்கின்மை பற்றி எழுமானமாக எழுதியிருந்தார் .
அது உண்மையில்லை இவர்களது. உட்கட்சி தேர்தலால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு தோல்வியடைந்தார் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என சிறிதரன் சுமந்திரன் ஆகிய இருவரிடமும் மிகத்தெளிவாக தெரிவித்தோம் ஒரு கூட்டு கலந்துரையாடலுக்கு வருமாறு அழைத்தோம் அதில் சுமந்திரன் உரையாட வருவதற்கு சம்மதம் தெரிவித்தார் சிறிதரன் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்த முயற்சியை யாழில் உள்ள ஒரு பேராசிரியர் ஊடாகவும் முன்னெடுத்தோம் பயன் தரவில்ல்லை.
இவ்விதமான முயற்சியை முன்னெடுக்குமாறு மாவை சேனாதிராஜா உட்பட பலர் எம்மை கேட்டிருந்தனர் ஏனெனில் கடந்த பத்து ஆண்டுகளாக இவ்விதமான ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருவதனால் வேட்பாளர்கள் மட்டும் இன்றி கட்சியின் வேறுபல முக்கியஸ்தர்களுடனும் உரையாடியும் எதுவும் பயன் தரவில்லை. ஆகவே நாங்கள் இந்த விளைவை ஏலவே புரிந்து கொண்டு தான் இந்த முயற்சியை எடுத்தோம் என்பது நிலாந்தனும் அறியாமல் இல்லை.
தற்போது திருகோணமலை ஆயரால் எடுக்கப்பட்ட முயற்சிகள் இந்திய தூதரகம் , நல்லை ஆதீனம் ,எடுத்த முயற்சிகளும் காலம் கடந்த வையே ஏறக்குறைய அதிமுகவின் ஓபிஎஸ் , ஈபிஎஸ் அணிகள் போல் உருவாகிவிட்டன கட்சிக்குள் அணிகள் உருவாகினால் ஒருபோதும் உருப்பட வாய்ப்பில்லை இந்த உட்கட்சி விமர்சனங்கள் எதிர்காலத்திலும் அதிகரிக்கலாம் அவை வரும் தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
தமிழரசுக்கட்சியின் குழு முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.ஏனெனில் தமிழ்மக்களுக்கு மாற்றுத் தெரிவுக்கு வேறு கட்சிகள் இல்லை.உள்ள கட்சிகளும் வட்டார சிந்தனையில் உள்ள கட்சிகளே அவர்களால் வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. என்பது யாவரும் அறிந்ததே தேர்தல் களத்தில் தொண்டர்கள் ஒருமித்த கருத்துடன் இணைந்து செயற்படக்கூடிய ஏது நிலை காணப்படுவதாக தெரியவில்லை.
எனவே இந்த உள்ளக விவகாரத்தால். அரச ஆதரவு கட்சிகளுக்கும் பிரதேசவாதம் பேசும் அணிகளுக்கும் வாய்ப்பாக அமையலாம்.
இந்த முரண்பாட்டை கட்சிக்கு வெளியே இருந்து ஊக்குவிக்கும் சில ஊடக தரப்புக்களும் சில வெளிநாட்டு அமைப்புக்கள் தனி நபர்கள் ஆகியோர் இந்த சித்து விளையாட்டை நிறுத்திக் கொள்வது நல்லது இதனால் பாதிக்கப்படுவது சுமந்திரன் சிறீதரன் அல்ல தமிழினம் என்பதை பண முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
ஆகவே பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டிக் கொள்ளுமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.ஆனாலும் காலம் இடை வெளியை நிரப்பும்.தேசம் தன் தலைமையை தீர்மானிக்கும்.
தொகுப்பு:-எஸ்.றொசேரியன் லெம்பேட்